ஒடிசாவில் உள்ள கட்டாக் மைதானத்தில் நேற்று இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நடைபெற்றது. இந்தியாவிற்கு மிகவும் முக்கியமான இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள். இதனால் கோபம் அடைந்த ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்களை மைதானத்திற்குள் வீசி கலாட்டாவில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிட ஆட்டம் தடைபட்டது. சில ரசிகர்களை வெளியேற்றிய பின் போட்டி தொடர்ந்து நடைபெற்றது.
இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்றாலும் கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்களின் உணர்வோடு கலந்து விட்டது என்றே கூறலாம். இதனால் வெற்றி பெற்றால் வீரர்களை ஓகோ என்று பாராட்டுவார்கள். அதே சமயம் தோல்வியடைந்தால் கடுமையாக விமர்சனமும் செய்வார்கள்.
பெரும்பாலான நேரத்தில் விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம்தான் என்று மைதானத்தில் இருக்கும் வீரர்கள் கவலை அல்லது சந்தோசத்துடன் வெளியேறுவதுண்டு. ஆனால், நேற்று ஒடிசாவில் ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்களால் தாக்குதல் நடத்தினார்கள். மைதானத்திற்கும், ரசிகர்களின் கேலரிக்கும் இடையே அதிகப்படியாக இடைவெளி விடப்பட்டிருந்ததால் பெரும்பாலான பாட்டில்கள் மைதானத்திற்குள் வரவில்லை.
இந்த கவலையளிக்ககும் சம்பவம் குறி்த்து இந்திய அணியின் கேப்டன் டோனி கூறுகையில் ‘‘நாங்கள் மோசமாக விளையாடியதால் ரசிகர்களிடம் இருந்து இதுபோன்ற எதிர்ப்பு வந்தது என்பது உங்களுக்கு தெரியும். ஆகவே, இந்த சமயம் அவர்களுடைய எதிர்ப்பை நீங்கள் ஏற்றுதான் ஆகவேண்டும். இது முதல் பாட்டில் வீசும்போது மட்டும்தான். ஆனால், பின்னர் ரசிகர்கள் கேளிக்கைக்காக தொடர்ந்து பாட்டில்களை வீசினார்கள். இந்த தேவையில்லாத எதிர்ப்பை நாங்கள் கட்டாயம் ஏற்றுக்கொள்ள முடியாது’’ என்றார்.
இதன் மூலம் நாம் சரியாக விளையாடாவிட்டால் ரசிகர்கள் கொந்தளிப்பது நியாயம்தான், அதனால் ஒவ்வொரு போட்டியிலும் வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என்று மறைமுகமாக வலியுறுத்துகிறார் டோனி.
இதற்கு முன் 1996-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் ஈடன் கார்டனில் இலங்கைக்கு எதிராக இந்தியா 252 வெற்றி இலக்கை நோக்கி சென்ற கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் இருந்தது. அதன்பின் 120 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டை இழந்தது. இதனால் ரசிகர்கள் கேலரியை தீயிட்டு கொளுத்தினார்கள். அதேபோல் 1999-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சச்சின் அவுட்டானதும் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

