அமைச்சரவை அமைப்பதில் இன்னும் இறுதி முடிவில்லை! ஜனாதிபதி, பிரதமர் நேற்றும் பேச்சுவார்த்தை

தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவை அமைப்பது தொடர்பிலான இறுதி முடிவு எடுப்பதில் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிகளுக்கிடையே நேற்றும் இழுபறி நிலை தொடர்ந்தது.

கண்டி சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க அஸ்கிரிய மல்வத்து பீட மஹாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமர விக்ரமவின் கண்டியிலுள்ள இல்லத்தில் வைத்து பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் அமைச்சரவை அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்ததாக தெரிய வருகிறது.

அதனைத் தொடர்ந்து கண்டியிலிருந்து கொழும்புக்கு விரைந்த ஜனாதிபதி நேற்று மாலை 04 மணியளவில் தனது இல்லத்தில் வைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுடனான அவசர சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

கண்டியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஸ்ரீல. சு. க மத்திய குழுவின் அனுமதியை பெறும் வகையில் நேற்று மாலை இந்த அவசரக் கூட்டம் நடந்ததெனத் தெரிய வருகிறது. எனினும் இது தொடர்பான எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

ஐ. தே. க வைச் சேர்ந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஸ்ரீல. சு. க வைச் சேர்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் மிகவும் உயர்மட்டத்திலேயே அமைச்சரவை தொடர்பிலான முக்கிய சந்திப்புகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றுள்ளமையினால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சரவை குறித்த எந்தவொரு திட்டவட்டமான முடிவும் நேற்று மாலை வரை தெரிந்திருக்கவில்லை.

அரசியலமைப்பின் 19 ஆவது சீர்திருத்தத்தின் படி ஆகக்கூடியது 45 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க முடியும். அரசியலமைப்பு நிபுணர்களின் கருத்துப்படி 30 அமைச்சர்கள் எவ்வித பாராளுமன்ற அனுமதியுமின்றி நேரடியாக பதவியேற்க முடியும். ஏனைய 15 அமைச்சர்களும் பாராளுமன்றம் கூடியதன் பின்னரே பதவியேற்க முடியும்.

எவ்வாறான போதும், அமைக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் 51 உறுப்பினர்களுக்கு அமைச்சர் அந்தஸ்து வழங்கப்படப் போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்புக்களை ஐ. தே. க பிரதிநிதிகளை அல்லது ஸ்ரீல. சு. க பிரதிநிதிகளை பொறுப்பேற்பது என்ற சிக்கல் நிலை கட்சிகளுக்கிடையில் உருவாகியிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் வெற்றிபெற்றது ஐ. தே. க உள்ளடக்கிய கூட்டமைப்பு என்பதனால் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள் தனது கட்சி சார்ந்தவர்களுக்கே வழங்க வேண்டுமென்பதில் உறுதியாக இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறின.

கட்சிகளுக்கிடையிலான பேச்சு மற்றும் இழுபறி நிலையினை வைத்துப் பார்க்கும் போது இன்று அமைச்சரவை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

இந்த பேச்சுவார்த்தைகள் இன்றும் தொடருமென்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -