வாக்காளர் இடாப்புப் பதிவுக்கான விண்ணப்பப்படிவத்தை வீடுகளுக்குச் சென்று வழங்குவதற்கு நடவடிக்கை!

புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - 
வாக்காளர் இடாப்புப் பதிவுக்கான விண்ணப்பப்படிவத்தை வீடுகளுக்குச் சென்று நேரில் வழங்குவதற்கு காத்தான்குடி பிரதேச செயலாளர் நடவடிக்கை!

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள புதிய காத்தான்குடி 167 பீ கிராம உத்தியோகத்தர், 2015ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புப் பதிவு விண்ணப்பப் படிவங்களை குடியிருப்பாளர்களின் வீடுகளுக்குச் சென்று நேரடியாக விநியோகிக்காமல் அவரது அலுவலகத்திற்கு பொதுமக்களை வந்து பெற்றுக் கொள்ளுமாறு விடுத்த வேண்டுகோள் தொடர்பில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம். முஸம்மிலிடம் ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல மத்திய குழுவின் பொதுச் செயலாளர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் இன்று முறையிட்டார்.

அவரது முறையீட்டை கவனத்திற்கெடுத்த பிரதேச செயலாளர், உடனடியாக குறித்த கிராம சேவகரின் நடவடிக்கையை தான் நிறுத்துவதாகத் தெரிவித்தார்.

புதிய காத்தான்குடி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு சுமார் 2500 குடும்பங்களைக் கொண்ட பெரும் கிராமமாக இருப்பதால் குறித்த காலப்பகுதிக்குள் தேர்தல் ஆணையாளரின் பணிப்புக்கமைவாக இப்படிவங்களை வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்வதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாகவும், இதுதொடர்பாக எதிர்வரும் 20ம் திகதி புதன்கிழமை பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த காலங்களிலும் இவ்வாறே வாக்காளர் இடாப்புப் பதிவுக்கான விண்ணப்பப்படிவங்களை வழங்குவதற்காக பொதுமக்கள் கிராம சேவகர்களின் காரியாலங்களுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அங்கு செல்லும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பல்வேறு கஷ்டங்களுக்கும் உள்ளாகியதுடன் தமது அன்றாட வீட்டுப்பணிகளை உரிய நேரத்திற்குள் செய்து முடிப்பதிலும், பாடசாலைகளில் கல்வி கற்று வீடு திரும்பும் தமது பிள்ளைகளுக்கு உரிய வேளைக்கு உணவுகளைச் சமைத்து வழங்குவதிலும் பெரும் சிரமங்களையும் எதிர்நோக்கி வந்தனர்.

நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டதன் பின் முதலாவதாக இடம்பெறும் இந்த 2015ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புப் பதிவுக்கான விண்ணப்பப்படிவ விநியோகத்தை, கிராம உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் சென்று நேரில் கையளித்து அவற்றைப் பூரணப்படுத்திப் பெற்றுக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையாளர் ஊடகங்கள் மூலம் அண்மையில் தெரிவித்திருந்தார். 

எனினும் குறித்த கிராமத்திற்கான கிராம உத்தியோகத்தர் இந்த அறிவுறுத்தலைக் கவனத்திற்கொள்ளாது வழமைப்பிரகாரம் தமது அலுவலகத்திற்கே மக்களை வருகை தந்து விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுமெனக் கேட்டிருந்தது பொதுமக்களை பெரிதும் விசனத்திற்குள்ளாக்கியது.

இதுதொடர்பில் இக்கிராமத்தில் செயற்பட்டு வரும் முகைதீன் மூத்தோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.எம்.எம். அப்துல் காதர் உள்ளிட்ட பலர் ஜனநாயகக் கட்சியின் மத்திய குழு அலுவலகத்திற்கு இன்று காலையில் வருகை தந்து பொதுச் செயலாளரிடம் இதுபற்றி முறையிட்டனர். இதனையடுத்தே இந்த விடயம் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கிராம சேவகரின் அலுவலகத்திற்கு பொதுமக்கள் சாரி சாரியாகச் செல்லும் நடைமுறை வழமைக்கு பிரதேச செயலாளரால் உடனடியாகத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -