அரசாங்கத்துடன் கைகோர்க்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கும்....!

ற்போதுள்ள ஜனாதிபதி தொடர்ந்து இருப்பாராக இருந்தால் தமிழரின் பிரச்சினை தீர்க்கப்படும் என்கின்ற எமது தலைவரின் கருத்து நிறைவுறுமானால் அவ்வாறான நிலை ஏற்பட்டால் அவ்வாறான அரசாங்கத்துடன் கைகோர்க்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கும். எமக்கு உரிமை கிடைத்த பிறகு நாமும் அபிவிருத்தி சம்மந்தமான அரசியலில் தான் ஈடுபடுவோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் தெரிவித்தார்

மட்டக்களப்பு மாநாகர எல்லைப் பிரதேசமான மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

கடந்த காலங்களில் எமது நாட்டில் இடம்பெற்ற அராஜகங்கள் தமிழருக்கு எதிராக எமது உரிமைகள் மறுக்கப்பட்டமைக்கு எதிராக நாம் பலவகையிலும் போராடி ஓரளவிற்கு எமக்கு தீர்வு கிடைக்கா விட்டாலும் கூட எமது மக்களை அடக்கியாண்ட அரசினை வீட்டுக்கு அனுப்பி தற்போது வந்திருக்கின்ற அரசு ஓரளவிற்கு புரையோடிப் போய் இருக்கின்ற எமது உரிமைப் போராட்டத்திற்கு ஒரு விடிவைத் தரக் கூடிய விடிவெள்ளி போல எமக்குத் தெரிகின்றது.

ஆனால் அது நடக்குமோ நடக்காதோ என்பது தெரியாது ஆனால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இந்த ஜனாதிபதியின் கீழ் அமைகின்ற ஆட்சியை வைத்து எமது மக்களின் உரிமை அபிலாசைக்கு ஒரு தீர்வு கிடைக்கப் பெற்றால் நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மத்திய அரசாங்கத்துடன் செயற்படக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படும்.

நாம் தற்போது கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இங்கு இருக்கும் நிதியினை வைத்து ஓரவிற்குத்தான் எமது மக்களின் நிலையை முன்னேற்ற முடியும். எமது உரிமைகள் பெறப்பட்டு மத்திய அரசாங்கத்துடன் இணையும் போது சகல விதத்திலும் கல்வி, பௌதீகம், மனிதம் போன்ற வளங்களில் பாதிக்கப்பட்டுள்ள எமக்கும் எமது பிரதேசத்திற்கும் முன்னேற்றத்தினைக் கொண்டு வர முடியும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

எமது போராட்டம் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் ஆயுத ரீதியில் மௌனிக்கப்பட்டு இருந்தாலும் தற்போது வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது உரிமைகளுக்குத் தான் முன்னுரிமைக் கொடுத்து போராடிக் கொண்டு இருக்கின்றோம்.

நாங்கள் இந்த நாட்டில் இரண்டாம் தரப் பிரஜையாக இருக்க முடியாது. தெற்கில் இருக்கும் சகல மக்களுக்கும் கிடைக்கும் சகல உரிமைகளும் எமக்கும் கிடைக்க வேண்டும். அதற்காகத் தான் தற்போது நாம் இராஜதந்திர ரீதியாக சர்வேத மேற்குலக நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி எந்தளவுக்கு எமது உரிமைகளைப் பெற்றெடுக்க முடியுமோ அதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

எமது பல பிரதேசங்கள் தற்போது பறிபோய்க் கொண்டிருக்கின்ற நிலையில் எமது எல்லைப் புறக் கிராமங்களில் வாழும் மக்களைப் பாராட்டியே ஆக வேண்டும். எமது காணிகள் பறிபோகா வண்ணம் கட்டிக் காப்பது அவர்கள் தான். இதனை அரசியல் வாதிகளினால் மேற்கொள்ள முடியாது. தற்போது எமது எல்லைப் புற காணிகள் காணி பிடித்தல் என்பதில் கீழ் எம்மிடம் இருந்து பறிக்கப்படுகின்றன. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.

எமது போராட்டத்தில் எத்தனையோ இலட்சக் கணக்கான உயிர்களைப் பறிகொடுத்திருக்கின்றோம். அத்தனை ஆவிகளுக்கும் மேலே நின்று தான் நாம் அரசியல் செய்கின்றோம். போராட்டத்தில் இறந்த பொது மக்களாக இருந்தாலும் சரி போராளிகளாக இருந்தாலும் சரி மிகுதி இருக்கின்ற தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் இறந்தவர்கள்.

அப்படியான கால கட்டத்தில் அரசியல் செய்யும் நாம் அபிவிருத்திக்காக மாத்திரம் பெரும்பாண்மை இனத்தவரின் காலில் போய் விழுந்தால் அந்த ஆத்மாக்கள் எம்மை மன்னிக்காது. அவர்களின் குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக மிகுதியாக இருக்கும் நாம் போராட வேண்டும். அவர்களின் குறிக்கோள்களை முதலில் நிறைவேற்ற வேண்டும் அதன் பின்னர் தான் அபிவிருத்தி பற்றி சிந்திக்க வேண்டும்.

தற்போது ஒரு சுமுக நிலை வந்துள்ளது. எமது தலைவர் சம்மந்தன் ஐயா கூறியிருக்கின்றார் இந்த ஜனாதிபதி அவர்கள் இன்னும் 10 வருடங்களுக்கு ஆட்சியில் இருப்பார் என்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று அவ்வாறு அரசியல் அனுபவம் கொண்ட தலைவர் கூறும் போது அவ்வாறான நிலை ஏற்பட்டால் அவ்வாறான அரசாங்கத்துடன் கைகோர்க்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கும்.

எப்போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு அரசியல் செய்கின்றது என்ற நிலையை மாற்ற முடியும். எமக்கு உரிமை கிடைத்த பிறகு நாமும் அபிவிருத்தி சம்மந்தமான அரசியலில் தான் ஈடுபடுவோம்.

எனவே எமக்கு தற்போதுள்ள தேவை என்னவென்றால் எங்களின் மக்களின் அரசியல் அபிலாசைகள் முதலில் நிறைவேற வேண்டும். அதன் பின்னர் அனைத்தும் தானாக நடைபெறும் என்று தெரிவித்தார்.sa
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -