இனவாதம் என்பது...
1. பல்லின கூறுகளை ( கலாசாரம்/சமயம்/மொழி/நிறம்) பின்னணிகளை கொண்டபகுதிகளில் ஒரு குறித்த பிரிவினர் ஏனைய பிரிவினர்களை விட உயர்ந்தோராக தீர்மானித்துக் கொள்ளல் அல்லது வேற்றினத்தினை தாழ்வாக கருதுவதை குறிக்கும்.
2. அல்லது இனச்சுத்திகரிப்பிற்கான ஒரு கொள்கை ; அரசாங்க முறைமை
3. அல்லது ஒரு இனம் இன்னுமாரு இனத்தின் மீது கொண்ட வெறுப்புணர்ச்சி அல்லது சகியாமை
இப்போது விடயத்திற்கு வருகிறேன்.
இன்று உலகில் அதிகம் பேசுபொருளாக காணப்படும் ஒரு தலைப்பே இனவாதம் என்பதாகும். ஆனால் மேலுள்ளவாறு அதன் கருத்துப்பொதிவினை உணராமலேயே அதை அதிகமானோர் முழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
இனவாதத்திற்கும் இனப்பாதுகாப்பு வாதத்திற்கும் நீண்ட வேறுபாடு உண்டு. உலகின் இரண்டு அணியினர் பொதுவான நீதிகளிற்காக போராடும்போது அது பொதுப்பிரச்சினை. ஆனால் அவர்களில் ஒரு சாரார் குழுமத்தின் பெயரால் அநீதிக்குள்ளாக்கப்படும்போதே அங்கு இனவாதம் தோன்றுகிறது.
இனங்கள் சமயம்-மொழி-நிறம்-கலாசாரம் போன்ற கூறுகளில் ஒன்றால் அல்லது பலவற்றால் பிரிக்கப்படலாம். ஆனால் இந்தப் பிரிப்புக்கள் தத்தம் குழுமங்களின் தனித்துவங்களை அடையாளப்படுத்தி அவற்றை ஒழுகுவதை நோக்காக கொள்ளவேண்டுமே தவிர இன்னொரு குழுமத்தை தாழ்த்தி விடுவதற்கு முனையக் கூடாது.
இனவாதம் எவ்வாறு இனப்பாதுகாப்பு வாதத்தில் நின்று வேறுபடுகிறது? என்று உதாரணத்துடன் விளக்குகிறேன்.
இலங்கை நாடு பெரும்பாலும் நான்கு மதங்கள் கொண்டமைந்த பல்லின நாடாகும். இம்மதங்கள் யாவும் தனித்துவ அடையாளங்களைக் கொண்டவை. இருப்பினும் பௌத்த மத சமுகத்தை தவிர்ந்த ஏனையவை இலங்கையின் 30% சனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சிறுபான்மை இனங்களாக கருதப்படுகின்றன.
இங்கே பௌத்த இனத்து சகோதரர்கள் தமது இனத்திற்கே இந்த நாடு சொந்தம் என்றும் அதனை பாதுகாக்க வேண்டும் என்ற கோஷங்களுடன் ஏனைய மதத்தினரை அடக்கியாள முனைகின்றபோது அதைத்தான் தெளிவாக (மேலுள்ள வரைவிலக்கணங்களை கொண்டு) இனவாதம் என்று கூறமுடியும்.
இவ்வாறன சந்தர்ப்பத்தில் சிறுபான்மை குழுமங்கள் அந்த அடக்குமுறையை எதிர்கொள்வதற்கு தம்மை தயார்படுத்தியே ஆகவேண்டும்.
எவ்வாறு எதிர்கொள்வது???
ஆம் ஒரு இனம் இன்னொரு இனத்தினை எந்த அடையாளத்தினை கொண்டு ஒடுக்க முனைகிறதோ அதே அடையாளத்தின் மூலமே அடுத்த இனமும் திரண்டு எழுதல் வேண்டும். உதாரணமாக பௌத்த இனத்தின் குழுவொன்று தமிழ் இனத்தினற்கெதிராக எழுகின்றபோது " தமிழர்களை பாதுகாப்போம்" எனும் பெயரில்தான் தமிழர்கள் கிளர்ந்தெழ வேண்டும். இவ்விடத்தில் தமிழ்மக்கள் இனவாதிகள் என்று அர்த்தப்படுத்தல் பிழையானதாகும்.
ஆனால் பௌத்த மக்கள் எதுவித பாரபட்சமும் இல்லது ஏனைய இனத்தவரை சகிப்புத்தன்மையுடன் கருதி செயற்படுகின்ற சூழலிலே ஏனைய இனத்தவர் தமது தரப்பினரை பலப்படுத்திக்கொள்ளும் நோக்குடன் பிரச்சினைகளை தமது இனத்தின் பெயரால் கிளப்பினால் அது இனவாதம் ஆகும்.
ஆகமொத்தத்தில் எந்த நோக்கத்துடன் இனத்தின் அடையாளம் பாவிக்கப்படுகிறதோ அதனைக் கொண்டே இனவாதாமா? இனப்பாதுகாப்பு வாதமா? என்பதை அர்த்தப்படுத்த முடியும்.
அந்த அடிப்படையில் சிங்களவர்களின் வழிமுறைகளிலும் தமிழர்களின் போராட்டத்திலும் முஸ்லிம்களின் சாத்வீக போராட்டத்திலும் இனவாதம் உள்ளதா என நோக்கும்போது...
சிங்கள இனத்தில் 0.15% குழுவினர்கள் " பௌத்தம் காப்போம்" என்ற தொனிப்பொருளில் ஏனைய மதத்தினருக்கெதிராக மேற்கொள்ளும் வன்முறைகள் இனவாதம் என்பது தெளிவாகிறது. தமிழ் போராளிகள் தமது சமுகத்தை காக்கும் நோக்கில்தான் போராட முனைந்தாலும் சில வேளைகளில் அநீதியாக முஸ்லீம்களை தாக்கிய நடைமுறைகளில்தான் அவர்களின் போராட்டம் இனவாதம் பெற்றது. அதுவரை சிங்கள அரச பொறிமுறைகள் தமிழ் மக்களை அநீதிப்படுத்தும் போதெல்லாம் அதற்கெதிரான தமிழ் கிளர்வுகள் நீதியானவையே.
முஸ்லிம் பிரதிநிதிகள் தமது அரசியல் இருப்புக்களுக்காக மட்டும் "முஸ்லிம் சமுகம் - இஸ்லாம்" என்றெல்லாம் கோஷமிடுவதும் சந்தர்ப்பவாதமாக இனத்தின் பெயரால்மக்களை தூண்டிவிடுவதும் இனவாதம்தான். ஆனால் முஸ்லிம்களின் அடையாளங்களை மற்றும் மத உரிமைகளை இன்னொரு இனம் தடுக்க முனைகின்றபோது முஸ்லிம்கள் தாமாக கொதித்தெழுவது இனத்தற்காப்பு வாதமாகும்.
இன்று நிலைமைகள் சற்று தாமதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இலங்கையில் இனவாதம் இல்லாதொழிக்கப்படுவதற்கான ஆரம்பங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா?
( இதற்கான ஆய்வினை விரைவில் எதிர்பாருங்கள்)
S.M.AL AMEEN-SLAS-
