சுலைமான் றாபி-
இம்முறை இடம்பெறவுள்ள பாராளுமன்றத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தனியாக மரச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிய முடிகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளை இம்முறை அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.க வின் கை ஓங்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையிலேயே மு.காவினால் இம்முடிவு எட்டப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இதேவேளை இம்முறை அம்பாறை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.தயாரட்னவின் மீள் வருகை மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தயாகமகே உள்ளிட்ட ஐ.தே.கட்சியின் செல்வாக்கு படைத்த முக்கிய உறுப்பினர்கள் இத்தேர்தலில் போட்டியிடுவதனையும், ஸ்ரீ.ல.மு.கா இம்முறை அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே. கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டால் சிலவேளைகளில் மு.காவிற்கு கிடைக்கவுள்ள ஆசனங்கள் குறைக்கப்படும் என்கின்ற அச்சத்தினாலும், இக்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் தற்போதய பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடவேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டுள்ளமையாலும் இதன் மூலம் அம்பாறை மாவட்டத்தில் சில பிரதேசங்களில் காணப்படும் பிரதேச வாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதினாலுமே இம்முடிவு எட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இது தவிர ஸ்ரீP.ல.மு.கா அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தனித்தும், ஏனைய மாவட்டங்களில் ஐ.தே.கட்சியுடன் இணைந்தும் போட்டியிடவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
