செய்தியாளர்- அஸ்மி
அன்பின் தலைவர் அவர்களே !
அன்பின் தலைவர் அவர்களே !
உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக -
உங்கள் உடல் தேகாரோக்கியத்துக்காகவும்- எதிர் கொண்டுள்ள அழுத்தங்கள் அகலவும் ஆண்டவனை பிரார்த்திக்கிறோம் -
இந்த பகிரங்க மடல் ,மூலமாக மட்டக்களப்பு மண்ணை நேசிக்கும் இளைஞ்சர்களின் ஆதங்கத்தையும் எதிர் பார்ப்பையும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம் - இதை தலைமைத்துவத்தை குறை காணும் ஒன்றாகவோ , கட்சியின் தீர்மானத்தை விமர்சிக்கும் ஒன்றாகவோ நீங்கள் ஒரு போதும் கருத மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது -
நாட்டில் ஊழல் அற்ற நல்லாட்சி என்ற கோஷம் எழுச்சி பெற்று புதிய நம்பிக்கை அளிக்க கூடிய ஒரு அரசு அமையப்பெற்றுள்ளது - இறைவன் உதவியால் எமது கட்சி பலம் மிக்கதாக இந்த தேர்தலின் மூலமாக எழுச்சி பெற்றுள்ளது , ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பல இடங்களில் போட்டி இட்டாலும் 7 ஆசனங்களை மொத்தமாக எமது கட்சி கொண்டமைந்து தேசிய அரசில் அங்கம் வகிக்கின்றது - அல்ஹம்துலில்லாஹ் -அந்த வகையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற முஸ்லிம்களின் தேசிய கட்சிக்கு உரித்துடையதாக - அடையாளமாக இருக்கும் ஒரே ஒரு ஆசனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தான் பெறப்பட்டுள்ளது - -முஸ்லிம்களின் தனித்துவத்தையும் அடையாளத்தையும் முழு தேசியத்துக்கும் பறை சாற்றும் வண்ணம் முஸ்லிம்களின் தனித்துவக் கட்சியின் அடையாள உறுப்பினரும் மாவட்டத்தில் பெரும்பான்மை வாக்கை பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவான அலி சாகிர் மௌலானா அவர்களுக்கு ஏன் அமைச்சுப் பதவி வழங்க வேண்டும் என்ற எங்களின் நியாயமான கோரிக்கையை தெளிவு படுத்த மட்டக்களப்பில் கட்சிக்கும், மௌலானா அவர்களுக்கும் வாக்களித்தவர்கள் என்ற உரிமையில் உங்களோடு கருத்தாட விழைகிறோம் ,இது தலைமைத்துவத்தின் முடிவை கொச்சைப் படுத்தும் ஒரு விடயம் அல்ல - மாவட்ட இளைஞ்சர்களின் ஒரு நியாயமான கோரிக்கையே
மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த சவால்களுக்கு மத்தியில் எமது கட்சி பெற்றுக் கொண்ட ஆசனமானது மிகவும் அரசியல் அனுபவம் கொண்ட ஆளுமை மிக்க ஒன்றாக இருக்கிறது - தேசிய அரசுக்கு உயிர் கொடுத்த அந்த ஒரே ஒரு ஆசனத்துக்கு ஒரு பிரதி அமைச்சை கொடுக்குமாறு நாங்கள் கோருவதில் என்ன தவறு இருக்கிறது - மட்டக்களப்பு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பிற்கு நீங்கள் என்ன பதிலைத் தர போகிறீர்கள் -
யாரின் பதவியையும் தட்டிப் பறித்து தாருங்கள் என்று நாங்கள் கோரவில்லை - எமது மாவட்ட அபிவிருத்திக்கு ஒரு பிரதி அமைச்சை தாருங்கள் என்று தான் கோருகிறோம் - அல்லது எதற்காக? மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அமைச்சு தர முடியாது என நீங்கள் முன் வைக்கும் நியாயமான காரணத்தையும் எதிர் பார்க்கிறோம்
வாக்களித்த முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட ஆதரவாளர்களை திருப்திப் படுத்தும் வகையில் நீங்கள் எதைக் கொடுத்து அலங்கரிக்க போகிறீர்கள் ? என்ற எண்ணம் மேலோங்க பலத்த எதிர்பார்ப்புடன் எங்களின் கோரிக்கையை உங்களுக்கு முன் வைக்கிறோம் - இதை கருத்திட் கொள்வதும் - புறக்கணிப்பதும் தலைமைத்துவத்தின் கையில் உள்ளது - உங்களின் நியாயமான எந்த தீர்மானத்திட்கும் நாம் கட்டுப்படுவோம் என்பதை முதலிலே சொல்லியவர்களாக எங்களின் நியாயத்தின் சில பாகங்களை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் - இதில் ஏதும் பிழைகள் இருப்பின் அதற்கான மன்னிப்பையும் கேட்டுக் கொள்கிறோம் -
அன்பின் தலைவர் அவர்களே !
உங்களுக்கு தெரியும், மட்டக்களப்பில் தேசியப் பட்டியல் ஆசனத்தையும் சேர்த்து மொத்தம் 3 முஸ்லிம் ஆசனங்கள் தற்போது உள்ளன - அதில் மௌலானா எனும் ஆசனம் மட்டுமே முஸ்லிம் காங்கிரசின் நேரடி ஆசனம் ஆகும் -அடுத்த முஸ்லிம் பிரதிநிதிகளாக அங்கத்துவம் பெற்றுள்ள 2 பேரும் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரானவர்கள் - முஸ்லிம் காங்கிரசை அழிக்க முயல்பவர்கள் என்ற வாதம் முஸ்லிம் காங்கிரசின் மாவட்ட ஆதரவாளர்கள் மத்தியில் நிலவுகின்றது -ஏன் நீங்கள் கூட இவர்கள் பற்றி பகிரங்கமாக கூட்டங்களில் பேசி இருக்கிறீர்கள் - அதற்காக அவர்களை விமர்சிக்கும் நோக்கம் எமக்கு கிடையாது ,தற்போது அவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் கிடைப்பது உறுதியாகி உள்ளது ,அவர்களும் அமைச்சுப் பதவிகள் மூலமாக மக்கள் பணிகளை செய்யப் போகிறார்கள் - அந்த நேரத்தில் முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட ஆதரவாளர்கள் அதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதே எமக்கு முன் தற்போது இருக்கும் சவாலும் எதிர் பார்ப்பும் ஆகும் , இதன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மிகவும் அதிருப்தி அடைந்த நிலையினை எதிர்கொள்ளுவதுடன் அபிவிருத்தி அரசியலில் அள்ளுண்டு போய் சில வேளை அது நமது கட்சியை எதிர் காலத்தில் பலவீனம் அடையச் செய்யலாம் -ஆகவே இந்த நிலைமையை சமாளிக்கவும் - மாவட்ட ஆதரவாளர்களை திருப்தி செய்து அவர்களை கட்சியின் பால் அழைக்கவும் கட்சியின் ஒரே ஒரு மாவட்ட பிரதிநிதியாக தெரிவாகியுள்ள அலி ஸாகிர் மௌலானா இற்கு அமைச்சுப் பதவி ஒன்றை கொடுப்பதே சிறந்தது -
நாங்கள் யாரின் அமைச்சையும் தட்டிப் பறித்து தாருங்கள் என்று கோரவில்லை, அத்துடன் முஸ்லிம் காங்கிரசுக்கு ஒரே ஒரு அமைச்சுப் பதவி தான் கிடைக்கும் என்று இருந்தால் அதனை அம்பாறைக்கு வழங்காமல் எங்களுக்கு தாருங்கள் என்று கேட்பது அநாகரிகம் என்பதை நன்கு உணர்ந்த இளைஞ்சர்களாக நாங்கள் இருக்கிறோம் , இந்த நிலையில் கட்சிக்கு 2 பிரதி அமைச்சுக்கள் கிடைக்க போகிறது , அதில் ஒன்றை எமது மாவட்டத்துக்கு தாருங்கள் என்று கேட்பது தவறாக இருக்குமா ?
மாவட்டத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் அம்பாறைக்கும் எங்களுக்கும் தாருங்கள் என்று தானே நாங்கள் கேட்கிறோம் எங்களின் குரலை ஏன் நியாயமாக நோக்க மாட்டீர்களா ?
தலைமைத்துவம் தன் சமத்துவத்தை காட்ட சமனாக நிச்சயம் பங்கிட்டு கொடுக்கும் என்று நம்புகிறோம் - ஆகவே எமது கோரிக்கை நியாயம் என்பதால் வெற்றி பெற்ற மௌலானா அவர்களுக்கு அமைச்சுப் பதவியை கொடுங்கள் என்று தானே இளைஞ்சர்களாகிய நாங்கள் கேட்கிறோம் -
அத்துடன் தேர்தல் நேரத்தில் ஏறாவூரில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றிலே வைத்து - மௌலானா ஒரு சிறந்த அரசியல்வாதி அவரை வாக்களித்து பாராளுமன்ற உறுப்பினர் ஆக்குங்கள் - நான் அவரை அமைச்சர் ஆக்கி அழகு பார்ப்பேன் என்று ஆயிரக் கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் பகிரங்கமாக நீங்கள் கூறி இருந்தீர்களே ! இப்போது நாங்கள் அவரை வெற்றி பெற செய்துள்ளோம் - கொடுத்த வாக்கை காக்க நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் தலைவர் அவர்களே !
நீங்கள் பகிரங்கமாக சொன்னதனால் தானே நாங்கள் கேட்கிறோம் - இது நியாயம் தானே ? நீங்கள் கூறாத ஒன்றை கேட்டு நாங்கள் உங்களை வற்புறுத்த வில்லையே ?
அதே நேரத்தில் மௌலானா அவர்களும் தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் எல்லாம் " கடந்த காலங்களில் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது நான் சார்ந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கவில்லை - ஆகவே அப்போது என்னால் அமைச்சர் ஆக முடியவில்லை - ஆனால் இன்று ஆட்சியின் பங்காளராக அமையப் போகும் வாய்ப்பு எமக்கு இருக்கிறது - நான் வெற்றி பெற்றால் இறைவன் உதவியுடன் நிச்சயம் நான் அமைச்சர் ஆவேன் என்றே பேசினார் அந்த எதிர்பார்ப்பில் தான் இளைஞ்சர்களாகிய நாம் அவருக்கு வாக்களித்து அவரின் வெற்றிக்காய் பாடுபட்டோம் - ஆனால் இன்று எல்லாமே பொய்யாகி போய் விடுமோ என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டு பிராந்திய அரசியல் மீது ஒரு வித வெறுப்பும் மேலோங்கி வருகின்றது - எதிர் பார்ப்புக்களை தூண்டி விட்டு இன்று நீங்கள் மௌனம் காப்பது எந்த வகையில் நியாயம்?
அன்பின் தலைவர் அவர்களே! இதயம் திறந்து கேட்கிறோம் -
மௌலானா தவிர்ந்த வேறு யாராவது கட்சி சார்பில் மட்டக்களப்பில் தெரிவாகி இருந்தால் எந்த வித தயக்கமும் இன்றி உடனடியாகவே நீங்கள் அமைச்சுப் பதவியை வழங்க சிபாரிசு செய்து இருப்பீர்கள் ? - ஆனால் மாவட்டத்தில் மௌலானா என்பவர் தெரிவாகி இருப்பதால் தான் ஒரு வேளை அவரின் பெயரை பரிந்துரை செய்யாமல் இருக்கிறீர்களோ என்ற பிழையான சிந்தனை மாவட்டத்தின் பெருவாரியான ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடலாம் - ஏனெனில் கடந்த காலங்களில் மாவட்டத்திற்கு கட்சியை வளர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் நீங்கள் தேசியப் பட்டியலையும் வழங்கி உடனடியாகவே அமைச்சுப் பதவியையும் வழங்கி அலங்கரித்துள்ளீர்கள் - அத்துடன் கட்சிக்கு எதிராக செயற்பட்டார் என்று ஒரு காலத்தில் விமர்சிக்கப் பட்ட ஒருவரான ஹாபிஸ் நசீர் அஹமத் அவர்கள் கட்சியில் இணைந்து கொண்ட உடனேயே அவரை மாகாண அமைச்சராகவும் - அதனை அடுத்து முதல் அமைச்சராகவும் ஆக்கி உள்ளீர்கள் - அப்படி இருக்கும் போது சதா நேரமும் மக்களுக்காக தன்னை அர்ப்பணிக்கின்ற - பணத்தை அள்ளி வீசி ஆதரவாளர்களை விலைக்கு வாங்கி வாக்குப் பெறுகின்ற ஒருவாறாக இல்லாமல் தனது நல்ல பண்புகளால் பெருமளவு வாக்காளர்களை தனது பக்கம் கொண்டிருக்கின்ற ஒருவரான அலி ஸாகிர் மௌலானா அவர்களை ஏன்? அவர் நேர்மையாக வெற்றி பெற்றும் அமைச்சர் ஆக்கவில்லையே என்ற பழிச் சொல் தலைமைத்துவம் மீது வந்து விடக் கூடாது என்று இளைஞ்சர்களாகிய நாங்கள் அச்சப் படுகிறோம் -இது எமது கட்சி , எமது உரிமையின் குரல் என நம்புகிறோம் , அத்துடன் மௌலானா அவர்களுக்கு இளைஞ்சர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பும் நம்பிக்கையும் இருக்கிறது , நல்லாட்சியின் உருவாக்கத்தில் சமூக ஊடகங்களின் பங்கு அளப் பெரியது என்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் சான்று பகர்ந்துள்ளார்கள், அதே போன்று இம்முறை மௌலானா அவர்களினதும் , நமது கட்சியினதும் வெற்றியில் இளைஞ்சர்களின் பங்கு அளப் பெரியது - அவர்கள் இயன்ற வரை தங்களை அர்ப்பணித்து பாடுபட்டுள்ளார்கள் - அத்துடன் வாக்குரிமை அற்ற எதிர்கால இளைஞ்சர்கள் மத்தியிலும் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் - அதே வேளை வீட்டில் உள்ள தாய் தந்தையர்கள் மத்தியில் மௌலானா மீது அதீத ஈடுபாடு கொண்ட ஆதரவாளர்களாகவே பெற்றோர்கள் இருக்கிறார்கள் - அவர்களின் சமகால பேசு பொருள் மௌலானா இற்கு அமைச்சுப் பதவி கிடைத்து விடுமா? தலைவர் என்ன முடிவு எடுக்க போகிறார் என்றே இருக்கிறது - அதே நேரத்தில் ,இங்குள்ள சிறுவர்கள் மௌலானா என்றால் ஒரு அற்புத மனிதர் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள் - அப்படிப் பட்ட மௌலானா இற்கு அமைச்சு கிடைக்காமல் போகும் என்றால் முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய பிழையான எண்ணம் பிஞ்சு உள்ளங்களிலே பதிந்து விடும் ஆகவே பல்வேறு தலைமுறையினரே ஒரு பிழையான கண்ணோட்டத்தில் இந்தக் கட்சியை பார்க்க போகிறார்கள் -எடை போடும் துர்ப்பாக்கிய நிலை இருக்கிறது இது எதிர்கால கட்சியின் வாக்குப் பலத்திலே பாரிய சரிவையும் நம்பிக்கையீனத்தையும் உண்டாக்கும் - ஆகவே கட்சி மீது எதிர் காலத்தில் தவறான கண்ணோட்டம் நிலவும் போது கட்சியை எப்படி வளர்ப்பது ?
ஆகவே பாரிய சரிவில் இருந்து கட்சியை வளர்க்க எமது மாவட்டத்தில் வெற்றி பெற்ற மௌலானா இற்கு அமைச்சுப் பதவியை தாருங்கள் என்று மக்கள் சார்பில் உங்களிடம் கேட்கிறோம்- அதே நேரத்தில் கட்சியின் எதிர்கால நம்பக தன்மையை இது பாதிக்கும் என்ற ஐயப்பாடும் எங்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது -
அதே நேரத்தில் மாவட்டத்தில் கட்சியை வளர்க்க முதலமைச்சர் பதவி இருக்கிறது என்ற வாதத்தை நீங்கள் முன் வைத்தால் அதை கூட எம்மால் ஏற்க முடியாது தலைவரே ! ஏனெனில் முதலைமைச்சர் பதவியில் இருந்த பலர் இன்று பாராளுமன்ற உறுப்பினர் ஆகி அமைச்சர் ஆகி இருக்கிறார்கள் - அந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் மக்களுக்கு மேலும் பல வினைத் திறன் மிக்க பணிகளை செய்ய முடியும் என்று தான் அவர்கள் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் பெற்றுள்ளார்கள் - அத்துடன் கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் இன்னும் சொற்ப காலமே உள்ளது - அந்த நிலையில் மாகாண முதலைச்சர் பதவி மட்டக்களப்பில் முஸ்லிம் காங்கிரசிடம் நிலையாக இருக்கும் என்று உங்களால் எப்படி நியாயப் படுத்த முடியும் - அடுத்த வருடம் தேர்தல் நடந்தால் முதலமைச்சர் பதவி எங்களின் மாவட்டத்திற்கும் - எமது கட்சிக்கும் தான் கிடைக்கும் என்பதில் என்ன உறுதிப்பாடு உள்ளது ? ஆனால் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முறைப் படி இன்னும் 5 ஆண்டுகளுக்கு இருக்கப் போகிறதே - ஒரு வேளை அடுத்த வருடம் மாகாண ஆட்சி மாறினால் மட்டக்களப்பு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் எதிர்கால நிலை என்ன ? அந்த நேரத்தில் கட்சிக்கு எதிரான 2 பிரதிநிதிகள் அதிகாரத்துடன் இருக்க போகிறார்கள் ஆனால் நீங்கள் முதலமைச்சரை காரணம் காட்டி எமது பகுதிக்கு பிரதி அமைச்சை வழங்காது விட்டால் - அடுத்த 5 ஆண்டுகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட ஆதரவாளர்களை அரசியல் அதிகாரம் இல்லாத அனாதைகள் ஆக்க இந்த வாதம் துணை நின்று விடுமோ என அஞ்சுகிறோம் - இறைவன் மீது ஆணையாக
முதலமைச்சரை பலவீனப் படுத்தி இங்கு கருத்துக் கூற வில்லை, அவரை மட்டம் தட்டும் எண்ணமும் எங்களுக்கு இல்லை - ஆனால் எங்கள் எதிர் காலத்திற்காக இதனை ஒப்பிட்டு பேசுகிறோம் - ஆகவே முதல் அமைச்சர் இருக்கும் போது மாவட்டத்துக்கு பிரதி அமைச்சு தேவை இல்லை என்ற வாதத்தை எங்களால் ஏற்க முடியாது
அன்பின் தலைவர் அவர்களே !
மௌலானா அரசியலுக்கு புதியவர் என்றும் அவருக்கு அமைச்சை கொண்டு நடத்தும் வல்லமை அனுபவம் ஆளுமை கிடையாது என்ற வாதத்தை கூட நீங்கள் சொல்ல முடியாது - ஏனெனில் இதற்கு முன்னர் அவர் 3 முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து இருக்கின்றார் , தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அறியப் பட்ட ஒரு அடையாள அரசியல் தலைவன், நேர்மையான நாகரீகமான அரசியல்வாதி என பெயர் பெற்றவர் -தேசியக் கட்சிகள் பலமுடன் இருந்த வேளை சுயேச்சை குழுவில் களமிறங்கி ஒரு பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய வரலாறு இருக்கும் என்றால் அது ஏறாவூர் மௌலானா ஆகத் தான் இருக்க வேண்டும் , அதே போல் 1994 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார் அதற்கு பிற்பாடு -இடம் பெற்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது தடவையாகவும் பாராளுமன்றம் சென்றார் , அதனை தொடர்ந்து தேசியப் பட்டியல் மூலம் பிரதான பெரும்பான்மை கட்சியான ஐக்கிய தேசிய கட்சியால் நியமிக்கப் படும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்று இருந்த ஒரு அரசியல் வாதி , உயிர் அச்சுறுத்தல் காரணமாக 2004 ஜூன் மாதம் 13 ஆம் திகதி அவர் இராஜினாமா செய்யும் வரை பாராளுமன்ற உருப்பினராக இன - பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று பணியாற்றிய ஆளுமை - அனுபவம் மிக்க அரசியல்வாதி , அத்துடன் பிரதமரின் கொள்கை திட்டமிடல் அமுலாக்கல் பிரிவு ஆலோசகராக பதவி வகித்து இருக்கிறார் , அதே நேரத்தில் நாட்டை விட்டு சென்ற நேரத்தில் கூட அமெரிக்க நாட்டிற்கான இலங்கை தூதுவராலயத்தில் அமைச்சர் அந்தஸ்த்தில் உள்ள மிகப் பொறுப்பு வாய்ந்த பதவிகளை அவர் மீள நாடு திரும்பும் வரை பணியாற்றி இருக்கிறார் - அதே நேரத்தில் கடல் கடந்து சென்று இருந்தாலும் மகளோடு தொடர்பை பேணிய ஒரு சேவகன் , அத்துடன் 2011 இல் இடம் பெற்ற ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலில் போட்டி இட்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றி ஏறாவூர் நகரை எழில் மிக்க பகுதியாக மாற்றியதுடன் - இலங்கையில் எந்த ஒரு தவிசாளரும் செய்யாத பணிகளை திறம்பட செய்து காட்டிய ஒருவர் - பல பில்லியன் நிதிகளை ஏறாவூர் நகரத்தில் கொண்டு கொட்டிய ஒருவர் - அத்துடன் மாகாண சபை உறுப்பினராக கடமை ஏற்ற போது முஸ்லிம் முதல் அமைச்சர் வருவதாக இருந்தால் ஒரு உறுப்பினரின் அங்கீகாரம் வேண்டும் என்ற நிலை இருந்த போது துணிந்து நின்று ஆதரவு வழங்கி , இதற்காகவே முன் கூட்டியே சத்தியப் பிரமாணம் செய்த ஒரு சாணாக்கிய சமூகப் பற்று மிக்க அரசியல்வாதி , அத்துடன் தவிசாளராக இருந்த நேரத்தில் அகில இலங்கை உள்ளூராட்சிமன்ற தலைவர்களின் சம்மேளனத்தின் தலைவராக பெரும்பான்மை ஆதரவுடன் தெரிவான ஒரே ஒரு முஸ்லிம் தலைவர், அத்துடன் இதன் மூலமாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பொதுநலவாய நாடுகளின் ஒன்றியத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பதவி என பல சர்வதேச பதவிகளை பெற்று கொண்ட ஆளுமை மிக்க ஒருவர் - இப்படி ஆயிரம் ஆயிரம் தகைமைகளை அவருக்கு உரித்தாக அடுக்கி கொண்டே போகலாம் -
ஆக அரசியலுக்கு புதியவர் - ஆளுமை இல்லாதவர் என்று சொல்லவும் முடியாது - எனவே மட்டக்களப்பில் அமைச்சுப் பதவி கட்சியால் வழங்க கூடிய முழு தகுதியும் அவருக்கு இருக்கிறது.
மேலும் இறுதியாக ஒரு விடயம் அன்பின் தலைவர் அவர்களே - தற்போது நல்லாட்சியை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருக்கிறது நேர்மையான தலைவர்களுக்கு அமைச்சுப் பதவியும் அரசியல் அதிகாரமும் வழங்கப் பட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் - ஆனால் எப்போதோ நல்லாட்சிக்கான அடையாளம் இவர் தான் என்ற பெயரை பெற்ற மாவட்டத்தின் அரசியல்வாதி - இவரை கரை படாத கரம் என்றே இங்குள்ள மக்கள் அவரை கருதுவதுடன் இதற்காகவே இவரை பெருவாரியாக ஆதரிக்கின்றனர் - இவர் பணம் சலுகைகளை கொடுத்து மக்களிடம் வாக்குப் பெறுபவர் கிடையாது - தனக்கு இருக்கும் நல்ல பெயரின் மூலமே மக்களின் ஆதரவை பெற்றவர் - ஆன காரணத்தினால் தான் இம்முறை தேர்தலிலே கட்சிக்கு உள்ளிருந்தும் - வெளியில் இருந்தும் பல்வேறு சலுகைகளை கொடுத்து மக்களை கவர்ந்து இவரை தோற்கடித்து விடலாம் என்று பலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்பட்ட வேளை அவற்றை எல்லாமே மக்கள் புறக்கணித்து அதி கூடிய விருப்பு வாக்குகளை இவருக்கு வழங்கி இருக்கிறார்கள் என்றால் - இவ்வாறான பிரதிநிதிகளுக்கு அமைச்சுப் பதவியையும் அதிகாரத்தையும் கொடுத்து மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விட்டால் மாவட்டத்தில் கட்சியி வளர்க்க பெரிதும் பாடுபட தேவை இல்லை - காலா காலத்துக்கும் இவரே அசைக்க முடியாத மக்கள் பிரதிநிதியாக மிளிர்வார் - கட்சியை வளர்க்கும் சாணாக்கியம் மிக்கவர் - சுயேட்சையாக இருந்தே வெற்றி பெற்றவர் - இப்போது எமது கட்சியை எப்படி வளர்ப்பார் என்று நாங்கள் புடம் போட்டு உங்களுக்கு காட்டத் தேவை இல்லை -
ஆகவே ! தலைவர் அவர்களே ! மட்டக்களப்பில் அமைச்சுப் பதவி மௌலானா விற்கும் வழங்கப் பட வேண்டும் என்ற எங்களின் கோரிக்கை தவறு என்று நீங்கள் கருதினால் நியாயமான காரணத்தை எங்களுக்கு சொல்லுங்கள் - இல்லை என்றால் அடுத்த தலைமுறைக்கு கட்சி பற்றியும் தலைமைத்துவம் ஒரு பிழையான கண்ணோட்டத்தை நீங்கள் ஏற்படுத்தி விட்டீர்கள் என்று பார்ப்பதையும் - ஒட்டு மொத்த மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களையும் நீங்கள் புறக்கணித்து விட்டீர்கள், அம்பாரைக்கே அமைச்சுப் பதவிகளையும் கொடுத்து தேசியப் பட்டியலையும் கொடுத்து , மாகாண அமைச்சுப் பதவியையும் கொடுத்து அதிகாரங்களை மையப்படுத்தி பிரதேச வாதம் செய்ய விளைகிறேர்களோ என்று அச்சப் படும் சூழல் ஏற்படும் என்று கருதுவதுடன் - அப்படி ஒரு நிலைமை ஏற்பட நீங்கள் இடமளிக்க மாட்டீர்கள் என்றும் நம்புகிறோம் - அத்துடன் எமது இந்த கோரிக்கை சொந்த மண்ணை நேசிக்கும் - நல்லாட்சியை விரும்பும் இளைஞ்சர்களின் உணர்வு ரீதியான விடயம், இதை பிரதேசவாதமாகவோ , சுயநல அரசியல் என்றோ கருத மாட்டீர்கள் என்று நம்புகிறோம் -
அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் அமைதியையும் - மன மகிழ்வையும் ஏற்படுத்தட்டும் என பிரார்த்தித்து விடை பெற்றுக் கொள்கிறோம்
