பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுபல சேனா அமைப்பு புதிய கட்சி ஒன்றை பதிவு செய்யாத நிலைமையில், வேறு ஒரு கட்சியின் மூலம் போட்டியிட உள்ளதாகவும் எந்த கட்சியில் ஞானசார தேரர் போட்டியிட உள்ளார் என்பது இன்னும் தெரியவரவில்லை எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் ஞானசார தேரரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதற்காக பொதுபல சேனா அமைப்பின் முழுப்பலத்தையும் பயன்படுத்த அந்த அமைப்பு தீர்மானித்துள்ளது.
அதேவேளை பொதுபல சேனா அமைப்பு ஊடக சந்திப்பை நடத்தி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விமர்சித்த போதிலும், அவரை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் இருப்பதாக அதன் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
