மஹிந்த ராஜபக்ஷவையும் மைத்திரிபால சிறிசேனவையும் இணைக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட அறுவர் அடங்கிய குழு, சிறந்த அணுகுமுறையை மேற்கொண்டுள்ளதாக, அந்தக் குழுவின் உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி அமைப்பாளர்கள் இணைந்து அண்மையில் மேற்கொண்ட சந்திப்பில், முன்வைக்கப்பட்ட "எதிர்வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக்குவது" என்ற யோசனைக்கு அமைய, தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ எவ்வாறு போட்டியிடுவது, இதனால் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகள் போன்றவற்றை ஆராயவே இந்தக் குழு நியமிக்கப்பட்டதாகவும், அவர் கூறியுள்ளார்.
இந்தக் குழு தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து சிறந்த அணுகுமுறையை மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், எனினும் அதற்கு முன்னதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பொய் கூறி, மக்களை தவறாக வழி நடத்தியுள்ளதாகவும் அத தெரணவுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
மேலும் ராஜித்த சேனாரத்னவால் நிறைவேற்றப்படுவது ரணில் விக்ரமசிங்கவின் தேவைகளே எனவும் இந்தப் பேச்சுவார்த்தைகளை சீர் குலைக்கவே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அண்மையில் இடம்பெற்ற சந்திப்பில் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்களை நிறைவேற்ற, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தது சிறந்த அனுகுமுறை எனவும், எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசவுள்ளதாகவும் தேவை ஏற்படின் விரைவில் கூட்டமைப்பின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராகவோ அல்லது ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அவருக்கு போட்டியிட வேட்பு மனுவோ வழங்கப்பட மாட்டாது என, ஜனாதிபதி கூறியதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
