த.நவோஜ்,ந.குகதர்சன்-
வாழைச்சேனை கடதாசி கம்பனிக்கு கிட்டத்தட்ட 300 ஏக்கருக்கு மேல் காணி இருக்கின்றது. அது தவிர மாவட்டம் முழுவதும் 4000 ஏக்கருக்கு மேல் மேலதிக காணிகள் இருக்கின்றது இவற்றையெல்லாம் சுவீகரிப்பதற்கு திட்டமிட்டு சில அரசியல்வாதிகள் கம்பனியை மூடுவதற்கு ஆர்வம் காட்டுகின்றார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட மேதின நிகழ்வு கல்லடி உப்போடை துளசி மண்டபத்தில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் மற்றும் உறுப்பினர்களாக இரா.துரைரெட்ணம், மா.நடராசா, ஞா.கிருஸ்ணபிள்ளை, கோ.கருணாகரம் உட்பட கட்சி ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இங்கு பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்!
இந்த நாட்டிலே இந்த அரசாங்கம் தொழிலாளர் சார்பாக நடவடிக்கைகளை ஒழுங்காக மேற்கொள்கின்றதா? என்பதை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்று சொன்னார்கள் இன்று இந்த நாட்டில் தொழில் இல்லாத காரணத்தினால் எமது தாய்மார்கள் வறுமை காரணமாக கீழைத்தேய நாடுகளில் பணிப் பெண்ணாக செல்கின்றார்கள்.
அங்கு பணிப்பெண்ணாக தொழில் செய்பவர்கள் அந்த வீட்டில் எஜமானால் துன்புறுத்தப்பட்டு அனுப்பப்படுகின்றார்கள். எத்தனையோ பேர் சவப் பெட்டியில் வருகின்றார்கள். அதுமட்டுமல்ல அங்கு தொழிலுக்கு சென்றவர்கள் நமது நாட்டுக்கு வந்து மீண்டும் தொழிலுக்குச் செல்லும் போது விமான நிலையத்தில் கைது செய்யப்படுகின்றார்கள். சென்ற அரசாங்க காலத்தில் இந்த அநீதிகள் நடந்தது என்று குரல் கொடுத்தோம். ஆனால் இந்த அரசாங்க காலத்திலும் நடக்கின்றது. அண்மையிலே கிட்டத்தட்ட 16 பேர் வரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள்.
வாகரைப் பால்ச்சேனை கிராமத்தில் இருந்து பணிப்பெண்ணாக இரண்டு தடவை கீழைத்தேய நாட்டுக்கு சென்று திரும்பிய ஒரு பெண் மூன்றாவது தடவை செல்லும் போது முன்பு தமிழீழ விடுதலைப் புலியில் சேர்ந்திருந்தார் என்ற குற்றத்திலே தற்போது கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.
சாதாரண கிராம மக்கள் வறுமை காரணமாக வீட்டுப் பணிப்பெண்ணாக செல்லும் போது கூட கைது செய்கின்றார்கள். இந்த அரசாங்கம் அதனை செய்கின்றது. இந்த அரசாங்கத்திலும் இந்த அட்டூழியம் நடைபெறுகின்றது. இவ்வாறு தொழிலாளர்கள் எமது வறுமை காரணமாக பணிப்பெண்ணாக தொழிலுக்கு செல்பவர்கள், மேலை நாட்டிலிருந்த இங்கு வருபவர்கள், இங்கிருந்து செல்வபவர்கள் விமான நிலையத்தில் கைது செய்யப்படுவதை இந்த அரசாங்க நிறுத்த வேண்டும். எமது மக்கள் சுதந்திரமான நடமாட இந்த அரசாங்கம் மக்களுக்கு சுதந்திரத்தை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்.
ஊடகத்தை கையில் வைத்துக் கொண்டு ஊடகத் தொழிலை செய்பவர்கள் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரிக்கப்படுகின்றார்கள். அண்மையில் நான்கு ஊடகவியலாளர்கள் விசாரிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இன்னுமொரு ஊடகவியலாளர் சிறையிலே அடைக்கப்பட்டு இருக்கின்றார். ஊடக சுதந்திரத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறுகின்ற இந்த அரசாங்கம்; ஊடகத்தை தொழிலாக கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களை கைது மற்றும் விசாரணைகளையும் மேற்கொள்கின்றது என்றால் இங்கு ஊடக சுதந்திரம் இருக்கின்றதா? தொழிலாளர் சுதந்திரம் இருக்கின்றதா? சிந்தியுங்கள்.
எங்கள் ஈரளக்குளம் பகுதியில் நீண்டகால வரலாற்றைக் கொண்ட அம்மன் அணைக்கட்டு கடந்த கால யுத்த சூழலால் பாதிக்கப்பட்டது. பல ஏக்கர் கணக்கில் மக்கள் விவசாயம் செய்தார்கள். ஆனால் அண்மையில் அந்த அணைக்கட்டு திருத்தப்பட்டு ஆயிரக்கணக்கான ஏக்கருக்கு நீர் வழங்கி எமது மக்களின் விவசாயத் தொழிலை ஏற்பாடு செய்த போது வனபரிபாலன பகுதியினர் சென்று இது வனபரிபாலன பகுதிக்குரியது. இது புலிகளால் கட்டப்பட்டது இதனை உடன் நிறுத்துங்கள் என்று கூறியுள்ளனர். 300 வருடங்களுக்கு மேலாகவாக புலிகள் இருக்கின்றார்கள்.
எங்களது இனத்தை தொழில் ரீதியாக வளர்க்க முற்படும் போது இவ்வாறான தடைகளை எற்படுத்துகின்றார்கள். ஆனால் மைலத்தமடு, பெரியமாதவனை போன்ற இடங்களில் வேறு இனந்தவர்கள் எங்கள் மாவட்டத்தில் வந்து காடுகளை வெட்டும் போது இந்த வனபரிபாலன பகுதியினர் எங்கே இருந்தார்கள். ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. சிங்களவர்களுக்கு ஒரு சட்டம், தமிழர்களுக்கு ஒரு சட்டமா? எங்கள் மக்கள் தொழில் செய்ய முடியாது.
எமது மாவட்டத்தில் வேறு மாவட்டத்தை சேர்ந்த தமிழ் இனம் அல்லாத வேறு இனத்தவர்கள் வந்து கடல் தொழிலிலே ஈடுபடுகின்றனர். மீன், அட்டை போன்றவற்றை இவர்கள் பிடிப்பதனாலும் எங்கள் மாவட்ட மக்களின் தொழில் பாதிக்கப்பட்டுகின்றது. வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது எந்த முகாமைத்துவக் குழுவுக்கு உரிமை இருக்கன்றது என்று. ஆனால் அதனை மீறி அரசியல்வாதிகள் வெளிமாவட்ட மீனவர்களை இங்கு அனுப்புகின்றார்கள். இதனாலேயே எமது மக்கள் தொழில் பாதிக்கின்றது. இவ்வாறு பலதரப்பட்ட விதத்தில் நாங்கள் பாதிக்கப்படுகின்றோம்.
கடந்த யுத்த சூழலால் எமது மக்கள் விவசாயம் செய்ய முடியாத நிலையில் சில பகுதியை விட்டு வந்தார்கள். ஆனால் அந்தப் பகுதியை இராணுவம் கைப்பற்றிக் கொண்டு அவர்கள் விவசாயம் செய்கின்றார்கள். அவர்கள் இன்னும் எமது மக்களின் காணிகளை எடுக்கின்றார்கள். புணாணைப் பகுதியிலே இராணுவம் விவசாயம் செய்கின்றது. ஆனால் மக்களின் காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது. சுவீகரிக்கப்பட்டதற்கு பதிலாக வழங்கிய காணியிலும் இராணுவம் விவசாயம் செய்கின்றது. இவ்வேளை மீள்குடியேறிய மக்களுக்கு காணி வழங்க வேண்டுமென்றால்; அதை இழுத்தடிப்பு செய்கின்றார்கள்.
வாகரைப் பிரதேச கிரிமிச்சை பகுதியிலே யுத்தத்திற்கு முன் எமது மக்களின் தொழிலாக இருந்த மரமுந்திரிகை செய்கை முற்றாக நிறுத்தப்பட்டு தற்போது கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கர் இடத்தில் அரச பாதுகாப்பு படையினர் சுவீகரித்துக் கொண்டு வீட்டுத் திட்டத்தை ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். அவ்வாறாக இருந்தால் இந்த தொழிலாளர்களின் நிலை என்ன.
வாழைச்சேனை தேசிய கடதாசிக் கம்பனி சாதாரண தொழில் கூடமல்ல. கிட்டத்தட்ட மூவாயிரம் பேருக்கு மேல் தொழில் வழங்கியது. தற்போது 170 பேர் வரையில் தான் வேலை செய்கின்றார்கள். இரண்டு தடவை இலங்கையில் வர்த்தக விருதைப் பெற்றது. இக்கடதாசி கம்பனியின் நிதியில் தான் எம்பிலிபிட்டியா தேசிய கடதாசி கம்பனியை உருவாக்கினார்கள். அதில் இக்கம்பனி பெரும் பங்கை வகித்திருக்கின்றது.
ஆனால் சிங்கள பகுதியில் சிங்கள மக்களுக்கு உதவ வேண்டும் என்ற காரணத்திற்காக எம்பிலிபிட்டியா கடதாசிக் கம்பனியை அவுஸ்லங்கா என்ற நிறுவனத்திற்கு 600 மில்லியனுக்கு கொடுத்து விட்டு பணமும் பெற்றுள்ளது. ஆனால் வாழைச்சேனை கடதாசி ஆலை தற்போது மூடப்படும் நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது.
இயந்திரங்கள் யாவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. தொழிலாளர்கள் முன்பு ஐந்து தடவை சுயவிருப்பத்தில் தொழிலில் இருந்து வெளியேறி உள்ளனர். ஏன் இவ்வாறு வெளியேறினார்கள் இங்கு தொழிலாளர் நலன் பேணும் செயற்பாடு நடைபெறவில்லை. அதற்கான அடிப்படை வசதிகள் செய்யப்படவில்;லை. ஆனால் இப்போது தொழிலாளர்கள் ஐந்து மாதச் சம்பளத்திற்காக இரண்டு வாரத்திற்கு மேலாக போராட்டம் நடத்த வேண்டிய துர்ப்பாக்கிய சூழல் இந்த அரசாங்கத்தில் தான் ஏற்பட்டது. தங்களுடைய சம்பளத்திற்கா நீண்ட நாட்கள் போரடினார்கள். முன்பு ஆலையில் இருந்து விலகிய எத்தனையோ பேருக்கு அவர்களுடைய ஈபிஎப், ஈரிஎப் போன்ற நிதிகள் வழங்கப்படாமல் உள்ளது.
அதுமட்டுமின்றி வாழைச்சேனை கடதாசி கம்பனி ஊழியர்கள் தங்களது பொழுது போக்கை களிப்பதற்காக கூடைப் பந்தாட்டம் விளையாடுவார்கள். ஆனால் தற்போதைய தவிசாளரிடம் இராணுவம் இவ் விளையாட்டு கம்பங்களை கோரியுள்ளது என்பதற்காக அன்பளிப்பு என்ற ரீதியிலே இராணுவத்திற்கு வழங்கியுள்ளார். இன்னும் கொஞ்சக் காலத்தில் அங்கு மிஞ்சியுள்ள மிச்ச இயந்திரங்கள் மற்றும் இரும்புகளையும் இந்த அரசாங்கம் கொண்டு செல்லுமோ என்ற பயம் இருக்கின்றது. சில அரசியல் வாதிகள் அதனை மூடுவதற்கு ஆர்வம் காட்டுகின்றார்கள். ஏனென்றால் அங்குள்ள காணிகள் அவர்களுக்கு தேவை.
இங்கு கிட்டத்தட்ட 300 ஏக்கருக்கு மேல் காணி இருக்கின்றது. அதுதவிர மாவட்டம் முழுவதும் 4000 ஏக்கருக்கு மேலே அதற்காக மேலதிக காணிகள் இருக்கின்றது. இவை முன்பு வயல்களாக பயன்படுத்திய காணிகள். இவர்கள் இவற்றையெல்லாம் சுவீகரிப்பதற்கு திட்டமிட்டார்கள். ஆனால் நாங்கள் ஒரு போதும் இதற்கு அனுமதிக்க மாட்டோம். கடதாசிக் கம்பனி மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும். தொழிலாளர்கள் வெறுமனே சம்பளத்திற்கான போராடாமல், தொழிற்சாலையை கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற வகையிலும் போராட வேண்டும்.
இப்போது 35 கோடிக்கு மேலே மின்சார கட்டணம் கட்ட வேண்டிய நிலையில் கடதாசிக் கம்பனி இருக்கின்றது. இயங்க முடியாத நிலையில் உள்ளது. இந்த அரசாங்கமும் அல்லது முன்பு இருந்த அரசாங்கமும் இந்த தொழிலாளர்கள் பற்றி சிந்திக்கின்றார்களா? சிந்தித்து இருந்தால் இந்த அரசாங்கம் உடனடியாக கடதாசி கம்பனி செயற்பாட்டில் கை வைத்திருக்கும். வடக்கு கிழக்கிலே எத்தனை தொழிற்சாலைகள் மூடப்பட்டு காணப்படுகின்றன.
எத்தனை தொழிலாளர் வேலையில்லாமல் காணப்படுகின்றார்கள். இவற்றை ஏற்று ஏன் இந்த அரசாங்கம் இன்று செய்யவில்லை. நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஒரு தொழிற்சாலையாவது உருவாக்கி மக்களுக்கு தொழில் வழங்கி இருக்கலாம். ஆனால் அவை கூட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எங்கள் பகுதி மக்களுக்கு நடைபெறவில்லை. ஆகவே நாங்கள் முழுக்க முழுக்க ஏமாற்றப்பட்ட சமூகமாக பாதிக்கப்படுகின்றோம்.
முன்பு சின்னப்புல்லுமலை மக்கள் மலையை உடைத்து வீதிகளுக்கு கற்களை விற்பனை செய்து வாழ்வாதாரத்தினை நடாத்தினார்கள். ஆனால் தற்போது அரசியல்வாதிகள் உடைப்பதற்கு இயந்திரங்களை பயன்படுத்தியதால் எங்களது மக்களின் தொழில் இல்லாமல் போய்விட்டது. அரசியல்வாதிகள் கூட எங்கள் மக்களை சீரழிக்கின்ற நிலையை நாங்கள் காண்கின்றோம்.
கடந்த காலங்களிலே கல்வி அதிகாரிகள் அரசியல்வாதிகள் போன்று மாறினார்கள். அவர்கள் அரசியல்வாதியாக இருந்து கொண்டு என்ன செய்தார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவான அதிபர்கள், ஆசிரியர்களை பழிவாங்கினார்கள். இப்போது இப்படலம் சில வலயங்களிலும் நடைபெறுகின்றது. இது விடயமாக மாகாண கல்வி அமைச்சு சிந்திக்க வேண்டும். தற்போது கிழக்கு மாகாண சபையிலே நாங்கள் ஆதரவைக் கொடுத்து ஆட்சிய தக்க வைக்க உதவியுள்ளோம்.
ஆனால் எங்களது அமைச்சர்கள் அதுபற்றி சிந்தக்க வேண்டும். நாங்கள் சாணக்கியம் பேசி அவர்களுக்கு எதுவும் செய்யாது பயந்து கொண்டிருந்தால் அவர்கள் மேய்க்க ஆரம்பித்து விடுவார்கள். அவர்களுக்கு நல்ல பாடம் படிக்க வேண்டுமானால் அவ்வாறான கல்விப் பணிப்பாளர்கள் இடமாற்றப்பட வேண்டும் என இவ்மே தின கூட்டத்திலே வேண்டுகோள் விடுக்கின்றேன். கல்வி அமைச்சு எங்கள் கட்சியில் இல்லாவிட்டால் நிச்சயம் மக்களை ஒன் கூட்டி வீதிக்கு இறங்கி நியாயத்துக்காக போராடி இருப்போம். இப்போதும்; இதற்கு முடிவு கிடைக்காவிடில் கட்சியின் அனுமதியைப் பெற்று மக்கள் போராட்டத்தில் இறங்க தயங்க மாட்டோம்.
எனவே பல வழிகளில் எம் தமிழ் சமூகம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தமிழரசுக் கட்சியோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்போ குட்டக் குட்ட குனிபவர்கள் அல்ல. நாங்கள் மடையர்களாக மாற மாட்டோம்;. நாங்கள் எமது மக்களுக்கா உயிரைக் கொடுத்து என்றும் பாடுபட்டுக் கொண்டிருப்பவர்கள். இனியும் பாடுபடப் போபவர்கள் என்பதைத் தெரிவிக்கின்றேன்.
இவ்வேளை நாங்கள் ஒரு தேர்தலை எதிர்நோக்கி கொண்டிருக்கின்றோம். எங்களது மக்கள் பல வழிகளில் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமோசனத்தை பெற்றுக் கொடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.
ஆகவே மீண்டுமொரு தேர்தலில் தங்களுடைய பொன்னான வாக்குகள் மூலம் எங்களது தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி என்பது நிரூபிக்கப்பட வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் நாங்கள் எங்களது மக்களின் தியாகங்களுக்கான முடிவைத் தேடிச் செல்கின்ற பயணத்தில் நியாயமான வெற்றியை அடைய முடியும். அது உங்கள் கையில் தான் தங்கியிருக்கின்றது.
மே தின கூட்டத்தில் நாங்கள் பேசிக் கொண்டு செல்வதாலோ அல்லது நீங்கள் கேட்டுக் கொண்டு செல்வதாலோ எங்களது நோக்கம் நிறைவேறியதாக கருத முடியாது. நீங்கள் எங்கள் பயணத்திற்கு உறுதுணையாக வெண்டும். புலம்பெயர் உறவுகளும் அவ்வாறே உறுதுணையாக வேண்டும். அவ்வாறு இருக்கும் போது எங்களது வெற்றி என்பது எங்கள் மக்களுக்காக நியாயமானதாக அமையும் என்றார்.(ந)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)