இனவாதமும் பிரதேச வாதமுமே நமது முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் சாபக்கேடுகளாகும்!

"நமது முன்னேற்றத்திற்கு தடையாக நம்மை பீடித்திருக்கும் இரண்டு சாபக்கேடுகள் இருக்கின்றன. நம் மத்தியில் நிலவும் பிரதேசவாதம் மற்றும் இனவாதம் என்பனவே அந்த சாபக்கேடுகளாகும். இவற்றிலிருந்து மீண்டு வந்தால் மாத்திரமே நமது சமூகங்கள் முன்னேற முடியும்" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் 1 ஆம் திகதி காத்தான்குடியில் நடை பெற்ற NFGGயின் மே தின நிகழ்வின் போது உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

250 க்கும் அதிகமான காத்தான்குடி பிரதேச தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மே தின நிகழ்வில் அவர் ஆற்றிய விசேட உரையின்போது மேலும் தெரிவித்ததாவது;

"மக்களுக்கான அரசியல் என்று சொல்லிக் கொண்டு மக்களின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்திற்கு வந்தவர்கள் அத்தனை பேருமே அந்த மக்களுக்கு எதிரான அரசியலையே முன்னெடுத்தார்கள். மக்களின் நலன்களுக்கு விரோதமான அரசாங்கம் ஒன்று எப்படி இருக்கும் என்பதனை கடந்த ஆட்சிக் காலத்தின் போது நாம் கண்டோம். மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டு பொருளாதாரம் சுரண்டப்பட்டு ஒரு அச்சமான சூழ்நிலையில் நாம் வாழ்ந்தோம்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மக்கள் மேற்கொண்ட அறிவு பூர்வமான தீர்மானமே ஒரு ஆட்சி மாற்றத்தை உருவாக்கியது. கடந்த காலங்களில் பல்வேறு தேர்தல்களில் நாம் வாக்களித்து பல்வேறு கட்சிகளை ஆட்சி பீடத்தில் அமர்த்திய போதிலும் எமது வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் நாம் காணவில்லை. தேர்தல்களினால் எமது அடிப்படைப் பிரச்சினைகளுக்கான எந்தத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை என்ற நம்பிக்கையீனமே மக்களின் மனங்களில் ஆழப்பதிந்திருந்தது.

இந்த நிலையில்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தல் எம்மைநோக்கி வந்தது. அதில் ஒரு புதிய நம்பிக்கையோடும், வேகத்தோடும் நாம் வாக்களித்தோம். அதன் விளைவு ஒரு நீண்ட கால அடக்கு முறையாக மாறிவிடுமோ என நாம் அச்சம் கொண்டிருந்த அந்த ஆட்சி மாற்றப்பட்டது.

என்றாலும் இப்போது நாட்டில் ஏற்பட்டிருப்பது ஒரு முழுமையான நல்லாட்சி கிடையாது. ஒரு நல்லாட்சிக்கான தொடக்கமே இதுவாகும். நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நேர்மையான எண்ணத்தோடும், அர்ப்பணிப்போடும் ஜனாதிபதி மைத்திரி அவர்கள் செயற்பட்டாலும் அதற்கு சாதகமாக ஏனைய அரசாங்க கட்டமைப்புகள் இல்லை. ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட பெரும் பாலானோர்கள் இன்னும் அமைச்சரவையிலும், பாராளுமன்றத்திலும் இருக்கிறார்கள்.

ஜனநாயகத்தை வலுப்படுத்தி நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு அவசியமான சட்ட திருத்தங்களை கொண்டு வரமுயற்சிக்கப்பட்ட போது அதற்கெதிராக போராடியவர்களை நாம் கண்டோம். இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். நல்லாட்சிக்காக அர்ப்பணம் கொண்டு செயற்படும் ஜனாதிபதி அவர்களுடன் கைகோர்த்து செயற்படக்கூடிய பாராளுமன்றம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

நல்லாட்சிக்காக நேர்மையாக உழைக்கக்கூடிய பாராளுமன்ற பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொறுப்பு நமது கைகளிலேயே இருக்கிறது. நம்மை எதிர் நோக்கியுள்ள பொதுத்தேர்தலில் அந்தப் பணியை நாம் சரிவரச் செய்தால் மாத்திரமே நாம் முன்னேற முடியும்.

ஆனால் இந்த முன்னேற்றத்திற்கு தடையாக நம்மை பீடித்திருக்கும் இரண்டு சாபக்கேடுகள் இருக்கின்றன. நம் மத்தியில் நிலவும் பிரதேச வாதம் மற்றும் இனவாதம் என்பனவே அந்த சாபக்கேடுகளாகும். இவற்றிலிருந்து நாம் மீண்டு வந்தால் மாத்திரமே நமது சமூகங்கள் முன்னேற முடியும். 

ஏனைய எல்லா விடயங்களிலும் நல்லது எவை? கெட்டவை எவை? என அறிவு பூர்வமாக சிந்தித்து முடிவெடுக்கும் மக்கள் பாராளுமன்றத் தேர்தல் ஒன்று வந்துவிட்டால் பிரதேச வாதத்தோடும், இனவாதத்தோடும் சிந்திக்கத் தூண்டப்படுகிறார்கள். அரசியலை தொழிலாகச் செய்து வரும் அரசியல் வாதிகளே இவ்வாறு மக்களை வழி கெடுக்கிறார்கள்.

பாராளுமன்றத் தேர்தல் வந்து விட்டால் ஊருக்கு எம்பிவேண்டும் என்ற போலியான பிரதேச வாதக் கோசம் முன்வைக்கப்படுகிறது. இதன் காரணமாக மாவட்ட மக்களுக்கு விசுவாசமாகப் பணியாற்றக்கூடிய தகுதிகளைக் கொண்டவர்களை தெரிவு செய்வதிலிருந்தும் ஒவ்வொரு பிரதேச மக்களும் திசை திருப்பப் படுகிறார்கள்.

அது போலவே, இனவாதமும் வலுப்படுத்தப்படுகிறது. தமிழ் பிரதிநிதியால் முஸ்லிம்களுக்கு ஆபத்து என்ற வாதமும், முஸ்லிம் எம்.பி.யால் தமிழ் மக்களின் நலன்களுக்கு ஆபத்து என்ற மனோ நிலையும் மக்கள் மத்தியில் வளர்க்கப்படுகிறது. இனவாதம், பிரதேச வாதம் என்ற இரண்டு சாபக்கேடுகளிலிருந்தும் நாம் மீளாவிட்டால் எமது சமூகங்கள் ஒருபோதும் முன்னேற முடியாது. எனவே தான் இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய நாம் பாடு பட்டு வருகிறோம்.

ஒரு சமூகத்தின் வலியையும் வேதனையையும் அடுத்த சமூகம் உணர்ந்து கொள்ளும் நிலை உருவாக வேண்டும். அடுத்தவருக்கான உரிமையினையும், நீதியினையும் மனமுவந்து வழங்குகின்ற நிலை உருவாக வேண்டும் என நாம் ஆசைப்படுகிறோம்.

அந்த வகையில் இந்த இன வாத பிரதேச வாத மனோநிலையிலிருந்து விடுபட்டு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மாவட்ட மக்களின் விசுவாசமான பிரதிநிதிகளாக செயற்படக்கூடிய தரமான மனிதர்களை தெரிவு செய்வதற்கு மக்கள் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்."(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -