நிதி மோசடியில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷக்கு எதுவித சுகயீனங்களும் இல்லையென தகவல்கள் வெளியாகியுள்ளது.
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பசில், சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் தனக்கு எவ்வித சுகயீனங்களும் இல்லை என அவரை, நலம் விசாரிக்க வந்த நண்பரிடம் தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நண்பரும் கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக செயற்பட்டவாராகும். அவர் பசில் ராஜபக்ஷவின் பாடசாலை நண்பர் என குறிப்பிடப்படுகின்றது.
இதன் போது தனது நலன் விசாரிக்க வந்த நண்பரிடம், இம்முறை பொது தேர்தலில் எந்த கட்சியில் போட்டியிட போகின்றீர்கள் என பசில் வினவியுள்ளார். வெற்றிலை சின்னத்தில் போட்டியிடவுள்ளேன் என நண்பர் பதிலளித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டுமாயின் ஒரு நடவடிக்கையை செயற்படுத்துமாறு பசில் குறிப்பிட்டுள்ளார். என்ன செய்ய வேண்டும் என நண்பர் கேள்வியெழுப்பியுள்ளார்.
தன்னையும் தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களை பாதிக்கும் வகையிலான பிரச்சாரங்களை மேற்கொள்ளவில்லை என்றால் நண்பர் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியும் என பசில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் முன்னாள் அமைச்சரின் நண்பர் எவ்வித பதிலும் வழங்காமல் இச்சந்திப்பின் பின்னரும் வழமையை போன்றே ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக தாக்குதல் மேற்கொள்ளும் வகையிலே பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
