பிரபல ஹிந்தித் திரைப்பட நடிகர் சல்மான் கான் மது போதையில் கார் ஓட்டி, விபத்துக்குள்ளாக்கியதில் ஒருவர் உயிரிழந்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி என்று மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில், சல்மான் கான் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
கடந்த 2002-ஆம் ஆண்டு, மும்பையின் பாந்த்ரா பகுதியில் சாலை ஓரமாகத் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏற்றி விபத்துக்குள்ளாக்கியதாக சல்மான் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். இந்த வழக்கின் விசாரணை, மும்பை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
சல்மான் கான் மது அருந்தி விட்டு, இந்த விபத்தை நிகழ்த்தியதாக அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் வாதிட்டனர்.
ஆனால் அந்தக் குற்றச்சாட்டை மறுத்த சல்மான் கான், சம்பவம் நடந்தபோது தாம் காரை ஓட்டவில்லை என்றும் தனது ஓட்டுநர் அசோக் சிங் என்பவர்தான் அந்த விபத்துக்குக் காரணம் எனவும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, தாமே விபத்தை ஏற்படுத்தியதாக சல்மான் கானின் கார் ஓட்டுநர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான தீர்ப்பை மும்பை அமர்வு நீதிமன்ற நீதிபதி தேஷ்பாண்டை புதன்கிழமை வெளியிடுகிறார். இதையொட்டி, நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. செய்தியாளர்கள், வழக்குரைஞர்களைத் தவிர மற்றவர்களுக்கு நீதிமன்றத்துக்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.(ந)
