எம்.அனஸ்
பொத்துவில் ஜெயிக்கா கிராமத்தில் மையவாடியின் எல்லைக்காக நிர்மாணிக்கப் பட்டிருந்த அத்திபாரம் ஆக்கிரமிப்பாளர் ஒருவரினால் உடைக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை(09) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸில் முறையிடப்பட்டதையடுத்து பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
பொத்துவிலுக்கு வடமேற்கு எல்லையில் அமைந்துள்ள இக்குடியேற்றக் கிராமத்தின் மேற்கே முஸ்லிம்களின் அடக்கஸ்த்தலமான சுமார் 6ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த மையவாடி அமைந்துள்ளது. இதன் எல்லைப் பாதுகாப்பிற்காக தெற் கெல்லையில் சுமார் 600அடி நீளமான அத்திபாரமும்
அமைக்கப்பட்டிருந்தது. அதன் ஒருபகுதியே ஆக்கிரமிப்பாளரால் தற்போது உடைத்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இந்த மையவாடி கிழக்கில் எல்லையாக குறித்த கிராமத்தையும், ஏனைய மூன்று எல்லைகளாக வயல் நிலத்தையும் கொண்டுள்ளது. இதன் தெற்காய் அமைந்துள்ள வயல் நிலத்தை புதிதாகக் கொள்வனவு செய்தவரே இந்த ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதாக ஜெயிக்கா மகல்லா வாசிகள் தெரிவிக்கின்றனர்.
விலைக்கு வாங்கிய நிலத்துடன் எஞ்சிய நிலத்தையும் தனதாக்கிக் கொள்ளவே அதற்குத் தடையாக, பொது மையவாடியின் எல்லையில் அமைக்கப்பட்டிருந்த அத்திபாரத்தின் தமது காணியின் எல்லைவரையிலான பகுதியை யாருடைய எந்த அனுமதியுமின்றி உடைத்துள்ளார் என அந்த மகல்லா நிர்வாகிகள் குற்றஞ் சாட்டுகின்றனர்.
உடைத்தவரோ, அந்த அத்திபாரம் வெடித்திருந்ததாகவும், அதனைச் சீரமைக்கவே தான் அதனை உடைத்ததாகவும் தெரிவிக்கின்றார். உண்மையில், அந்த அத்தி பாரம் பல வெடிப்புக்களைக் கொண்டதாகவும், உறுதியற்றதாகவுமே காணப் படுவதை அவதானிக்க முடிகின்றது.
மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸின் நிதி ஒதுக்கீடு ரூபா இரண்டு இலட்சம் செலவில் நிர்மாணிக்கப்பட்ட அந்த அத்திபாரம், ஒப்பந்த வேலைக்காரர்களால் குறித்த நிதி முழுவதும் பாவிக்கப்படாது மோசடியான முறையில் அமைக்கப்பட்டதனால் தான் அது உறுதியற்றதாகவும், வெடிப்புக் களைக் கொண்டதாகவும் காணப்படுகின்றதெனவும், தெரிவிப்பதோடு, பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகத்தர்கள் இந்த அத்திபாரத்தை நேரில் வந்து பார்த்;தால் உண்மை நிலை தெரியவரும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

