மு.கா. தேசியப்பட்டியல்: ஒரு பேய்க்காட்டல் !

ஏ.எல்.நிப்றாஸ்(Virakesari)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தமக்கு கிடைக்கும் என்று அநேகமான ஊர்களும் தனிநபர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று இன்றுடன் இரண்டு மாதங்கள் முடிவடைகின்ற போதிலும், தற்காலிகமாக நிரப்பப்பட்ட தேசியப் பட்டியலுக்கு இதுவரைக்கு யாரொருவரும் நிரந்தரமாக அல்லது சுழற்சி முறையில் நியமிக்கப்படவில்லை. போகின்ற போக்கைப் பார்த்தால் ‘பொறுமைகாத்தல்’ என்பது ‘இலவு காத்தலாகவே’ வந்து முடியும் போலிருக்கின்றது.

தேசியப் பட்டியல் டீலிங் தொடர்பில் நிறைய உள்ளரங்கங்கள் நமக்கு கசிந்திருந்த போதிலும் குட்டையைக் குழப்பி விடக்கூடாது என்பதற்காகவும் ஊடக ஒழுக்கத்தை பேணும் முகமாகவுமே அவற்றை எழுதுவதை தவிர்த்து வந்தேன். ஆனால், மக்களுக்கு சில விடயங்களை சொல்லி தெளிவுபடுத்த வேண்டிய கடமையும் பொறுப்புள்ள ஒரு ஊடகத்திற்கு இருக்கின்றது என்ற அடிப்படையில் அது பற்றி எழுதவும் பேசவும் வேண்டியிருக்கின்றது. அதுதவிர, யாருக்கும் சேறு பூசுவதோ அல்லது யாரையும் கொண்டாடுவதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல என்பதை தடித்த எழுத்துக்களால் குறிப்பிட விரும்புகின்றேன்;.

போகுமிடமெல்லாம் எம்.பி.

கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் தேசியப் பட்டியலை முஸ்லிம் காங்கிரஸ் ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்தியது. இந்த நாட்டு முஸ்லிம் மக்களுக்கு அக்கட்சி செய்த சேவைகளையும் கட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் சாதனைகளையும் சொல்லி வாக்குக் கேட்க முடியாத ஒரு சூழல் இருந்தது. பிரதேச மத்திய குழுக்கள் சிதைவடைந்திருந்த நிலையில் கட்சியின் கட்டுக்கோப்பும் உடைவெடுத்திருந்தது. அதை விட முக்கியமாக ஒவ்வொரு ஊருக்குள்ளும் முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த இரண்டு, மூன்று முக்கியஸ்தர்கள் ஆளுக்காள் முரண்பட்டுக் கொண்டு அரசியல் செய்து கொண்டிருந்தார்கள். ஆதலால், தேசியப் பட்டியலை பராக்குக் காட்டியே மக்களிடம் வாக்குக் கேட்க வேண்டிய இக்கட்டான நிலைமை ஏற்பட்டிருந்தது.

மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற கணிசமான பிரதேசங்களில் தேசியப்பட்டியல் தருவதாக வாக்குறுதியளித்தார். அம்பாறையில், மட்டக்களப்பில், கம்பஹாவில், புத்தளத்தில் என பல இடங்களில் தேசியப்பட்டியல் தருவதாக பகிரங்க வாக்குறுதியை வழங்கினார். “தேசியப் பட்டியல் கேட்கின்ற மக்களுக்கு இல்லை என்று சொல்ல முடியாதுதானே” என்று அக்கட்சி சார்பில் ஒரு ரெடிமேட் விளக்கம் அளிக்கப்பட்டது. உண்மைதான். ஆனால் 02 தேசியப் பட்டியல் உறுப்புரிமைகளே கிடைக்கும் என்பது நன்றாக தெரிந்திருக்க. நான்கைந்து இடங்களில் சுமார் பத்துப் பதினைந்து பேருக்கு தேசியப்பட்டியல் ஆசையை ஊட்டுவதன் வினையைத்தான் கட்சி இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.

உண்மையில், யாருக்கு அல்லது எந்த ஊருக்கு தேசியப்பட்டியல் வழங்க வேண்டிய கடப்பாடு அதிகமாக இருக்கின்றதோ அந்த ஊருக்கு, அந்த நபருக்கு மட்டும் இம்முறை எம்.பி. தருவதாக உறுதியளித்திருக்க வேண்டும். மற்றைய ஊர்களுக்கு இனிவரும் காலங்களில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தருவதாக வாக்குறுதி அளித்திருக்கலாம். ஆனால் கட்சித் தலைமை அவ்வாறு செய்யத் தவறி விட்டது. இது பிற்காலத்தில் பாரிய சிக்கலை கொண்டு வரும் என்பது கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு தெரியும் என்றாலும் தலைவருக்கு நல்ல பிள்ளையாக தம்மை காட்டிக் கொள்வதற்காக அவர்கள் இந்த நடவடிக்கையை தடுக்காமல் இருந்து விட்டனர் என்றே கருத வேண்டியுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியானதும் மு.கா. தலைவர் ஹக்கீமின் வீடு நிரம்பி வழிந்தது. தீராத நோய்களை குணப்படுத்துவதற்கு ஒரு பரிகாரி இருக்கின்றாராம் என்று கேள்விப்பட்டு கிராமப்புற மக்கள் வேன் பிடித்துக் கொண்டு பரிகாரி வீட்டுக்கு செல்வது போல், போராளிகள் தலைவரின் வீட்டு வாசலில் தவம் கிடந்தனர். தலைவரும் உயர் பீடமும் திணறிப் போனது. யாரையும் பகைத்துக் கொள்ள முடியாது. அப்படிச் செய்தால் நிச்சயமாக அவர்களை றிசாட் பதியுதீன் என்கின்ற காந்தம் இழுத்துக் கொள்ளும். எனவே ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி இழுத்தடித்து அவர்களே “சீச்சி இந்தப் பழம் புளிக்கும்” என்ற நிலைமையை ஏற்படுத்துவதை தவிர ஹக்கீமுக்கு வேறு வழி இருக்கவும் இல்லை. 
இப்படியே இழுத்துக் கொண்டு போவோம் என்று தலைவர் சிலவேளை எண்ணியிருக்கக் கூடும். ஆனால் இது மு.கா.வின் சொந்த தேசியப்பட்டியல் அல்ல. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல். ஏனவே உரிய நேரத்தில் தேசியப் பட்டியலை தேர்தல் ஆணையாளருக்கு சமர்ப்பிப்பதற்காக மு.கா.வின் 02 பெயர்களை தருமாறு ஐ.தே.க. கேட்டுக் கொண்டது.

இந்த தேசியப்பட்டியல்கள் யாருக்கு வழங்கப்படுமோ என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, எதிர்பாராத இருவரை தேசியப்பட்டியலுக்குப் பெயரிட்டு அனுப்பி வைத்தார் ஹக்கீம். தனது சகோதரரும் ஊடக செயலாளருமான வைத்தியர் ஹபீஸ், சட்டத்தரணி சல்மான் ஆகிய இருவரின் பெயர்களும் தேசியப் பட்டியலுக்காக பிரேரிக்கப்பட்டதை கேள்வியுற்ற போராளிகள், கட்சிக்காரர்கள் ஆடிப்போய்விட்டனர்.

முன்னதாக முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐ.தே.க.வின் ஊடாக தேசியப்பட்டியலுக்கு ஐந்து பேர் பெயரிடப்பட்டு இருந்தனர். கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி, நிசாம் காரியப்பர், நஜா மொஹமட், டாக்டர் ஹபீஸ், சல்மான் ஆகியோரே அவர்களாவர். ஆனால் இதில் ஏனைய மூவரது பெயரையும் தேசியப்பட்டியலுக்கு முன்மொழியாமல் கிழக்கு மாகாணத்துக்கு வெளியில் வசிக்கும் இருவரது பெயரை பரிந்துரைத்தமை பல்வேறு கேள்விகளுக்கு இட்டுச் சென்றது.

பலர் தேசியப் பட்டியலுக்காக காத்துக் கொண்டிருக்கும் போது, கட்சியின் நேரடி அரசியலுக்கு அப்பாற்பட்ட இருவரை எம்.பி.யாக்கியது உடனடியாக ஜீரணிக்கக் கூடியதாக இருக்கவில்லை. இருப்பினும், கட்சித் தலைவர் சொன்ன காரணத்தில் ஒரு நியாயம் இருந்தது. அதாவது, “அவசரமாக இருவரது பெயரை கொடுக்க வேண்டியுள்ளது. எனவேதான் கொடுத்தோம். விரைவில் இவ்விருவரும் இராஜினாமா செய்வார்கள்” என்று அவர்கள் கூறியதை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

தலைமையின் தற்றுணிபு

ஆனாலும், இந்த தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பில் தலைவர் ஹக்கீம் கட்சியின் உயர் பீடத்தில் உள்ள மூத்த போராளிகளின் அனுமதியைப் பெறவில்லை என்பதை அவர்கள் தமக்குள் பேசிக் கொள்கின்றார்கள். அதாவது தலைவருக்கு ஆமா போடுகின்ற ஒரு சிலரை வைத்துக் கொண்டு இந்த இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. ஆமா போடுகின்றவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் - தலைவரிடம் ஏதாவது தேவை இருப்பவர்கள், அவரது அமைச்சில் பணி புரிபவர்கள், பிள்ளைகளுக்கு தொழில் எடுத்தவர்கள் என்று சொல்லப்படுகின்றது. இது உண்மையென்றால் தலைவரின் தீர்மானத்தை அவர்களால் எதிர்க்க முடியாதுதானே.

“மசூரா” (கூட்டு ஆலோசனை) அடிப்படையிலேயே கட்சியின் தீர்மானங்களை மேற்கொள்ளப்படுகின்றது என்று அடிக்கொரு தடவை கூறப்பட்டாலும், ஹபீஸ_க்கும் சல்மானுக்கும் தேசியப்பட்டியல் வழங்க தீர்மானிக்கப்பட்டமை கட்சியின் செயலாளருக்கு கூட தெரியாது என்பது எவ்வளவு ஆச்சரியமானது!
தலைவர் றவூப் ஹக்கீம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அனுப்பிய இரு தேசியப் பட்டியல் பெயர்களையும் பார்த்த அக்கட்சி முக்கியஸ்தர்கள் கட்சித் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் பார்வைக்கு அதனை ஒப்படைத்தனர். அதில் ஹசனலியின் பெயர் இல்லாததை அவதானித்த பிரதமர் ரணில் அது தொடர்பில் ஹக்கீமிடம் விசாரிக்குமாறு கூறியுள்ளார். இது குறித்து ஹக்கீமிடம் கேட்கப்பட்ட போது “இப்போதிருக்கின்ற நிலமையை கருத்திற் கொண்டு ஒரு மூலோபாய அடிப்படையில் இருவர் பெயரிடப்பட்டுள்ளதாக” அவர் விளக்கமளித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கடைசிக் கட்டம் வரைக்கும் மஹிந்தவுக்கு ஆதரவளிக்கும் முடிவில்தான் ஹக்கீம் இருந்தார் என்பது கட்சி முக்கியஸ்தர்களுக்கு தெரியும். அப்போது “நீங்கள் வராவிட்டால் நான் போய்விடுவேன்” என்று கூறி, ஐக்கிய தேசிய கட்சிப் பக்கம் மு.கா.வை இழுத்துவந்தவர் செயலாளர் ஹசனலி என்பது ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரியும். எனவே அவருக்கு எம்.பி. கிடைப்பதை அக்கட்சி பெரிதும் விரும்புவதாக ஐ.தே.க. முக்கியஸ்தர் ஒருவர் கூறினார்.

அதன் பின்னர் ரவி கருணாநாயக்க ஹசனலிக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து, “உங்களது பெயர் இந்த பட்டியலில் இல்லையே” என்று வினவியுள்ளார். அதற்கு ஹசனலி அலி கேட்டாராம், “அப்படியென்றால் தேசியப் பட்டியலை அனுப்பி விட்டார்களா? யார் யார் பெயரிடப்பட்டுள்ளனர்?” என்று. ஏன் உங்களுக்கு தெரியாதா? என்று ஹசனலியிடம் ரவி கருணாநாயக்க கேட்ட போது, கட்சியின் உள்ளரங்கம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக செயலாளர் மழுப்பினாராம். இதிலிருந்து பல விடயங்கள் புரிகின்றன. ஹசன் அலிக்கு தேசியப் பட்டியல் கொடுக்காமல் விடுவது வேறு விடயம். ஆனால் யாருக்கு தேசியப்பட்டியல் வழங்குவது குறித்த இறுதி முடிவில் கட்சியின் செயலாளர் என்ற அடிப்படையில் அவர் மற்றும் மூத்த உறுப்பினர்களின் பங்குபற்றுதல் இருந்திருக்க வேண்டும். இது உறுதியான ஒரு புறக்கணிப்பாகும்.

தேசியப் பட்டியல் வழங்கப்பட்டிருக்கும் சல்மான் எம்.பி., மறைந்த தலைவர் அஷ்ரஃப் காலத்தில் கட்சிக்குள் வந்தவர். முன்னர் ஒரு தடவை தேசியப்பட்டியலை இராஜினமா செய்து கொடுத்திருக்கின்றார். அதேபோல் டாக்டர் ஹபீஸ் மிகவும் மென்மையான, நல்ல மனிதர். அவரது மனம் நோகாமல் இந்த கட்டுரையை எழுத வேண்டுமென்று; நினைக்குமளவுக்கு என்னுடன் ஒரு சகோதரனை போல நெருக்கமானவர். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, “இது எனக்கான பதவியல்ல. தற்காலிகமான அமானிதம்” என்று உறுதியாக சொன்னார். எனவே தலைவர் கேட்டுக் கொண்டால் மறுகணமே அவர் இராஜினாமா செய்வார் என்பதில் ஐயமில்லை.

ஆனால், இங்கு பிரச்சினை இதுவல்ல. “தலைவர் ஹக்கீம் தனக்கு நம்பிக்கையான இருவருக்கு தேசியப்பட்டியல் வழங்கியிருக்கின்றார்” என்ற வசனம்தான் சர்ச்சைக்குரியது. அப்படியென்றால் பெயர் பிரேரிக்கப்;பட்ட ஏனைய மூவரும் நம்பிக்கை அற்றவர்களா? அல்லது நம்பிக்கை குறைந்தவர்களா? என்ற கேள்வி இங்கு எழுகின்றது. தலைவர் அஷ்ரஃபின் காலத்தில் இருந்து அதாவது ஹக்கீமுக்கு முன்பிருந்தே கட்சிக்காக பல தியாகங்களைச் செய்த ஹசனலி, நிசாம் காரியப்பர் ஆகியோரை விட மேற்குறிப்பிட்ட இருவரும் தலைவரின் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்று கூறுவதை என்னவென்று சொல்வது.

அப்படியென்றால் நம்பிக்கை இல்லாதவர்களை ஏன் தேசியப் பட்டியலில் தலைவர் போட்டார் என்ற கேள்விக்கு விடையளிக்க வேண்டும். ஹசனலியையும் நிசாம் காரியப்பரையும் விசுவாசமானவர்களாக கருதாமை உண்மையில் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பல்ல. மாறாக, ஒட்டுமொத்த மூத்த போராளிகளின் விசுவாசத்தை கேலிக்குள்ளாக்கிய செயலாகும். இந்த அறிவிப்பினால், உண்மையாகவே தலைவர் மீதான, கட்சிமீதான பலரது விசுவாசமும் நம்பிக்கையும் தற்போது குறைவடைந்திருக்கின்றது என்பது காலப்போக்கிலேயே வெளியில்வரும்.

இவ்வாறு ஓரிருவரின் தற்றுணிபில் வழங்கப்பட்ட தேசியப்பட்டியல்தான் இப்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கின்றது. சரியான கூட்டு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தால், இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினையை தீர்ப்பதற்கு கட்சியில் உள்ள எல்லோரும் முன்வந்திருப்பர். ஆயினும் தலைவரே தீர்மானமெடுக்கும் ஏக அதிகாரத்தை கொண்டிருப்பதால் அவரது தலையில் பாரத்தைப் போட்டுவிட்டு நடப்பது நடக்கப்பட்டும் என்று இருக்கின்றனர் மு.கா. உறுப்பினர்கள்.

மக்களும் சட்டமும்

தேசியப்பட்டியல் பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. தேசியப் பட்டியல் வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட நபர்களும் பிரதேசங்களும் இறுதி முடிவுகாக காத்திருக்கின்றன. அதுமட்டுமன்றி, கட்சியின் வளர்ச்சியை கருத்திற் கொண்டு சில பிரதேசங்களுக்கு தேசியப்பட்டியல் வழங்குவது குறித்தும் மு.கா. தலைமை கவனத்தில் எடுத்திருக்கின்றது. இரண்டே இரண்டு தேசியப் பட்டியலை பல கூறுகளாக பங்கு போட்டாலும் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. தலைவர் மிகுந்த தர்ம சங்கடத்திற்குள் சிக்குண்டுள்ளார் என்பது தெளிவாக தெரிகின்றது.

தேசியப் பட்டியலுக்காகவோ எம்.பி.பதவிக்காகவோ இதற்கு முன்னர் ஒருக்காலும் முஸ்லிம் மக்கள் குறிப்பாக கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் இந்தளவுக்கு தமக்கிடையே கருத்து முரண்பட்டது கிடையாது. வேற்று மதத்தவரான (ஆனால் சுஹைரை விட நம்பிக்கையுள்ளவரான) அசித்த பெரேராவுக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்ட போது முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் அஷ்ரஃபுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியது கிடையாது. கண்டியைச் சேர்ந்த மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் அம்பாறையில் வந்து போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாவதை இப்பகுதி மக்கள் மாற்றாந்தாய் மனப்பாங்குடன் பார்க்கவில்லை.

அதேபோல், தேசியப் பட்டியல் வேட்பாளராக நிந்தவூரைச் சேர்ந்த ஒருவர் பெயரிடப்பட்டிருக்கும் நிலையில் இன்னுமொருவருக்கு அதிக விருப்பு வாக்குகளை மக்கள் வழங்கியிருக்கின்றார்கள் என்றால் அவர்கள் ஒரு ஊரில் இரண்டு எம்.பி.க்கள் உருவாவது பற்றி சிந்திக்கவில்லை என்றுதானே அர்த்தம். ஊருக்கொரு எம்.பி. வேண்டுமென்ற எண்ணமோ அதில் இந்த குறிப்பிட்ட நபர்தான் பதவி வகிக்க வேண்டுமென்ற தன்னலமோ மக்களுக்கு கிடையாது என்றே கணிக்க வேண்டியிருக்கின்றது. 
ஆனால், இப்போது வேறு ஒரு ஊர்க்காரனுக்கு வாக்களிப்பதை பக்கத்து ஊர்க்காரனுக்கு தேசியப்பட்டியல் கிடைப்பதை எதிர்க்கும் அளவுக்கு நிலைமைகள் மாறியிருக்கின்றன.

முன்னொரு காலத்தில் சிங்களவர் ஒருவருக்கு தேசியப் பட்டியலை கொடுத்து அழகு பார்த்த இந்த சமூகம் இன்று பக்கத்து ஊர் காரனுக்கு, அடுத்த மாவட்டத்தில் உள்ள முஸ்லிமுக்கு தேசியப்பட்டியல் சென்று விடக் கூடாது என்பதற்காக கடுமையாக பாடுகின்றது. பாராளுமன்ற கதிரைக்கு ஆசைப்படுகின்ற சிலர் இதற்காக நிறைய செலவு செய்கின்றார்கள். அப்படியென்றால், இதற்கு காரணம் யார் யார் என்பதை மக்கள் அறிவார்கள்.

எப்படி இனவாதம் பேசி தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் இரு சமூகத்தையும் பிளவுபடுத்தினார்ளோ அதுபோல பிரதேசவாதம் பேசிப் பேசி மக்களை உசுப்பேற்றி விட்ட மூன்றாந்தர அரசியல்வாதிகளே இந்த மாற்றத்திற்கு காரணமாகின்றார்கள். தமக்கு எம்.பி. கிடைக்க வேண்டுமென்ற பேராசை மு.கா.வில் அங்கம் வகிக்கும் கிட்டத்தட்ட எல்லா உறுப்பினர்களுக்கும் ஏற்பட்டு விட்டது. அதனடிப்படையில் நமது ஊருக்கு ஒரு எம்.பி. வேண்டும் என்ற கோஷத்தை மக்களின் உணர்வுகளுடன் கலந்து விட்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு ஊருக்கும் வரும் தலைவர் அதற்கான வாக்குறுதியையும் அள்ளி வீசினார். போராளிகளின் மனதில் தேசியப்பட்டியல் வேள்வி எரியத் தொடங்கியது, இன்று அதுவே தலைவரின் கால்களை சுடத் தொடங்கியிருக்கின்றது.

தேசியப் பட்டியலை பகிர்ந்தளிப்பதில் தலைவர் மிகவும் சிரமப்படுகின்றார். இதில் ஒருவரை திருப்தி படுத்தினால் மற்றயவரை கட்சி இழக்க வேண்டிய நிலையே இருக்கின்றது. ஆனால் சில பிரதேசங்களுக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட வேண்டும் என்பதில் தலைவரும் உறுப்பினர்களும் உறுதியாக இருப்பதாக தெரிகின்றது. உதாரணத்திற்கு அட்டாளைச்சேனையை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இதில் ஒரு சட்டச் சிக்கல் இருக்கின்றது. அதாவது, தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்ட அல்லது தேர்தலில் தோல்வியுற்ற நபர்களை தவிர வேறு எவருக்கும் தேசியப்பட்டியல் வழங்குவதில் சட்ட வரையறை உள்ளது.

இது தொடர்பாக 1988ஆம் ஆண்டு அப்போதைய சபாநாயகரால் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் ஒரு வசனம் கையினால் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அவ்வசனத்தை சவாலுக்கு உட்படுத்த இயலாது என்று டியு குணகேசர தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அதேபோல், பெயர் குறிப்பிடப்படாத நபர்கள் தேசியப் பட்டியலில் நியமிக்கப்படுவது தொடர்பில் முன்னமே சட்ட நடவடிக்கையில் இறங்கியிருந்த மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமானது, யாராவது அவ்வாறு நியமிக்கப்படுகின்றார்களா? என்று பார்த்துக் கொண்டிருக்கின்றது.

உண்மையாகவே அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் கொடுக்க வேண்டுமென்று தலைவர் கருதியிருந்தால், தேசியப்பட்டியலில் சல்மான் அல்லது ஹபீஸின் பெயருக்கு பதிலாக அட்டாளைச்சேனையை சேர்ந்த ஒருவரின் பெயரை கட்டாயமாக போட்டிருக்க வேண்டும். ஆயினும், இந்த தடைகளை எல்லாம் தாண்டி அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் தருவது என்று முடிவெடுத்தாலும் யாருக்கு கொடுப்பது என்ற பிரச்சினை இருக்கின்றது. ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது இரண்டு மு.கா. பிரிவுகளை ஹக்கீம் பிரித்தாளுகை செய்து வருவதால், ஒரு தரப்புக்கு கொடுத்தால் மறுதரப்பானது கட்சி மாறிவிடக்கூடிய ஆபத்து இருக்கின்றது. இந்நிலைமை அட்டாளைச்சேனைக்கு மட்டுமே உரிய பண்பல்ல. தேசியப்பட்டியல் கேட்கும் பல பிரதேசங்களின் யதார்த்தம் இதுதான்.

எனவே, இவற்றை எல்லாம் சமாளித்து தேசியப் பட்டியல்களை சரியாக பகிர்ந்தளிப்பதிலேயே தலைமைத்துவத்தின் முதிர்ச்சியும் பக்குவமும் சாணக்கியமும் தங்கியிருக்கின்றது. எல்லா ஊர்களிலும் ஏகப்பட்டோர் தேசியப் பட்டியல் கேட்டு அழுத்தம் கொடுக்கின்றார்கள்எனவே இப்போது முடிவெடுக்க முடியாமல் இருக்கின்றது. யாருக்காவது இருவருக்கு கொடுத்தால் இன்னும் இருபது பேர் முரண்படுவார்கள் என்று தலைவர் ஹக்கீம் இப்போது சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றார். அது உண்மையே. ஆனால், இரண்டு மாதங்கள் கடந்த பின்னும் தேசியப்பட்டியலுக்காக காத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு ஊரையும், நபரையும் பேய்க்காட்டிக் கொண்டு இப்படியே காலத்தை இழுத்துச் சென்றுவிட முடியாது.

‘உருப்படிகளை’ விட, ‘உருப்படியானவர்களால்’ தேசியப்பட்டியல் நிரப்பப்பட வேண்டும். வேறெந்த பொல்லாப்புமில்லை.

 (17.10.2015Virakesari)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -