புத்தகமொன்றை எழுதி வெளியிடுவது என்பது பிரசவ வேதனைக்கு ஒப்பானது என குறிப்பிட்ட அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தாம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளில் சில அடங்கிய நூலொன்றின் வெளியீட்டு விழா கண்டியில் அடுத்த மாதம் 08ஆம் திகதி வெளியிடப்படவிருப்பதாகவும் தெரிவித்தார்.
“இலங்கை இந்திய சமூக அபிவிருத்திப் பணியில் முஸ்லிம்களின் பங்களிப்பு” என்ற தலைப்பில் ஓ.எல்.எம்.ஆரிப் எழுதிய நூலின் வெளியிட்டு விழா, கலகெதர தேர்தல் தொகுதியிலுள்ள தெஹிதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
1952ஆம் ஆண்டு தமது தந்தையார் என்.எம்.ஏ.ரவூப் இந்த தெஹிதெனிய முஸ்லிம் பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றியதை சுட்டிக்காட்டிய அமைச்சர் ஹக்கீம், பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் தம்மை வெற்றிபெறச் செய்வதன் மூலம் இப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கு தமது பங்களிப்பைச் செய்ய உதவுமாறு வேண்டிக் கொண்டார்.
இந்நிகழ்வில் தும்பனை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் அம்ஜாத் முத்தலிப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


