எம்.எம்.ஜபீர்-
கிழக்கு மாகாணத்தின் கல்வித் தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது தொடர்பாக முதலமைச்சரும், கல்வி அமைச்சரும், உறுப்பினர்களும் இணைந்து கூடிய கவனம் செலுத்தி வருகின்றோம். பல்வேறு சமூகங்கள் பல்வேறு அரசியல் கட்சிகள் எந்த பேதமும் அற்ற முறையில் இந்த கிழக்கு மாகாணத்தினை முன்னேற்ற பாதையில் இட்டு செல்வதற்காக ஒரு தேசிய மாகாண அரசை உருவாக்கி செயற்பட்டு வருகின்றோம்.
அதிலே பல கட்சியை சேர்ந்தவர்கள் இருக்கின்றார்கள். இவ்வளவு காலமும் போராட்டத்தில் ஈடுபட்ட சகோதர சமூகமான தமிழ் சமூகம் தற்போது ஆட்சியின் பங்காளர்களாக வந்திருக்கின்றனர். அதிலும் மிக முக்கியமான கல்வி அமைச்சு பொறுப்பு சகோதர தமிழ் சமூகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த கல்வி அமைச்சு திறமையான ஒருவரின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் இறக்கமம் மதீனா வித்தியாலயத்தில் நேற்று சனிக்கிழமை (03) நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
இறக்காமம் மதீனா வித்தியாலத்தின் அதிபர் எம்.ஐ.ஜௌபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம், இறக்காமம் கோட்டக் கல்வி அதிகாரி யூ.எல்.மஹ்முத்லெப்வை, ஆசிரிய ஆலோசகர் ஏ.அஸீஸ், பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மாஹிர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
கல்வி அமைச்சரும் கல்வி சமூகத்தின் நிலையை நன்கு அறிந்தவர், கல்வி துறையில் பாண்டித்தியம் பெற்றவர். மாகாண கல்வி பணிப்பாளராக இருந்தவர் அவருடன் சேர்ந்து கல்வி மேம்பாடு தொடர்பான வேலைகளை செய்வது மிகவும் இலகுவாக உள்ளன. கல்வி அமைச்சருடன் சேர்ந்து கிழக்கு மாகாணத்திற்கும் குறிப்பாக அம்பாரை மாவட்டத்திற்கும் கல்வி தரத்தை உயர்த்த என்னால் முடியுமான உதவிகளை பெற்றுத் தருவேன்.
சிறுவர்கள் தான் நாட்டின் எதிர்கால பொக்கிசங்கள், இந்த சிறார்கள் தான் நாளை நாட்டை ஆட்சி செய்யப் போகின்றவர்கள் இவர்கள் எதிர்காலத்தில் அறிஞர்களாக, அறிவாளிகளாக, அரசியல் வாதிகளாக என்று சமூகத்தின் பல்வேறு பதவிகளைப் பெற்று சமூதாயத்தினை வழிநடத்தக் கூடியவர்களாக இருகின்றார்கள். இவர்களை பாதுகாக்க வேண்டியது பெற்றோர்கள், ஆசிரியர்கள் சமூகம், அரசாங்கம் போன்ற எல்லோரினதும் கடமையாகும்.
அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் பல்வேறு துர்ப்பாக்கிய சம்பவங்களின் பின்னர் சிறுவர்களை பாதுகாக்கின்ற அமைப்புகள் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு கொடுக்கப்படுகின்ற தண்டனை போதாது என்று அரசாங்கத்திற்கு பல்வேறு அழுத்தங்களையும், ஆலோசனைகளை வழங்கியிருக்கின்றார்கள்.
இதன் அடிப்படையில் இந்த சிறுவர் துஸ்பிரயோகத்திக்கு மரண தண்டனை சட்டத்தை கொண்டு வருவதற்கான சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து மிக விரைவில் எமது நாட்டில் மரண தண்டனை சட்டத்தை அமுல்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.
இதன்போது போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டதுடன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் பாடசாலை சமூகத்தினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.








