எஸ்.எம்.அறூஸ்-
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் ஏற்பாட்டில் இரண்டாவது வருடமாக தலைவர் தினம் கல்முனைத் தொகுதியில் அனுஸடிக்கப்பட்டு வருகின்றது.
இதில் ஒரு அங்கமாக மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற 16 வது வருட நினைவுப் பேருரையும்,துஆ பிரார்த்தனை நிகழ்விலும் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொள்ள வருகை தந்தபோது பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களினால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டார்.
இங்கு பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் மாணவர்கள் மத்தியில் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் ஆளுமைகளையும், தலைமைத்துவப் பண்புகளையும் பற்றி உரையாற்றினார். அரசியல் செயற்பாட்டில் பின்தங்கிக் காணப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கு முகவரி பெற்றுக்கொடுத்து இந்நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் முஸ்லிம் சமூகத்தை மாற்றினார். அவ்வாறான ஒருவரின் வாழ்க்கை வரலாறுகளை நமது இளைய சமூகத்தினர் அறிந்து வைப்பது காலத்தின் தேவையாகும் என்றும் பிரதி அமைச்சர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் மற்றும் கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்கள், சமூக சேவையாளர்கள், கல்வியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



