அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தினூடாக பாராளுமன்றத்தின் ஆசனங்களின் எண்ணிக்கை 225 ஆக திருத்தம் செய்தமையினால் சிறுப்பான்மை இன கட்சிகளுக்கோ அல்லது சிறிய அரசியல் கட்சிகளுக்கோ எந்தவொரு பாதிப்பும் ஏற்படபோவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப்பேச்சாளரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இம்முறை பாராளுமன்ற தேர்தலின் போது தமிழ், முஸ்லிம் வாக்குகளோடு மாத்திரமின்றி சிங்கள வாக்குகளினால் ஆட்சிபீடமேறுவோம். இருப்பினும் தேர்தலின் பின்பும் தேசிய அரசாங்கமே கட்டியெழுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனவரி 8 ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்பு 100 நாட்களில் எந்தவொரு அரசாங்கம் செய்யாத சேவைகளை நாம் நிறைவேற்றினோம்.
எனினும் நல்லாட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்காது தொடர்ந்தும் சதித்திட்டங்களை எதிர்க்கட்சியினர் முன்னெடுத்து வருகின்றனர். இதன்காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் சீர்குலைந்துள்ளது.
பாராளுமன்றத்தில் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தப்படும். முதலில் பாராளுமன்ற தேர்தலே நடத்தப்படும்.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாட்டிலுள்ள சிங்கள பௌத்த வாக்குகள் கிடைப்பதில்லை என்றும் தமிழ், முஸ்லிம் வாக்குகளினாலேயே கட்சி நிலைத்து நிற்பதாக எதிர்க்கட்சிகளினால் நீண்டகாலங்களாக பரவாலாக கிண்டல் அடிக்கப்பட்டு வந்தது.
இருந்தபோதிலும் அடுத்த பாராளுமன்ற தேர்தலின் போது தமிழ், முஸ்லிம் வாக்குகளை கொண்டு மாத்திரமின்றி பௌத்த சிங்கள வாக்குகளினால் மாபெரும் வெற்றி பெறுவோம்.
அத்தோடு நாட்டின் மூவின மக்களின் பேராதரவுடன் 125 ஆசனங்களை பெற்று ஐக்கிய தேசியக் கட்சி யுகத்தினை ஏற்படுத்தியே தீருவோம். அதில் எவ்வித சந்தேகமுமில்லை. சுமார் 12 வருடங்களுக்கு மேலாக நாம் எதிர்க்கட்சியில் அமர்ந்து பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ளோம். எமக்கு எதிராகவும் வீண் பழி சுமத்தப்பட்டது. பல்வேறு துறைகளிலும் அடிபட்டும் உதைபட்டும் வந்த பின்னரே ஆட்சி பீடம் எனும் ஆசனத்தை கைப்பற்றினோம்.
20 ஆவது திருத்தச்சட்டம்
இதேவேளை நேற்றுமுன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவையின் போது அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்போது பல்வேறு திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன.
இதன்பிரகாரம் 255 ஆக பாராளுமன்றத்தின் உறுப்பினர் தொகையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு மாறாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதன்பிரகாரம் பாராளுமன்றத்தின் உறுப்பினர் தொகை 225 ஆக தொடர்ந்தும் காணப்படும். இந்த கூட்டத்தொடரின் போது அமைச்சர்களான பி.திகாம்பரம், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.
எனினும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டமை ஊடாக சிறுபான்மை இன கட்சிகளுக்கோ அல்லது சிறிய கட்சிகளுக்கோ எந்தவொரு பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. அதற்கான வழிகள் குறித்த திருத்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்தோடு ஜனாதிபதியும் சிறுபான்மையினத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் முறைமையில் மாற்றம் செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.
இந்நிலையில் தேர்தல் முறைமை மாற்றம் குறித்தான இறுதி முடிவுகளை எல்லை நிர்ணய ஆணைக்குழு முன்வைக்கும். இதன்பிரகாரம் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் விரைவில் பாராளு மன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும் பழைய முறைமையின் பிரகாரமே தேர்தல் நடத்தப்படும்.அரசியலமைப்பின் 20 ஆவது திருத் தச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு போதும் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப் பினை வெளியிடாது. புதிய தேர்தல் முறை மைக்கு நாம் முழுமையான ஆதரவினை நல்குவோம் என்றார்.
