அடிப்படை வசதிகளின்றி அல்லல் படும் மருதமுனை நளீர் புர மக்கள்...!

பி.எம்.எம்.ஏ.காதர்-

ழிப்பேரலை அனர்த்தத்தில்   உயிர்களையும், உடமைகளையும்  இழந்த மக்கள் குடியேறி வாழும் மிகவும் பின்தங்கியிருக்கும்  ஒரு கிராமத்தைப் பற்றிச் சொல்வது  பொருத்தமாகும்.

2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி  ஏற்பட்ட ஆழிப்பேரலையில் ஆயிரக்கணக்கான உயிர்களையும் கோடிக்கணக்கான பெறுமதி கொண்ட சொத்துக்களையும் இழந்தது வரலாறாகும்.  இந்த வரலாறு  காலம் காலமாக மறக்கமுடியாத வடுக்களாக மாறாதிருக்கும். 

உயிர்களையும் உடமைகளையும் ஆழிப்பேரலை அள்ளிச் சென்ற அகோரக் காட்சிகளைக் கண்ட மனித நேயமிக்க யாரும் மனம் உருகாதிருக்க மாட்டார்கள். அந்த மனவேதனை இன்று வரை மனங்களில் இருந்து மாறவில்லை. அந்த மாறாத மனநிலையுடன் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் வாழும் கிராமமே 'நளீர் புரம்';என்று சொல்லப்படுகின்றது. 

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்முனை மாநகர சபைக்குள்ளான மருதமுனைக் கிராமத்தை அண்டிய மேற்குப்புறத்தில் அமைந்திருக்கும் கிராமமே இது. 

ஆழிப்பேரலையால் முற்றாகப் பாதிக்கப்பட்ட மக்களே இங்கு குடியேறி  இருக்கின்றனர். ஆழிப்பேரலையில் முற்றாகப் பாதிக்கப்பட்டவர்களில் ஏ.கே.நளீரும் ஒருவர்.அவர் ஆழிப்பேரலையில் அழிந்ததால்  மனம்  சோர்ந்து போகவில்லை. தைரியத்தோடு முயற்சி எடுத்தார்.  அவரின் அயராத  முயற்சி தான் இந்தக் கிராமம் உருவாகக் காரணமானது.

இவர்  எடுத்த முயற்சியின்  காரணமாக  ஆழிப்பேரலை அனர்த்தம் நடைபெற்று சுமார் 32  மாதங்களின்  பின்னர் 2007.06.20ஆம் திகதி முதன்  முதலாக ஏ.கே.ஏ.நளீர் குடியேறினார். அவருக்கு அடுத்தபடியாக 'கவிஞர் எம்.எச்.ஏ.கரீமும் குடியேறினார்' அன்றிலிருந்து   ஏ.கே.நளீர் புரம் என்ற  காரணப் பெயர்  ஆரம்பமாகி விட்டது.

மருதமுனையின் மேற்குப்புறத்தில் வயல் நிலங்களாகக் கிடந்த சுமார்  நூறு  ஏக்கர் நிலப்பரப்பு மண்போட்டு நிரப்பப்பட்டு இன்று கிராமமாக உருப்பெற்றிருக்கின்றது. இந்த வயல் நிலங்கள் ஒழுங்கான விளைச்சல் காணாத நிலையில் இருந்தது. உவர் நிலமாக மாறியதால் இந்த நிலை ஏற்பட்டது. இதனால் காணிச் சொந்தக்காரர்களிடமிருந்து இந்தக் காணிகளை பாதிக்கப்பட்ட மக்கள் மண்ணை காசு கொடுத்து வாங்கி; நிரப்ப வேண்டியிருந்தது. 

இந்தப் பிரதேசத்தில் வீட்டுத்திட்டம் அமைவதற்கு அப்போது பிரதேச செயலாளராக இருந்த ஏ.எச்.எம்.அன்சார் அதிகமான பங்களிப்புக்களைச் செய்து அரசார்பற்ற நிறுவனம் ஒன்றின் மூலமாக நிதிகளைப் பெற்று வீடுகளை அமைக்க இம் மக்களுக்கு உதவி புரிந்தார். 

அதே போன்று தற்போ கல்முனை மாநகர சபை உறுப்பினராக இருக்கின்ற இஸட்.ஏ.எச்.றஹ்மான எடுத்த முயற்சியின் பயனாக அப்போ  அமைச்சராக இருந்த ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்த வயல் நிலங்கள் மண் போட்டு நிரப்பப்பட்டது;

அரச சார்பற்ற நிறுவனத்தின் மூலமாக வழங்கப்பட்ட நிதி உதவியுடன் தங்களது நிதியையும் சேர்த்து சிலர் வீடுகளைகளைப் பூர்த்தி செய்தனர். வசதியில்லாதவர்கள்  இன்று வரை அப்படியே போட்டிருக்கின்றனர். ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும் தாங்கள் விரும்பியவாறு வீடுகளை நிர்மாணிப்பதற்கு திட்டமிட்டதால் இந்த நிலை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. 

இந்தப் பிரதேசத்திலே நகர்ப்புறங்களிலிருந்து இரவு நேரங்களில் பலர் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டி இந்தக்கிராமத்தின் சுகாதாரத்திற்கு பங்கம் விளைவிக்கின்றனர். இதனால் இங்குள்ள மக்கள் பெரும் சுகாதாரச் சீர்கேட்டுக்குள்ளாகின்றனர். 

இந்தக் கிராமத்திற்கு அருகில் ஒரு சிறிய குளம் இருப்பதால் அதில் ஏற்படுகின்ற சுத்தமின்மை தேங்கிக்கிடக்கின்ற கழிவு நீர் என்பனவற்றால் டெங்கு நுளம்பு பெருகி டெங்கு நோயை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. 

இந்த வயல் நிலத்தை மண் போட்டு நிரப்பியிருக்கின்ற போதிலும் மாரி காலங்களில் வெள்ள நீர் நிறைந்து நின்று பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. இதனால் வருடா வருடம் பெரும் பாதிப்புக்கள்  ஏற்படுகின்றன. 

மக்கள் குடியேறியிருக்கின்ற போதிலும் இதுவரை உள்வீதிகள் எதுவும் செப்பனிடப்படவில்லை. வீதி செப்பனிடுவதற்கு முன்பு மண் போட்டு உயர்த்த வேண்டிய தேவையிருக்கின்றது. இல்லையேல் மழைக்காலத்தில் போடுகின்ற வீதிகள் கூட வெள்ள நீரில் மூழ்கி விடும். 

இந்தக் கிராமத்திற்கு அருகிலுள்ள குளக் கட்டை அகலமாக்கி வீதியாக்குவது இக்கிராமத்திற்கு பயனுள்ளதாக அமையும் சம்பந்தப்பட்டவர்கள் இந்த விடயத்தில்  அக்கறை  காட்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

50 குடும்பங்களுக்கு மேல் குடியேறியிருக்கின்ற இந்தக் கிராமம் 100 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதாகும். வசதிகள் குறைவாக இருப்பதனால் இன்னும் குடியேறுவதற்கு மக்கள் அஞ்சுகின்றனர். 

மேலும் இக்கிராமத்தில் ஒரு சில குடும்பங்களுக்கு மட்டுமே குடிநீர் குழாய் நீர் வழியாக வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பல குடும்பங்கள் நீரிணைப்பு இல்லாமல் இருக்கின்றவர்களிடம் நீரைப் பெற்று வருகின்றனர். 

இதனால் குளிப்பதற்கும் ஏனைய தேவைகளுக்கும் நீர் இல்லாததால் இங்குள்ள மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை இங்குள்ள மக்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதேபோன்று இங்கு ஒரு பகுதிக்கு மட்டுமே மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இன்னுமொரு பகுதிக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. அதே போன்று மின்சாரம் வழங்கப்பட்டுள்ள பகுதிகளுக்குக் கூட தெரு விளக்கு பொருத்தப்படவில்லை. 

இந்த விடயங்களில் கல்முனை மாநகர சபை உரிய நடவடிக்கை எடுப்பதோடு மின்சார சபையும் உரிய நடவடிக்கை எடுத்து இந்தக் கிராம மக்கள் அனைவருக்கும் மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். 

மேலும் இங்குள்ளவர்களுக்கு நூலகமில்லை. நூலகத்திற்கு செல்வதானால் மருதமுனையிலுள்ள நூலகத்திற்கே செல்ல வேண்டும். இது ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. ஆகவே பத்திரிகை வாசிப்பதற்கான ஒரு சனசமூக நிலயத்தை ஏற்படுத்த வேண்டியதும் மிகவும் அவசியமாகும். இருந்தாலும் பாடசாலை, வைத்தியசாலை என்பன இக்கிராமத்திற்கு அண்மித்திருப்பதால் இவற்றுக்கான அவசியம் இல்லை. 

மேலும் இந்தப் பிரதேசத்திற்கு அருகில் உணவுக்காக, ஆடு,மாடுகள் அறுக்கப்படுகின்றன. அதன் கழிவுகள் அந்தந்த இடங்களிலேயே போடப்படுகின்றன. அவற்றுடன் ஏனைய பிரதேசங்களில் அறுக்கப்படுகின்ற கோழிகளின் கழிவுகள் கூட இந்தப் பிரதேசத்திலேயே கொட்டப்படுகிறது. 

இதனால் இந்தக் கழிவுகளை நாய், பூனை, காகம் என்பன காவிச் சென்று குடியிருப்புக்களில் போடுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இது தொடர்பாக எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாதிருப்பதால் சுகாதாரச் சீர்கேடு அதிகரித்து வருகின்றது. இவற்றுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். 


இக்கிராமத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசியல் வாதிகள் முன்வரவேண்டும். பொதுத் தேர்தல் முடிந்துள்ள கையோடு இக்கிராமத்தின் பிரச்சினைகளை அரசியல் வாதிகளின் பக்கம் கொண்டு செல்வதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் இந்த சந்தர்ப்பத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனையோடு இக் கட்டுரை  நிறைவு பெறுகிறது.  (நன்றி –விடி வெள்ளி-25-08-2015)





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -