நிஸ்மி-
நாற்று மேடை பயிர்ச் செய்கையாளர்களுக்கு இலவசமாக நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கல்.
கல்லோயா நவோதய திட்டத்தின் கீழ் நாற்று மேடை பயிர்ச் செய்கையாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இத் திட்டத்தின் ஒரு அங்கமாக நாற்று மேடை பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இலவசமாக நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அம்பாரை மாவட்ட விவசாய திணைக்களமும் நீர்ப்பாசன திணைக்களமும் இணைந்து நடாத்தும் இச் செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக அக்கரைப்பற்று மேற்கு விவசாய பிரிவில் நாற்று மேடை பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இலவசமாக நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று அக்கரைப்பற்று 02ம் கட்டையில் இடம் பெற்றது.
அக்கரைப்பற்று மேற்கு விவசாய போதனாசிரியர் இஸற்.ஏ.எம்.பயாஸ் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் அம்பாரை மாவட்ட உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.ஏ.எப்.ஸனீர், நீர்ப்பாசன திணைக்கள அக்கரைப்பற்றுப் பிரிவு நீர்ப்பாசனப் பொறியியலாளர் ஐ.மயூரன், அக்கரைப்பற்று ஆலிம் நகர் விவசாய போதனாசிரியர் ஏ.ஜி.பிர்னாஸ் ஹரீஸ், தொழில்நுட்ப உதவியாளர் எம்.ஐ.றியாஸ் உட்பட விவசாய போதனாசிரியர்கள், விவசாயப் பிரதிநிதிகள், நாற்று மேடை பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் முதலியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அம்பாரை மாவட்ட உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.ஏ.எப்.ஸனீர், நீர்ப்பாசன திணைக்கள அக்கரைப்பற்றுப் பிரிவு நீர்ப்பாசனப் பொறியியலாளர் ஐ.மயூரன் ஆகியோர் நாற்று மேடை பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இலவசமாக நீர் இறைக்கும் இயந்திரங்களை வழங்க, விவசாய போதனாசிரியர்களான ஏ.ஜி.பிர்னாஸ் ஹரீஸ் மற்றும் இஸற்.ஏ.எம்.பயாஸ் ஆகியோர் நாற்றுக்களையும் வழங்கி வைத்தனர்.


