ஏ.எஸ்.எம்.ஜாவித்-
மன்னார் தாராபுரத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் நேற்று (04) மாலை நீரில் மூழ்கி பலியானதாக அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் இருவரும் ஓய்வு பெற்ற தபாலகர் ஏ.ஜி.எம். நௌபர் என்பவரின் புதல்வர்களான முஹமட் சிபான் (28), முஹமட் முபாஸ் (19) ஆகியோராவர்.
மரணமான இரு கோதரர்களின் ஒரு சகோதரர் திருமணமாகி ஒரு வாரமான நிலையில் மேற்படிக் குடும்பத்தினர் சிலாவத்துறைப் பகுதிக்கு பொழுது போக்கிற்காகச் சென்ற சமயமே இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் நேற்று (04) மாலை சுமார் 3.30 மணியளவில் அரிவியாத்துடன் இணையும் அரிப்புத்துறைப் பாலத்திற்கு அருகில் நீராடச் சென்றுள்ளனர். இதன்போது நீரின் அடியில் பாரிய குழி இருந்தது தெரியாது ஒருவர் நீராடியபோது அவர் நீரில் மூழ்குவதைக் கண்ட மற்றய சகோதரர் அவரைக் காப்பாற்றுவதற்காக சென்ற சமயம் இருவரும் நீருக்கடியில் இருந்த குழிக்குள் புதையுண்டு இருவரும் மரணித்தனர் என அருகில் இருந்த மற்றய சகோதரரும், குடும்பத்தாரும் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக தளத்திற்கு வந்த கடற்படையினருடன் பொதுமக்களும் இணைந்து இருவரதும் சடலங்களை எடுத்ததுடன் முருங்கன் பொலிஸாரின் உதவியுடன் சடலங்கள் மன்னார் பொது வைத்திய சாலைக்கு கொண்டு வரப்பட்டதுடன் மன்னார் மாவட்ட பதில் நீதவான் கயஸ் பெல்டானோவின் உத்தரவிற்கு அமைய விசாரணைகள் இடம் பெற்று வருவகின்றது.
முருங்கன் பொலிஸாருடன் மன்னார் நகர பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருவரினதும் ஜனாஸாக்கள் இன்றிரவே உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரு வாரங்களுக்குள் குடும்பங்களோடு கடல் அனர்த்தத்திற்கு பலர் பலியான நிலையில் இன்றைய இந்தச் சம்பவமும் முழு மன்னார் மாவட்டத்தையுமே சோகமயமாக்கியுள்ளது.(ந)
