கட்சியில் இருந்து விலக்கியமைக்கு எதிராக ஜெமீல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்...!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து தன்னை விலக்கியமைக்கு எதிராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். 

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து விலகி அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து, அக்கட்சிக்காக பிரசாரப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். 

அத்துடன் அவர் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டதுடன் அக்கட்சி சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலிலும் இடம்பெற்றிருந்தார். 

இதன் காரணமாக கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும் அக்கட்சியில் அவர் வகித்து வந்த அனைத்து பதவிகளில் இருந்தும் அவரை விலக்குவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அதியுயர் பீடக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் அது தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதன் பிரகாரம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் நீக்கம் செய்யப்படுவதுடன் அவரது வெற்றிடத்திற்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ரஸ்ஸாக் ஜவாதை நியமிப்பது எனவும் முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்திருந்தது. 

இந்நிலையிலேயே தன்னை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கியமை சட்டத்திற்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி, ஏ.எம்.ஜெமீல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். 

இம்மனுவில் தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். 

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், அந்த சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவராகவும் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளராகவும் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளராகவும் பதவிகளை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -