புதிய அரசாங்கத்தின் கீழ் திருடர்களை பிடிக்க கூடிய அமைச்சு பதவி ஒன்று தனக்கு வழங்கப்பட்டால் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுகொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் 17, 20 கோடி செலவு செய்த வேட்பாளர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றமை குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
ஏனைய வேட்பாளர்கள் பல கோடிகளை செலவிடும் போது நான் தேர்தல் நடவடிக்கைகளுக்காக மூன்று கோடி என்ற சிறிய அளவலான பணத்தினையே செலவிட்டேன்.
அவ்வாறான சூழ்நிலையிலும் திவுலபிட்டிய மக்கள் எனக்கு 2 லட்சத்து 16 ஆயிரம் என்ற பெரிய அளவிலான வாக்குகளை அளித்துள்ளனர்.
எனக்கு இந்த அளவிற்கு ஆதரவு வழங்கிய மக்களுக்காக சேவை செய்ய கூடிய ஒரு அமைச்சு பதவியை நான் எதிர்பார்க்கின்றேன். திருடர்களை பிடிக்கும் அமைச்சு ஒன்று கிடைத்தால் அது மிகவும் சிறப்பாக இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரை விமர்சித்தவர்கள் அமைச்சு பதவி கோரி மண்டியிடுகின்றனர்: ரஞ்சன் ராமநாயக்க
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை புண்ணியத்திற்கு பிரதமரானவர் என குற்றம் சுமத்திய நபர்கள், தற்போது அமைச்சர் பதவிகளை வழங்க கோரி, பிரதமருக்கு அருகில் மண்டியிடுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரதமரை கேலி செய்தவர்கள் இன்று அமைச்சு பதவிகளை கோரி பிரதமரிடம் மண்டியிட்டு வருகின்றனர்.
பிரதமரை புண்ணியத்தில் அந்த பதவிக்கு வந்தவர் எனக் கூறிய டிலான் பெரேரா தனது தொகுதியிலும் தோற்று மாவட்டத்திலும் தோற்று போய், தேசியப்பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார்.
தேசியப்பட்டியலில் வந்துள்ள அவர் தற்போது புண்ணியத்தில் எம்.பியாகியுள்ளார். மேலும் அவர் அமைச்சர் பதவியையும் பெற முயற்சித்து வருகிறார்.
பிரதமரிடம் மண்டியிட்டு அமைச்சர் பதவியை பெற முயற்சிக்கும் யாசகம் கோரும் நபர் யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
