கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு நல்லாட்சி நடைபெறுகின்றது என்ற போர்வையில் அரசியல் பலிவாங்கல் நிகழ்வுகள் தொடர்கின்றன. மூவின மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் இன ஒற்றுமைக்கும், சமாதானத்திற்கும் பெரும் பங்களிப்பு செய்த அரசியல் கட்சிகளையும், ஆதரவாளர்களையும் பழிவாங்கும் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
மாகாணசபையில் அவசரப் பிரேரணைகள் கொண்டு வந்து பேச வேண்டிய பல முக்கியமான விடயங்கள் இருந்த போதிலும் கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் அவர்களை பதவியில் இருந்து நீக்குவதற்கான அவசர நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளீர்கள்.
கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன இணைந்து தேசிய அரசை உருவாக்கினர். ஆளும் கட்சிக்கு பெரும்பாண்மை பலம் கிழக்கு மாகாணசபையில் உள்ளன. பிரதித் தவிசாளரை நீக்க வேண்டுமென்று நீங்கள் நினைத்திருந்தால் இது தொடர்பாக பிரதித் தவிசாளர் சுபையிரிடம் பேசி விட்டு புதிய பிரதித் தவிசாளரை நியமித்து இருக்கலாம்.
இதனைவிட்டு நாட்டின் நல்லாட்சிக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு ஆதரவு வழங்கிய பிரதித் தவிசாளரை அவசர நம்பிக்கையில்லா பிரேரனை கொண்டு வந்து பதவியிலிருந்து நீக்கி தங்களின் அரசியல் நோக்கத்தினை நிறைவேற்ற முயல்கின்றனர் என கிழக்கு மாகாணசபையின் அமர்வு தவிசாளர் திரு. சந்திரதாச கலப்பதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற போது கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட அவசர நம்பிக்கையில்லாப் பிரேரனை மீது உரையாற்றிய முன்னாள் கிழக்கு மாகாண வீதிஅபிவிருத்தி அமைச்சரும், கிழக்குமாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ். குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பதவியினை பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கட்சியிடம் தமிழ் தேசியக் கூட்டமைக்கு தெரியாமல் ஒரு ஒப்பந்தமும் ,ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களின் சத்திய கடதாசியினைப் பெற்று முதலமைச்சர் பதவியினை பெற்று விட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சிக்கு தெரியாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சியிடம் ஒரு ஒப்பந்தமும் முஸ்லிம் காங்கிரசும் முதலமைச்சரும் செய்துள்ளனர்.
தேசிய அரசு கிழக்கில் அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறி முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான அரசியல் கட்சிகளை கிழக்கு மாகாண சபையில் தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிரஸினர் பழி வாங்கி வருகின்றனர். மறைந்த பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் நமது நாட்டின் அரசியல் கட்சிகளுடன் சிநேக பூர்வமான உறவுகளை பேனி வந்தார். நம்பிக்கையான தலைவராக திகழ்ந்தார். திரு. அசித்த பெரேராவுக்கு எம்.பி பதவியைக் கூட வழங்கினார். இன்றைய முஸ்லிம் காங்கிரஸின் தலைமை அரசியல் கட்சிகளை பழி வாங்கும் நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகின்றன.
இச் சந்தர்ப்பத்தில் கதை ஒன்று நினைவுக்கு வருகின்றன. ஒருவர் தனது வீட்டில் குதிரை ஒன்றையும், ஆடு ஒன்றையும் வளர்த்து வந்தார் சில வருடங்கள் கழிந்த பின்னர் வயது சென்ற குதிரை நோய் வாய்ப்பட்டு எழும்ப முடியாமல் பல நாட்கள் உறங்கிக் கொண்டிருந்தது. பல சிகிச்சைகள் செய்த போதும் குதிரையால் எழும்பி நடக்க முடியாமல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது.
உடனடியாக மிருக வைத்தியரை அழைத்து குதிரைக்கு நடந்த சுகயீனம் குறித்து விபரங்களை கூறிவிட்டு சிகிச்சை செய்ய முடியாவிட்டால் இந்த குதிரையை இறைச்சிக் கடைக்காக விற்பனை செய்ய உள்ளதாக குறிப்பிட்டார். மிருக வைத்தியர் இது விடயமாக யோசித்து விட்டு மூன்று ஊசிகள் குதிரைக்கு போட்டு பார்த்து விட்டு சரிவரவில்லையென்றால் குதிரையை இறைச்சிக் கடைக்கு வழங்குவோம் எனக் கூறிவிட்டு சென்றுவிட்டார்.
டாக்டர் சொன்னதை ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. உடனடியாக குதிரையிடம் சென்று மூன்று ஊசிகள் போடப் போகிறார்கள் நீ எழும்பவில்லையென்றால் உன்னை இறைச்சிக் கடைக்கு விற்பனை செய்யப் போகின்றார்கள் என்ற விபரங்களை குதிரையிடம் ஆடு சொன்னது. குதிரைக்கு இரண்டு ஊசிபோடப்பட்டது. குதிரையால் எழும்ப முடியவில்லை. மூன்றாவது ஊசிபோட ஆரம்பித்தவுடன் குதிரை திடீரென எமுந்து வழமை போல் நடந்தது.
தனதுஉயிர் போகப் போகின்றது என்ற பயத்தினால் தான் குதிரை எழுந்து நடந்தது. எல்லோரும் ஆச்சரியமடைந்தார்கள். உரிமையாளர் நீண்டகாலத்திற்கு பின் குதிரை நடப்பதை கண்டு மகிழச்சியடைந்தான். நண்பர்கள், குடும்பத்தினர் எல்லோரையும் அழைத்து மகிழ்ச்சியில் விருந்துபசாரம் ஒன்றை ஏற்பாடு செய்தான். அந்தவிருந்துபசாரத்திற்கு குதிரையின் உயிரைக் காப்பாற்றிய ஆட்டை அறுத்து விருத்துபசாரத்தை நடத்தினான்.
இதே கதை தான் கிழக்குமாகாண சபையில் நடந்து கொண்டிருக்கின்றது. தன்னை முதலமைச்சராக்க சத்திய கடதாசி வழங்கிய கட்சியினை பழி வாங்கியுள்ளனர். அரசியல் அதிகாரம் நிரந்தரமானதல்ல என்பதனை நீங்கள் உணர வேண்டும். இந்தியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தல் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதிதேர்தல் முடிவுகள் எங்களுக்கு படிப்பினையாக அமைந்துள்ளதுடன் அரசியல் அதிகாரம் திடீரென மாறக் கூடியதென்பதனை நாம் அறிந்துள்ளோம். அரசியல் கட்சியால் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தங்கள் கௌரவமான முறையில் நிறைவேற்றப்பட வேண்டும். நாம் இந்த விடயத்தில் நயவஞ்சகத்துடன் செயல்படக்கூடாது.
இந்தவிடயங்களில் பொய் பேசுவதும், வாக்குறுதியளித்தமைக்கு மாறாக செயற்படுவதும் நம்பிக்கை துரோகம் செய்வது இவ்வாரான நிகழ்வுகளால் நமது முஸ்லிம் அரசியல் தலைமைகள் தொடர்பாக ஏனைய இனத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மத்தியில் பாரிய அதிருப்தி நிலவி நமது சமூகம் தொடர்பாக அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளால் நாம் எல்லோரும் தலை குனிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இறைவனுக்கு அஞ்சாத சில செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கதாகும். கிழக்கு மாகாண முதலமைச்சர் எங்களோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி எங்களை ஏமாற்றிவிட்டார் என்ற செய்தியை மூத்த தலைவரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் அவர்களை சந்தித்து முறையிட்டதுடன் கிழக்கு மாகாண சபை ஆட்சியினை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து அமைப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முதலமைச்சர் பதவியினை தருவதற்கு இணக்கம் தெரிவிப்பீர்களா என தலைவர் இரா.சம்பந்தன் கேட்டார். இது தொடர்பாக ஐந்து கட்சிகளின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துரையாடிய பின் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிழக்குமாகாண முதலமைச்சர் பதவியை வழங்குவதற்கான சம்மதத்தை தெரிவித்தோம்.
இறுதி நேரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு அமைச்சுப் பதவிகளையும், பிரதித் தவிசாளர் பதவியையும் தருவதாக கூறி அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்ட நீங்கள் அரசியல் பழி வாங்கல் நிகழ்வுகளுக்கு ஆதரவளிக்க முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமைச்சர்களான கல்வி அமைச்சர், விவசாய அமைச்சர் கிழக்கு மாகாண சபையை நன்றாக வழி நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடைய அரசியல் பழி வாங்கள் சம்பவங்கள் தொடருமானால் அதற்குரிய முழு பொறுப்பையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே ஏற்றுக் கொள்ளவேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் கடந்த பல வருடங்களாக எதிர்க்கட்சி ஆசனங்களில் இருந்து கிழக்கு மாகாண சபையில் பேசிய விடயங்கள் இந்த கூட்ட மண்டபத்தில் உள்ள காற்றிலும், ஹேன் சாட்டிலும் உள்ளது.
நீங்கள் இன்று கல்வி அமைச்சராகவும், விவசாய அமைச்சராகவும் பதவிகளிலே இருப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த 10 உறுப்பினர்கள் பெரும்பங்களிப்பை செய்துள்ளார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. நாங்கள் முதலமைச்சருக்கு வழங்கிய ஆதரவினை வாபஸ் பெற்றுக் கொண்டதனால்தான் அமைச்சுக்கள் மாற்றப்பட்டு உங்களுக்கான அமைச்சுக்கள் வழங்கப்பட்டன. இல்லையெனில் உங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களை முஸ்லிம் காங்கிரஸ் வழங்கி இருக்க மாட்டாது என்பதுதான் யதார்த்தமாகும்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்கள் மைத்திரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதி ஆக்குவதற்கு ஆரம்பத்திலிருந்து ஆதரவு வழங்கிய தொனியிலே இங்கு உரையாற்றினார். மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதி ஆக வேண்டுமென்று முஸ்லிம் மக்கள் எப்போதோ தீர்மானித்து விட்டார்கள். தபால் மூல வாக்களிப்பு நடைபெற்று தேர்தலுக்கு ஏழு தினங்களுக்கு முன்புதான் முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களிடமிருந்து உச்சமான சலுகைகளை அனுபவித்துவிட்டு இறுதி நேரத்தில் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டனர். இது நமது நாடறிந்த உண்மை நிகழ்வாகும்.
இச் சந்தர்ப்பத்தில் எனக்கு ஒரு பழைய கதை ஞாபகத்திற்கு வருகிறது. ஓலக் கரத்தையை மாடு இழுத்து செல்வது வழக்கம் அந்த ஓலக்கரத்தைக்கு கீழால் நாயும் நடந்து செல்கின்ற பழக்கம் உள்ளது. அந்த நாய் எண்ணுகிறதாம் தான் தான் இந்த ஓலக் கரத்தையை இழுத்து செல்வதாக நினைத்து இந்த ஓலக்கரத்தைக்கு கீழால் நடந்து செல்லுமாம். ஒரு நாள் நாய் சலம் கழிப்பதற்காக காலை கிழப்பி சலம் கழித்துக் கொண்டிருக்கும் போது கரத்தை சென்று கொண்டிருந்தது.
இதன் பின்புதான் நாய் உணருமாம் இவ்வளவு நாளும் இந்த ஓலக்கரத்தையை நான் இழுக்கவில்லை மாடுதான் இழுத்து செல்கின்றது என்று நினைத்து ஆச்சரியமடையுமாம் அதே நிலைமைதான் முஸ்லிம் காங்கிரஸின் நிலைமையும் அமைந்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனா அவர்களுக்கு ஆதரவு கொடுக்கா விட்டாலும் முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் திரு. மைத்திரிபால சிறிசேனா வெற்றி அடைந்திருப்பார் எனக் குறிப்பிட்டார்.
