எம்.வை.அமீர் -
கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வு 2015-06-29ல் மாநகர முதல்வர் சட்ட முதுமாணி நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றது.
இங்கு தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றிய முன்னாள் பிரதிமுதல்வரும் தற்போதைய உறுப்பினருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸ் சாய்ந்தமருது 16ம் பிரிவிலுள்ள வெலிவோரியன் கிராமத்தை இணைக்கும் பாலத்துக்கு வடக்குத்தெற்காக அமைந்துள்ள பாதைக்கு மர்ஹும் றிஸ்வி சின்னலெப்பை அவர்களின் பெயரை வைப்பதற்கு அவ்வீதியில் வசிக்கும் மக்கள் விரும்புவதாகவும் குறித்த பிரேரணைக்கு சபையின் அங்கீகாரத்தை கோருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய எம்.ஐ.எம்.பிர்தௌஸ், இப்பிராந்திய மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்க்காகப் பயன்படுத்தப்படும் குறித்த வீதிக்கு பெயர் இல்லாது இருப்பது மிகுந்த குறையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
முன்னாள் பாராளமன்ற உறுப்பினரான மர்ஹும் றிஸ்வி சின்னலெப்பை அவர்கள் சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்டவரும், மட்டக்களப்பு தொகுதி முன்னாள் பாராளமன்ற உறுப்பினரான மர்ஹும் லத்தீப் சின்னலெப்பை அவர்களின் மூத்த மகனாக 12-09-1958ல் பிறந்தார்.
இவரது பாட்டனாரான முதலியார் சின்னலெப்பை முதற்பாராளமன்றத்தின் மட்டக்களப்பு பிரதிநிதியாகவும் இருந்துள்ளார். சிறந்த பொறியியலாலரான இவர், தற்போதைய பாராளமன்ற கட்டிட வடிவமைப்பில் முக்கிய பங்கு வகித்தவருமாவார்.
1986ம் ஆண்டு மட்டக்களப்பு பாராளமன்ற உறுப்பினர் பரீத் மீராலெப்பையின் திடீர் மறைவைத் தொடர்ந்து அன்றைய ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியாளராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களால் பாராளமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
1999ல் மறைந்த மாபெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்ட மர்ஹும் றிஸ்வி சின்னலெப்பையை, தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் 2000ம் ஆண்டில் இடம்பெற்ற பாரளமன்ற தேர்தலில் தேசியப்பட்டியலில் இணைத்திருந்தார்.
தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் மறைவைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான தற்போதைய தலைவர் றவூப் ஹக்கீம் அன்னாரை பாராளமன்ற உறுப்பினராகவும் நியமித்தார்.
சாய்ந்தமருது பிரதேச செயலக உருவாக்கத்துக்கு மிகுந்த அற்பணிப்புடன் செயற்பட்ட மர்ஹும் றிஸ்வி சின்னலெப்பை பிராந்தியத்தின் அபிவிருத்திப்பணிகளிலும் சிறந்த பணியாற்றியுள்ளார்.
2002ம் ஆண்டு சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு இவ்வுலகை விட்டும் பிரிந்தார் என்றார்.
அன்னார் இவ்வுலகை விட்டும் பிரிந்தாலும் அவர் செய்த சேவைகள் இப்பிராந்திய மக்களின் நெஞ்சங்களில் இருப்பதாகவும் அவரது நினைவாக குறித்த வீதிக்கு அவரது பெயரை பிரேரிப்பதாக தெரிவித்தார்.
குறித்த பிரேரணையை பிரதி முதல்வர் வளிமொழிந்ததுடன் குறித்த பிரேரணையை சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டதுடன் முதல்வர் நிஸாம் காரியப்பர் குறித்த வீதிக்கான பெயரை இடுவதற்கான உத்தரவை செயலாளருக்கு இட்டார்.


