கேன்ஸ் திரைப்படவிருதை வென்ற ஈழத்தமிழ் அகதிகளின் கதை!

பிரபல பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் ஷாக் அவ்தியா(த்) இயக்கிய "தீபன்" திரைப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்துக்கான பாம்தோர் (தங்கப்பனை) விருது வென்றிருக்கிறது. 

பிரான்ஸ் நாட்டுக்கு அகதித்தஞ்சம் கோரி குடியேறும் மூன்று தனித்தனி ஈழத்தமிழ் அகதிகளின் வாழ்க்கைப் போராட்டத்தை விளக்கும் இந்த திரைப்படத்தில் ஈழத்தமிழ் எழுத்தாளரும் முன்னாள் ஈழ ஆயுதப் போராளியுமான ஷோபாசக்தி கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் தமிழ்நாட்டைச்சேர்ந்த மேடை நாடகக் கலைஞர் காளீஸ்வரியும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். 

பிரான்ஸில் குடியேறும் மூன்று வெவ்வேறு ஈழத்தமிழ் அகதிகள் அகதித்தஞ்சம் பெற்றுக்கொள்வதற்காக தற்காலிகமாக தங்களை ஒரு குடும்பமாக இணைத்துக் கொள்கிறார்கள். குடியேறிய அந்நிய நாட்டில், அந்நிய சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்த திரைப்படம் விவரிக்கிறது. 

ஒருவகையில் தனது சொந்த வாழ்வின் போராட்டங்களின் பெரும்பகுதியை இந்த திரைப்படத்தின் கதாநாயகன் தீபன் பாத்திரம் சித்தரிப்பதாக இந்ததிரைப்படத்தில் தீபனாக நடித்திருக்கும் ஷோபா சக்தி தெரிவித்திருந்தார். 

புலம் பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழ் அகதிகள் சந்திக்கும் புறச்சூழல் சார்ந்த பிரச்சனைகளையும், அகச்சூழலில் அவர்கள் எதிர்கொள்ளும் அலைக்கழிப்புக்களையும், மனப்போராட்டங்களையும் பேசக்கூடிய முதல் ஐரோப்பிய திரைப்படம் "தீபன்" என்று பரவலாக பார்க்கப்படுகிறது. 

கேன்ஸில் இந்ததிரைப்படத்தை பார்த்த முன்னணி திரை விமர்சகர்கள் பலரும் இந்த திரைப்படத்தையும், ஷோபாசக்தி மற்றும் காளீஸ்வரியின் நடிப்பையும் பெரிதும் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்த சர்வதேச திரைப்பட போட்டியில் ஹாலிவுட்டின் முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்கள் பல போட்டியில் இருந்தன. அவற்றையெல்லாம் பின்னுக்குத்தள்ளிவிட்டு, முற்றிலும் புதுமுகங்களும், தொழில்முறை திரைப்பட முன் அனுபவமற்ற நடிகர்களும் நடித்த தீபன் திரைப்படம் இந்த சிறப்பு விருதினை வென்றிருப்பது ஐரோப்பிய திரை விமர்சகர்கள் பலரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -