முஸ்லிம் அரசியல்வாதிகள் அடக்கி வாசித்தல் அறிவு! முந்திக் கொண்டு நாமே முஸ்லிம் சமூகத்தை அரசியல் பலிக்கடாவாக தாரை வார்ப்பது வரலாறாகிவிட்டது!!
முஸ்லிம் சமூகத்தை சோதனைக் குள்ளாக்கி பலிக்கடாவாக்கும் அரசியலினை சாதனைகளாக கூறி சாணக்கியம் பேசுவதில் இருந்து முஸ்லிம் அரசியல் குழுக்கள் தவிர்ந்து கொள்தல் வேண்டும், தேர்தல் மேடைகள், பிரச்சாரங்கள், ஊடக உளறல்களின் பொழுது அரசியல் வாதிகள் அடக்கி வாசித்தல் வேண்டும், தேசிய அரசியலில் முஸ்லிம்களின் நண்பர்களாக இருந்தவர்களைக் கூட பகைவர்களாக்கிக் கொள்ளும் வீராப்புக்களை வாய்ச் சவாடல்களை நாம் தவிர்ந்து கொள்தல் சமூகத்திற்குச் செய்யும் அளப்பரிய சேவையாக இருக்கும்.
அதிபர் மஹிந்தவின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பொழுதாயினும் சரி, அரசியலமைப்பின் மீதான 20 சீர்திருத்த சட்டமூலம் அங்கீகாரம் பெற முன் பாராளுமன்றம் கலைக்கப் பட்ட பொழுதாயினும் சரி முஸ்லிம் சமூகம் சார்ந்த நியாயங்கள் இருந்தாலும் கவிழப் போகின்ற வாளியை முந்திக் கொண்டு கவிழ்த்துவிடும் கைங்கரியத்தை தாம் செய்ததாக கொக்கரிப்பதும் ஆணவம் பேசுவதும், தருணம் பார்த்து கரணம் போட்டதாக பெருமிதப் படுவதும் ஆரோக்கியமான அரசியலாக மாட்டாது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது மீள் அரசியல் பிரவேசம் குறித்து வெளியிடப்படும் விமர்சனங்கள் முஸ்லிம் சமூகத்தின் மீதான காழ்ப்புணர்வை பேரின சக்திகள் அரசியல் ரீதியாக நிறுவனமயப்படுத்தி மீள்கட்டுமானம் செய்வதற்கு உந்துதலாக இருந்து விடக் கூடாது.
விடுதலைப் புலிகளை இராணுவத்தின் மூலம் ஒழித்துக் கட்டுவதென அவர் மேற்கொண்ட தீர்மானம் சர்வதேச அரங்கில் அவரை தனிமைப் படுத்தியிருந்த நிலையில் உள்நாட்டில் பேரின சக்திகளின் தயவை நாட வேண்டிய தேவை அவருக்கு இருந்த பொழுது பிழையான தரப்புக்களின் கைகளுக்குள் அகப்பட்டு இறுதியில் ஆட்சி அதிகாரம் அனைத்தையும் பறி கொடுக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.
மஹிந்த ராஜபக்ஷ அவர்களோடு இணைந்திருந்து பின்னர் மைத்ரி நல்லாட்சி சுலோகங்களோடு வெளியேறிய பேரினவாத தரப்புக்கள் கூட தன்னை கட்டுப் பாட்டிற்குள் வைத்திருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல தடவைகள் சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதே தரப்புக்கள் மைத்ரி நல்லாட்சியிலும் தமது மேலாதிக்கத்தை திணிக்க முனைவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா உற்பட பலரும் ஆதங்கப் பட்டுக் கொண்டிருந்த நிலையில் தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கின்றது.
மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பதவியில் இருந்து கவிழ்ப்பதற்கு எவ்வாறு எதிர்க்கட்சிகள் உற்பட தேசிய பிராந்திய சர்வதேச சக்திகளுக்கு தேவை இருந்ததோ அதே போன்ற பல அரசியல் இலக்குகள் தற்பொழுதும் அதே சக்திகளுக்கு இருக்கின்றன.
இலங்கை அரசியல் வரலாற்றில் எல்லா இக்கட்டான சந்தர்ப்பங்களிலும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை அரசியல் சதுரங்கத்தில் பகடைக்கைகளாக அல்லது பலிக்கடாக்களாக மாற்றிவிடுவதில் தேசிய பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகள் கவனமாய் காய் நகர்த்தியிருக்கின்றன.
அதற்கான களநிலவரங்களும் கனகட்சிதமாய் தூபமிடப்பட்டு ஏற்படுத்தப் பட்டுமுள்ளன, பின்புலத்தில் இருந்து முஸ்லிம் அரசியல் வாதிகளை பொம்மலாட்டம் ஆடச் செய்து, அல்லது முஸ்லிம் சமூகத்தை சீண்டிப் பார்த்து அரசியல் இராஜதந்திர இலக்குகளை அடைந்து கொள்வதில் காலத்திற்குக் காலம் மேற்படி தரப்புக்கள் வெற்றிகண்டுமுள்ளன.
உதாரணத்திற்காக, வடக்கு கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைத்த முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தன கிழக்கில் சுமார் 50% வீத அரசியல் வலுவைக் கொண்டிருந்த முஸ்லிம்களை இணைந்த வடகிழக்கில் 17% வீத அரசியல் வலுவற்ற சமுதாயமாக மாற்றிவிட்டதோடு, வடக்கில் இருந்து கிழக்கை பிரிப்பதா எனற சத்திய சோதனையில் வாக்கெடுப்பு நடத்துவதாக குறிப்பிட்டதன் மூலம் முஸ்லிம் சமூகத்தை பலிக்கடாவாக்கினார்.
முஸ்லிம்காங்கிராஸ் தலைவரின் மரணத்திற்குப் பிறகு இன்றுவரை முஸ்லிம் அரசியல் குழுக்களை தூண்டிவிட்டு ஆட்சிமாற்றம் பாராளுமன்ற பெரும்பான்மை என பல்வேறு இலக்குகளை மேற்படி சக்திகள் அடைந்து கொண்டன.
தற்பொழுது அரசியலமைப்பின் மீதான 20 சீர்திருத்தச் சட்ட மூலம் சகல சிறுபான்மை சமூகங்களுக்கும் சிறுபான்மைக் கட்சிகளுக்கும், இடதுசாரி கட்சிகளுக்கும் பொதுவான பாதகமான அம்சங்களைக் கொண்டிருந்த பொழுதும் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு பெரும் நாடகத்தையே அரங்கேற்றியது, ஆரம்பத்தில் தேர்தல் முறை மாற்றத்தை அறவே விரும்பாத ஐக்கிய தேசியக் கட்சி திடீரென தேர்தல் முறை சீர்திருத்தத்திற்கான பிரேரணையை அமைச்சரவையில் தானே சமர்ப்பித்தது.
ஏற்கனவே பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருந்த சட்டமூலத்தை விடவும் மோசமாக முஸ்லிம் பிரதிநிதித்துவத்திற்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாயிருந்த பிரேரணை ஒன்றையே ஐக்கிய தேசியக் கட்சி இறுதி நேரத்தில் முன்வைத்து.
பின்னர் தம்முடன் நிபந்தனைகள் பேரம் பேசல்கள் இல்லாமல் கூட்டுச் சேர்ந்துள்ள பிரதான முஸ்லிம் அரசியல் குழு ஒன்றின் தலைவரை தூண்டிவிட்டு ஏனைய சிறுபான்மை கட்சிகள் , சிறுகட்சிகளை முஸ்லிம் அரசியல் கட்சிக் காரியாலயமொன்றில் கூடச் செய்து நிலைமைகளை சிக்கலாக்கி பாராளுமன்றத்தை கலைக்கும் கட்டாய நிலையை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்படுத்தியது.
தேர்தல் சீர்திருத்தச் சட்டமூலத்தை எதிர்ப்பவர்கள் தேசத் துரோகிகள் என்ற ஜனாதிபதி மைத்ரி அவர்களின் அறிவிப்பின் பின்னரே ஐக்கிய தேசியக் கட்சி அந்தப் பலியை பாவத்தை அடுத்த சமூகங்களின் மீது போடுவதற்கான மூலோபயத் திட்டத்தை அமுல்படுத்த அதிகம் துள்ளிக் குதிக்கும் ஒரு குதிரையை தேர்ந்தெடுத்தது.
அதிபர் மஹிந்தவின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பொழுதாயினும் சரி, அரசியலமைப்பின் மீதான 20 சீர்திருத்த சட்டமூலம் அங்கீகாரம் பெற முன் பாராளுமன்றம் கலைக்கப் பட்ட பொழுதாயினும் சரி முஸ்லிம் சமூகம் சார்ந்த நியாயங்கள் இருந்தாலும் கவிழப் போகின்ற வாலியை முந்திக் கொண்டு கவிழ்த்துவிடும் கைங்கரியத்தை தாம் செய்ததாக கொக்கரிப்பதும் ஆணவம் பேசுவதும், தருணம் பார்த்து கரணம் போட்டதாக பெருமிதப் படுவதும் ஆரோக்கியமான அரசியலாக மாட்டாது.
முக நூல் பாவனையாளர்களும் மேற்படி விவகாரங்களைப் புரிந்து கொண்டு கூட்டுப் பொறுப்புடன் சமூக அக்கறையுடன் நடந்து கொள்தல் வேண்டும்.
"யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு "
