ந.குகதர்சன்-
தூர நோக்கற்ற, சுய நலத்துடன் கூடிய தமது இருப்பையும் சலுகைகளையும் பலப்படுத்துவதற்கு இன அடையாளத்தை பயன்படுத்த முயற்சிக்கின்றவர்களின் செயற்பாடுகளையும் முனைப்புகளையும் எமது அரச தாதியர் உத்தியோகத்தர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது என அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தேசிய துணை இணைப்பாளர் கு.ஜகநீதன் தெரிவித்துள்ளார்.
இனவாதத்துடன் கூடிய தொழிற்சங்க உருவாக்கத்துக்கான எதிர்ப்பை வெளிப்படுத்தும் அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சனிக்கிழமை வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது!
தாதியச் சேவையானது உலக அளவில் போற்றப்படும் உன்னத சேவையாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. நோயாளர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் அதிகளவு நேரம் செலவிடுவது தாதியருடனேயே. இன, மத, மொழி பேதமற்ற இச் சேவையில் களங்கம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியது தாதியதொழிற் சங்கவாதிகளாகிய எங்கள் கடமையாகும்.
தாதிய தொழிற் சங்கமானது தாதியர் உரிமையை பாதுகாப்பதுடன் தாதியச் சேவையினை மேன்மைப்படுத்தி அதனூடாக ஒரு சிறந்த நோயாளர் பராமரிப்பை வழங்குவதை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் எமது மாவட்டத்தில் இதனை தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.
அண்மைய சில வாரங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் சில வைத்தியசாலைகளில் பணியாற்றும் சில விசேட தேவையுடைய தாதிய உத்தியோகத்தர்கள் அகில இலங்கை தமிழ் தாதியர் சங்கம் என்ற பெயரால் ஒரு தொழிற் சங்கத்தை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இத்தகைய தூர நோக்கற்ற, சுய நலத்துடன் கூடிய தமது இருப்பையும் சலுகைகளையும் பலப்படுத்துவதற்கு இன அடையாளத்தை பயன்படுத்த முயற்சிக்கின்றவர்களின் செயற்பாடுகளையும் முனைப்புகளையும் எமது அரச தாதியர் உத்தியோகத்தர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
இன, மத, மொழி, கலாச்சார அடையாளம் எதுவுமற்ற சுயாதீனமான வலி மொழி மட்டுமே அறிந்ததாக இச்சேவை அமைய வேண்டும் என்பதற்காகவே பொதுவான சீருடையுடன் கூடியதாக இத்தாதிய சேவை உருவாக்கப்பட்டிருக்கின்றது. கடமை நேரத்தில் இன, மத, அடையாளங்களை வெளிப்படுத்துவது தாதிய சேவையின் நீதி நெறிக்கோவைக்கு முரணானது என்பதால் இனவாத தொழிற் சங்கத்தை உருவாக்குவதும் முரணானதே.
பொதுவாக, எமது நாட்டில் தாதிய சேவையை பாதுகாப்பதற்காகவும் தாதியர் உரிமையை பெற்றுக் கொடுக்கவும் பெரும்பான்மை அங்கத்தவர்களைக் கொண்ட சங்கமாக திருசமன் ரத்ன ப்பிரிய அவர்களின் தலைமையின் கீழ் அரச தாதிய உத்தியோகத்தர் சங்கம் இயங்கி வருகிறது. தாதியருக்கான மேலும் இரு சிறிய பெரும்பான்மையற்ற சங்கங்கள் காணப்பட்ட போதிலும் வட கிழக்கு தமிழ் தாதியர்கள் பெரும்பான்மையினர் அங்கத்துவம் வகிப்பது அரச தாதியர் உத்தியோகத்தர்கள் சங்கத்திலேயே.
காரணம், இவ் வடகிழக்கில் பணியாற்றும் தாதியர்களின் விசேட தேவையில் கவனம் செலுத்தும் சங்கமாக அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் ஆரம்ப காலத்திலிருந்தே தொழிற்பட்டமையே ஆகும்.
அதுமட்டுமல்ல, இச் சங்கத்தில் தமிழர்களை கௌரவப்படுத்த தமிழ் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் தலைமையின் கீழ் எமது சங்கம் இயங்குகிறது. சில கட்டங்களில் சுகாதார அமைச்சுடன் தாதியர் கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தமிழ் பிரிவில் உள்ள பிரதிநிதிகளும் முன்னிலைப்படுத்தப்பட்டு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எட்ட பங்களிப்பு செய்வதற்கான இடமும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்மொழியில் சஞ்சிகைகள், வடகிழக்கு மாகாணங்களில் தாதிய வெற்றிடங்களை நிரப்புதல், இலகுவான முறையில் தாதியர் இடமாற்றத்தை மேற்கொள்ளல், வட கிழக்கில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட தாதிய உத்தியோகத்தர்களுக்கு நிதி உதவி வழங்கியமை, தலைமைத்துவ பயிற்சியினை தமிழ் தாதியர்களுக்கு வழங்கி வருகின்றமை, கிழக்கு பல்கலைக் கழகத்தில் மேற்கொண்ட விடுதி முகாமைத்துவ டிப்ளோமா பயிற்சிக்கான அங்கீகாரம் வழங்க சுகாதார அமைச்சு மறுத்த போது எமது அரசதாதியர் உத்தியோகத்தர் சங்கம் முன்னின்று அதற்கு அங்கீகாரம் பெற்றுக் கொடுத்து அதனூடாக தமிழ் தாதிய உத்தியோகத்தர்களுக்கு விடுதி பொறுப்புத் தாதிய உத்தியோகத்தர் பதவியையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டமை.
போன்ற இவ்வாறான பலவித நன்மைகளையும், உரிமைகளையும் தமிழ் தாதியருக்காக எமது சங்கம் பெற்றுக் கொடுத்து வரும் வேளையில், இத்தகைய கௌரவமிக்க சேவையினுள் தமது வாழ் நாளில் தமிழுக்காகவோ, தமிழனுக்காகவோ கடுகளவேனும் செயற்படாத தாதிய சேவையில் விசேட தேவையுடைய சிலர் இப்போது கனிந்திருக்கின்ற சுமுகமான அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்தி ஆதாயம் தேடமுற்படுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தாதியர் நலம் சார்ந்த சகல செயற்பாட்டுகளுக்காகவும் கடந்த 18 வருடங்களாக போராடிய நீண்ட அனுபவம் எமக்குண்டு. இக் காலத்தினுள் எமது சங்கம் வடகிழக்கு தாதிய சமூகத்திற்காக மிக அதிகமான அர்ப்பணிப்புகளை செய்துள்ளதென்பது சகல தாதியருக்கும் தெரிந்த உண்மை. இதனால், எந்தவொரு தாதியருமே இத்தகைய விசம பிரச்சாரங்களைக் கேட்டு மயங்கபோவதில்லை. இருப்பினும் அவர்களால் முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் எதிர்காலத்தில் இச் சமூகத்தை மிகவும் பாதிக்கும்.
குறிப்பாக வட கிழக்கிலே மிக அதிகமான பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த தாதியர்களும், வைத்தியர்களும், வைத்திய நிபுணர்களும் இன, மத, மொழி அடையாளங்களை மறந்து சேவையாற்றுகின்ற போது அவர்களின் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டு வந்து அவர்களின் சேவையை பெற்றுக்கொள்வதில் தடைகலை அமைக்க தாதிய சேவையில் விஷேட தேவையுடைய இத்தகைய குழுவினர் முயற்சிக்கின்றனர்.
1949ம் ஆண்டு ஏதோ ஒரு காரணத்தால் உருவாக்கப்பட்ட விஷேட கொள்கையொன்று படிப்படியாக தமிழினத்தை அழித்து 2009ம் ஆண்டில் பாரிய அழிவை பெற்றுத் தந்ததற்கு ஒப்பான ஒரு தாதிய சேவை அழிவை எதிர்காலத்தில் இத்தகைய அகில இலங்கை தமிழ் தாதியர் சங்கத்தின் அங்குரார்ப்பணம் பெற்றுதர இருப்பதை எமது சங்கம் சுட்டிக்காட்ட முயற்சிக்கின்றது. எதிர்காலத்தில் இலங்கை சட்ட நிலைகளுக்கு அமைய இத்தகைய செயற்பாடுகளுக்கான தடையை பெறுவதற்கு நீதிமன்றம் செல்லவும் எமது அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் பின்னிற்காது.
எனவே, இம் மாவட்டத்தின், மாகாணத்தின் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், சட்டவல்லுனர்கள், புத்திஜீவிகள், தொழிற் சங்கவாதிகள் என்போர் தமது சமூக அக்கறையை இந்த இடத்தில் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். தாதிய சேவையென்பது, கடதாசியுடன் கூடியவேலை அல்ல. இரத்தம், சதை, எலும்பு, உணர்வு கொண்ட உயிர் வாழும் ஜீவன்களின் பரிதவிப்புடன் கூடிய சேவையாகும்.
கடதாசிகளுடன் செய்யப்படும் வேலைகளில் பிழை ஏற்பட்டால் கிழித்தெறிந்துவிட்டு வேறு கடதாசியை பயன்படுத்த முடியும். ஆனால் உயிருடன் கூடிய தாதியத்தில் பிழை ஏற்பட்டால் மீள் பெறமுடியாத இழப்பே ஏற்படும். இன அடையாளத்துடன் கூடிய தாதிய தொழிற்சங்கம் ஒன்றை உருவாக்குவதால் இவர்கள் அடையப்போகும் இலாபம் என்ன? இவர்களால் இச்சமூகத்துக்கு இத்தொழிற்சங்கத்தினூடாகப் பெற்றுக் கொடுக்கவிருக்கும் நன்மை என்ன? தொழிற்சங்க வாதிகளாக இன விகிதாசாரத்திற்கேற்ப சுகாதாரச் சேவையில் இவர்களால் நியமனங்களைப் பெற்றுக் கொடுக்க முடியுமா? என்பதையும் அறிஞர்களும் மக்களும் தீர்மானிக்க வேண்டும்.
எனவே, சகலரும் இதில் கவனமெடுத்து இன அடையாளமற்ற மக்களுக்கான சேவையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என எமது சங்கம் எதிர்பார்க்கின்றது. குறிப்பாக எதிர்காலத்தில் இத்தகையோரின் கோரிக்கைகள் அரசியல்வாதிகளிடம் வரும் போது அவர்கள் தனி நபரை பார்க்காது இச்சமூகத்தின் நலனைப் பார்க்க வேண்டும். தாதியச் சேவையில் உள்ள ஒவ்வொரு தனிநபரின் தேவைக்காக செயற்பட பெரும்பான்மை அங்கத்தவர்களைக் கொண்ட தொழிற்சங்கமாக எமது சங்கம் உள்ளது. எமது அரசதாதியர் உத்தியோகத்தர்கள் சங்கமே இது வரையில் தாதியருக்கான கௌரவத்தினையும் உரிமையையும் பாரபட்சமற்ற முறையிலும் இன பேதமற்ற முறையிலும் பெற்றுக் கொடுத்திருக்கின்றது.
எனவே, இன அடையாளத்தை அரசியல்வாதிகள் இச்சேவையில் ஏற்படுத்தி பிளவை தாதியருள் ஏற்படுத்தக் கூடாது என்பதை வினயமாக கேட்டுக் கொள்கிறோம். தாதியர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக அரசியல்வாதிகளை நாடும் போது அவர்களுக்கான தீர்வை பெற்றுக்கொள்ள நீண்ட அனுபவத்தினுடன் கூடிய தொழிற் சங்கவாதிகளாக நாம் எப்போதும் தயாராக இருப்பதால் எம்முடன் அவ் அரசியல்வாதிகள் தொடர்பு கொண்டு தீர்வை எட்ட முடியும் என பணிவாக தெரிவிப்பதுடன், இச்சேவையை பாதுகாத்து மக்களையும் பாதுகாக்கும் உணர்வுடன் சகலரும் செயற்பட வேண்டுமென எமது அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் வேண்டுகிறது.
