சுலைமான் றாபி-
நிந்தவூரிற்கு வந்த ஆயுள்வேத வைத்தியசாலையினை முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எஸ்.எஸ். உதுமாலெவ்வையும், தற்போதைய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூரும் தங்கள் ஊர்களுக்கு கொண்டு போய் நிர்மாணப் பணிகளை செய்துள்ளதாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் நேற்று முன்தினம் (02) நிந்தவூர் ஹிக்மா விளையாட்டுக் கழகத்தின் புதிய அலுவலகக் கட்டிட திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு உரை நிகழ்த்துகையில் :
நிந்தவூரில் ஆயுள்வேத வைத்தியசாலையினை அமைப்பதற்கு சுமார் 4 வருடங்களுக்கு முன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீட்டினைக் கொண்டுவந்த போது அன்று கிழக்கு மாகாண அமைச்சராக இருந்த எம்.எஸ். உதுமாலெவ்வை அவரின் சொந்த ஊரில் ஆயுள் வேத வைத்தியசாலையினை நிர்மாணித்தார். மீண்டும் அடுத்த வருடமும் தங்களால் ஒதுக்கப்பட்ட நிதியினைக் கொண்டு அதன் நிர்மாணப் பணிகளை மேற்கொண்டார்.
இதன் பிறகு மூன்றாவது முறையாகவும் இதற்காக நிதி ஒதுக்கீட்டினை கொண்டுவந்த பொழுது தற்போதைய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் அவர்கள் அவரின் சொந்த ஊரிற்கு கொண்டுசென்று அதன் முதல் கட்ட நிர்மாணப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இவ்வாறு இந்த வைத்தியசாலையின் நிர்மாணிப்பு முயற்சிகள் பயனளிக்காத நிலையிலேயே மீண்டும் இதற்கான நிதிதுக்கீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே இம்முறையாவது நிந்தவூர் பிரதேசத்தின் எந்தப் பகுதியிலாவது இவ்வைத்தியசாலை நிர்மாணித்துக் கொடுக்கப்படும்.
மேலும் அங்கு உரையாற்றிய அவர் :
தற்போது கரைவலைத் தோணிகளில் மீன்பிடிப்பது குறைவாகக் காணப்படுவதனால் மீனவர்கள் மிகவும் சிரமப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர். இவ்வாறான நிலைமைகள் எதிர்காலங்களிலும் தொடராமல் இருப்பதற்கு தனியார் மட்டத்திலே மாலைதீவு நாட்டுடன் சேர்ந்து ஏனைய தனியார் நிறுவங்களின் அதிகாரிகளுடன் நேற்று விஷேட பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளோம்.
அதில் காரைதீவு முதல் அட்டாளைச்சேனை வரைக்குமான பிரதேசங்களில் 10 மீனவ சங்கங்களை அமைத்து அதன் மூலம் ஆழ்கடல் மீன்பிடித் தொழில்களை மேற்கொள்ளக்கூடிய வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. அதில் நிந்தவூர் பிரதேசத்திலும் ஆழ்கடல் மீன்பிடித்தொழிலை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனவே இதன் மூலம் மீனவர்கள் எதிர்காலத்தில் தங்கள் தொழில்களில் அதிகளவு அக்கறையுடன் ஈடுபட வழி வகைகள் செய்து கொடுக்கப்படும்.
அதே போன்று குறைந்த வருமானம் பெறும் 50 ஏழைகளுக்கு கிணறுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தன்னால் நிந்தவூர் வெளவாலோடைப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுக் கொண்டுவரும் புதிய விளையாட்டு மைதான நிதிகளை நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தின் மீள் புனரமைப்பு வேலைகளுக்கு பயன்படுத்த தான் தவறிவிட்டதாக ஒருசாரார் முன்வைக்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும்,
இந்த மைதான மீள் புனரமைப்பு வேலைகள் சம்பந்தமாக அண்மையில் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளைக் கொண்டு பார்வையிட்ட போது இம்மைதானமானது ஆரம்பத்தில் குப்பைகளைக் கொண்டு நிரப்பப்பட்டதனால் இதனை மீள் புனரமைப்பு செய்வதில் இன்னும் பல ரூபாய்கள் செலவாகும் என்பதனால் புதிய மைதானத்தினை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தெரிவித்தார்.
