அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அரசியல் பிழைப்பும் முஸ்லிம் மீடியா போரத்தின் முட்டுக் கொடுத்தலும்!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

வில்பத்து விவகாரத்தில் சிங்கள பௌத்த இனவாதிகள் மற்றும் சில சிங்கள ஊடகங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளன. எவ்வளவுதான் உண்மை நிலைமைகளை விளக்கிக் கூறியும் தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்ற நிலைப்பாட்டிலேயே அவர்கள் விடாப்பிடியாக உள்ளனர். சில விடயங்களில் நாய் வாலை அதன் எஜமானர்களாலும் நிமிர்த்த முடியாது தானே?

இவ்வாறான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளவர்களுக்கு உண்மை நிலைமை என்னவென்று தெரிந்தாலும் இனவாதப் கண்ணோடு இந்த விடயத்தை பார்க்கும் போது அவர்கள் தங்களது நிலையிலிருந்து ஒருபோதும் மீளப் போவதில்லை.

இது ஒரு புறமிருக்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தைச் சேர்ந்த சகோதரர் பௌஸான் லாஹிர் அவர்கள், வில்பத்து விவகாரம், அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தொடர்பில் தனது கருத்துகளை தெரிவித்து நண்பர்களுக்கு ஈ மெயில் அனுப்பியுள்ளார்.

அதில் அவர் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார் விசேடமாக, ”ரிஷாட் பதியுதீனின் அரசியல் பிழைப்புக்காக வில்பத்து விவகாரத்தை ஊதி பெருப்பித்துக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மீடியா போரம் அதற்கு முட்டுக்கொடுக்க முற்படுவதையிட்டு அவ்வமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் பலர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.” என தெரிவித்துள்ளார்..

வில்பத்து விவகாரத்தை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் அரசியல் பிழைப்புக்காக ஊதிப் பெருப்பித்துள்ளார் என்பது பௌஸானின் குற்றச்சாட்டு. இப்படி அவர் கூறுவது தவறு. மிக..மிக.. அபாண்டமானது. வில்பத்து விவகாரம் என்பது அண்மைக் காலத்தில் இந்தளவுக்கு முக்கியத்துவம் பெற்று ஊதிப் பெருப்பிக்ககப்பட்டமைக்கு சிங்கள பௌத்த இனவாதிகள் மற்றும் சில சிங்கள ஊடகங்களே காரணம். மீள்குடியேறவுள்ள முஸ்லிம்கள் மீதும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதும் உண்மைக்கு அப்பால் அநியாயமாக குறறச்சாட்டுகள் அடுக்கப்படுகின்றன.

இவ்வாறானதொரு நிலையில், தான் அமைதியாக இருந்தால் அவர்களின் பொய்யான குற்றச்சாட்டுகள் உண்மையாகி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு தவறான பிரசாரங்கள் தடையாகி விடலாம் என்ற நோக்கம், அச்சம் காரணமாக அவற்றை முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும் என்பதற்காகவே அமைச்சர் ரிஷாத் அவர்கள் இந்த விடயத்தில் தனியனாக நின்று பேராடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதில் அவர் அரசியல் பிழைப்பு நடத்தவில்லை என்பதனை தெட்டத் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியல் பிழைப்பு நடத்த வேண்டுமென்ற எண்ணம் அமைச்சர் ரிஷாத்துக்கு இருந்திருந்தால் இந்த விடயங்களைக் கண்டு கொள்ளாமல் பேசாமல் இருந்து கொண்டு இந்த அரசுக்கு நல்ல பிள்ளையாக நடித்து தனது அரசியல் கஜானாவை அவரால் நிரப்ப முடியும்தானே சகோதரர் பௌஸான் அவர்களே?

அடுத்ததாக முஸ்லிம் மீடியா போரம் இந்த விடயங்களுக்கு முட்டுக்கொடுக்க முற்படுவதாகவும்சகோதரர் பௌஸான் இன்னொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது மிக வேதனையான விடயம். வில்பத்து விவகாரத்தை ஊதிப் பெருப்பித்து இன்று பூதாகரமாக்கிய சிங்கள பௌத்த இனவாதிகளுக்கும் அமைப்புகளுக்கும் முட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பது சில சிங்களே ஊடகங்களே என்பதனை நீங்கள் மறந்து விட முடியாது.

இந்த நிலையில் இந்த நாட்டு முஸ்லிம்களின் பிரதான ஊடக அமைப்பான ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வில்பத்து தொடர்பிலும் முஸ்லிம்கள் குறித்தும் தனது அக்கறையை வெளிக்காட்டுவதில் என்ன தவறு? சிங்கள ஊடகங்கள் எம்மைப் பற்றி பிழையாக விமர்சிப்பதனை முஸ்லிம்களின் பிரதான ஊடக மையமான முஸ்லிம் மீடியா போரம் மௌனமாகவிருந்து அவற்றினை அங்கீகரிக்க வேண்டுமென்றா நீங்கள் விரும்புகிறீர்கள் பௌஸான் அவர்களே? இந்த விடயத்தை சர்வதேசப்படுத்துவதற்கும் சகோதர சிங்கள ஊடகங்களின் தவறான பார்வையிலிருந்து வில்பத்து விவகாரத்தை விலக்கிக் கொள்வதற்கும் சிறந்ததொரு நதி மூலமே முஸ்லிம் மீடியா போரம் என்பதனை பௌஸான் அவர்கள் மறந்து விடக் கூடாது.

வில்பத்து விவகாரம் தொடர்பில் முஸ்லிம் மீடியா போரம் நடத்தும் குறித்த கலந்தாய்வு கருத்தரங்கு எதிர்காலத்தில் நல்ல பயனை வழங்கும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். விலபத்து விவகாரத்தில் அமைச்சர் ரிஷாத்துக்கு முஸ்லிம் மீடியா போரம் முட்டுக் கொடுக்கவில்லை மாறாக எமது வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றதுக்கு இன்று ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகளை அகற்றவே முயற்சிக்கிறது என்பதே உண்மை.

எனவே, தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள். அரசியல் கொள்கைகளுக்காக எமது சமூக ரீதியான விடயங்களில் நம்மிடையிலான முரண்பாடான கருத்துகளை எவரும் பகிரங்கமாக, பலாத்காரமாக திணிக்கக் கூடாது. இவ்வாறான விடயங்களில் எஙகளுக்குள் காணப்படும் துருவ நிலைமைகளை நாம் அடக்கி வாசிக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும். காலத்தின் முக்கியத்துவம், விடயங்களின் தாற்பரியங்களைக் கவனத்தில் கொண்டு அனைவரும் யெற்பட வேண்டும்.

முஸ்லிம் மீடியா போரம் வில்பத்து விகாரம் தொடர்பில் நாளை ஏற்பாடு செய்துள்ள இந்த முக்கியம கூட்டம் நிச்சயம் வெற்றி பெறும். பாதிக்கப்பட்ட தரப்புகளுக்கு விமோசனத்தை வழங்கும் என்பதில் ஐயம் இல்லை. இதில் கலந்து கொளள் வேண்டுமென்பதே எனதும் அவா! அனைவரும கலந்து கொளள் வேண்டும். சகோதரர்களான என்.எம். அமீன், ரிப்தி அலி, எம்.ஏ. எம். நிலாம் ஆகியோரின்ச மூக அக்கறை கொண்ட இந்த ஏற்பாடு வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இதேவேளை, எனது நண்பரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான சுஜப் எம். காசிம் அவர்களின் நூல் வெளியீடும் நாளை மாலை அதே இடத்தில் இடம்பெறுகிறது. எனவே நாளைய நாள் வடபுல முஸ்லிமகளி்ன மீள்குடியேறத்துக்கான தடைகளை உடைக்கும் நாளாக அமைய பிரார்த்திக்கிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -