சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அதன் தேசிய அமைப்பாளரும், தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் உபதலைவருமான சபீக் ரஜாப்டீனுடனான நேர்காணல் கடந்த 30.03.2015 திங்கட்கிழமை கொழும்பு ரட்மலானையில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் அதிகார சபையில் இடம் பெற்றது.
அதன் விலாவாரியான விடயங்கள் எமது வாசகர்களுக்காக;
அஹமட் இர்ஸாட்:- சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளராக இருக்கும் நீங்கள் கொழும்பு மாவட்டத்தில் வாழ்ந்தும் உங்களை தொலைகாட்சிகளிலோ அல்லது ஊடகங்களிலோ காணக்கிடைக்கின்றமை அரிதாக உள்ளது. இதற்கு என்ன காரணம்?
சபீக் ரஜாப்டீன்:- நாங்கள் எங்களுடைய கட்சியின் தலைமையினை முற்று முழுதாக ஏற்றுக்கொண்டு அதனடிப்படையில் தீர்மானங்களை மேற்கொள்கின்றவர்கள். கட்சியின் தலைமை அதியுயர் பீடத்துடன் ஒன்று கூடிய என்ன தீர்மானங்களை எடுக்கின்றதோ அதனடிப்படையில் நாங்கள் எமது கருத்துக்களை ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு தெரிவித்து வருகின்றோம். அதனோடு சென்ற அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்துக் கொண்டிருந்த நாங்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் உரிமைகளுக்காகவும் எமது கட்சியினை சக்தி மிக்க கட்சியாக உருவாக்கும் நோக்கத்துடனேயே தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன அவர்களுக்கு ஆதரவளித்து இந்த அரசாங்கத்துடன் எமது பயணத்தை முன்னோக்கி அமைத்து வருகின்றோம்.
அஹமட் இர்ஸாட்:- ஜனாதிபதி தேர்தலுக்கு முற்பாடு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தாயகமான கிழக்கு மாகாணத்திலே கடுமையான வீழ்ச்சியே காணப்பட்டது. ஆனால் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறீசேனவுக்கு எழும்பிய அலையோடு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் கிழக்கு மாகாணத்திலே தலை உயர்த்துகின்றது. ஆகவே இப்பொழுது கிழக்கு மாகாணத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இருக்கின்ற அலை ஜனாதிபதி மைத்திரிபாலவின் அலையா? அல்லது உண்மையில் உங்களின் கட்சிக்கு இருக்கின்ற அலையா?
சபீக் ரஜாப்டீன்:- சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இருந்த இருக்கின்ற அலை என்பது ஜனாதிபதி மைத்திரிபாலவை அவர் இருக்கின்ற முக்கியமான இடத்துக்கு கொண்டுவருவதற்கு முக்கியமாக தேவைப்பட்ட அலையாகவே நான் கருதுகின்றேன். நாங்கள் கடைசி நேரத்தில் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு ஆதரவு தெரிவித்ததினால்தான் இவ்வாறு கிழக்கில் இருக்கின்ற அலை மைத்திரியின் என்று பேசப்படுகின்றது.
தேர்தலில் கடைசி நேரம் வரைக்கும் நாங்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறாமல் இருந்தமைக்கு முக்கிய காரணம் சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து விட்டது என்ற தேர்தல் பிரச்சாரத்தை தென்னிலங்கையில் கடும்போக்குவாதிகளினால் மேற்கொள்ளப்பட்டால் அது ஜனாதிபதி மைத்திரிபாலவின் வெற்றியை சரித்துவிடும் என்பதற்காகவேயாகும்.
எனவே கிழக்கு என்பது முஸ்லிம் காங்கிரசின் தாயகம் அங்கு எழும்புகின்ற அலை என்பதும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அலையேயாகும்.
அஹமட் இர்ஸாட்:- தென்னிலங்கையை பொறுத்தவரையில் சமகாலத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சரிந்த நிலையில் காணப்படும் இந்நேரத்தில் நீங்கள் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதாக பரவலாக பேசப்படுக்கின்றது. இவ்வாறான நிலையில் நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சியிலா அல்லது உங்களுடைய கட்சி சின்னத்திலா போட்டியிடுவீர்கள்?
சபீக் ரஜாப்டீன்:- எதில் போட்டியிவது என்பது பற்றி எங்களுடைய கட்சியின் உயர்பீடம் கூடி எடுக்கின்ற முடிவிலேயே தங்கியுள்ளது. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் தற்போது கொழும்பு மாவட்டத்தை பொதுத் தேர்தலுக்காக தயார்படுத்தி வருகின்றேன். கொழும்பை பொறுத்தவரையில் 2001ல் மாநகர சபையில் ஆறு உறுப்பினர்களையும், அதற்குப் பின்னால் 2004ல் மாகாண சபையில் இரண்டு உறுப்பினர்களையும் பெற்றிருந்தோம். அதே நேரத்தில் எமது தலைமைத்துவத்தின் கோரிக்கையாக எப்போதும் இருப்பது கொழும்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனியாக போட்டியிட்டு ஒரு ஆசனத்தை வென்றெடுக்க வேண்டும் என்பது. அதனடிப்படையில் வரலாற்றில் முதன்முதலாக முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டு 48,330 விருப்பு வாக்குகளையும் பெற்று பாராளுமன்றம் அனுப்பியது. அந்த வாக்குகளை நான் பெற்று பாராளுமன்றம் சென்றேன் என்பது எனது கட்சிக்கும், எனக்கும் கொழும்பு மக்களால் கொடுக்கப்பட்ட கெளரவமாகவே நினைக்கின்றேன்.
அதனை வருகின்ற பொதுத்தேர்தலிலும் இரட்டிப்பான முறையில் கொழும்பு மக்களால் எங்கள் கட்சிக்கு அளிக்கப்படும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.
அஹமட் இர்ஸாட்:- சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெறுவதற்கு முற்பாடு அகில இலங்கை முஸ்லிம் லீக் என்னும் அமைப்பு இருந்து வந்தது. அந்த அமைப்புத்தான் தற்போது முஸ்லிம் கட்சிகள் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் அப்போது மேற்கொண்டு வந்தனர். அதிலும் முக்கியமாக பாராளுமன்ற தெரிவுக் குழுவிலும் அங்கத்துவம் வகித்திருந்தனர். அந்த வகையில் அகில இலங்கை முஸ்லிம் லீக்கினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைக் கூட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ள தவறுகின்றது என்ற குற்றச்சாட்டு பரவலாக காணப்படுக்கின்றது இதனை எந்த கோணத்தில் பார்க்கின்றீர்கள்?
சபீக் ரஜாப்டீன்:- உண்மையாக 1977ஆம் ஆண்டு நாங்கள் பார்த்த அகில இலங்கை முஸ்லிம் லீக்கினுடைய சேவையானது நாட்டின் முஸ்லிம் மக்களுக்கு கிடைத்த பெரும் சேவையாகவே நாங்கள் கருதுகின்றோம். அப்போது நாட்டில் இஸ்ரேலின் ஊடுருவல்களுக்கு எதிராக கடுமையான முறையில் தூர நோக்கு சிந்தனையுடன் உழைத்தது முஸ்லிம் லீக். ஆனால் அதற்கு பிற்பாடுதான் அரசியல் ரீதியாக பெறும்பான்மை கட்சிகளுக்கு கீழ் நின்று கொண்டு அரசியலில் முஸ்லிம் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியாது என்ற நிலைமைக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் தள்ளப்பட்டதன் விளைவாக கிழக்கு மாகாணத்தை தாயகமாக கொண்டு ஒட்டு மொத்த கிழக்கு முஸ்லீம்களின் ஆதரவுடன் முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெருகின்றது. அந்த வகையில் அகில இலங்கை முஸ்லிம் லீக்கை விடவும் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக முஸ்லிம் காங்கிரஸ் குரல் கொடுத்தும் சாதித்து காட்டியும் இருக்கின்றது என்பது அது கடந்து வந்த அரசியல் வரலாற்றினை பார்க்கும் போது வெளிப்படையாக தெரிகின்ற உண்மையாகும்.
அஹமட் இர்ஸாட்:- தற்போது முஸ்லிம்களினுடைய பிரச்சினைகளை பற்றி முஸ்லிம் காங்கிரஸ் அலட்டிக்கொள்வதில்லை என்ற பேச்சு பலராலும் முன்வைக்கப்படுகின்றது. இதன் உண்மை நிலை என்ன?
சபீக் ரஜாப்டீன்:- சரியான நேரத்தில் எமது தேசிய தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமும் நாங்களும், எங்களுடன் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து இணக்கப்பாட்டு அரசியலுடன் அரசாங்கங்களுடன் சேர்ந்து முஸ்லிம் சமூகத்துக்காக எதைச் செய்ய வேண்டுமோ அவற்றை எல்லாம் செய்து கொண்டே இருக்கின்றோம்.
சபீக் ரஜாப்டீன்:- சரியான நேரத்தில் எமது தேசிய தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமும் நாங்களும், எங்களுடன் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து இணக்கப்பாட்டு அரசியலுடன் அரசாங்கங்களுடன் சேர்ந்து முஸ்லிம் சமூகத்துக்காக எதைச் செய்ய வேண்டுமோ அவற்றை எல்லாம் செய்து கொண்டே இருக்கின்றோம்.
முஸ்லிம்களின் உரிமைகள் சம்பந்தமாக தேசிய ரீதியில் பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் நாங்கள் சர்வதேச ரீதியாகவும், அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டும் குரல் கொடுத்து வந்திருக்கின்றோம். மற்றைய இனவாத கட்சிகள் பரப்புக்கின்ற இனவாத கருத்துக்களை ஒத்ததாக நாங்களும் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்காமல் அதனை ஓர் அரசியல் சானக்கியமிக்கதாகவும், அரசியல் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதாகவும், சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலும் எமக்கு வாக்களித்த முஸ்லிம் மக்களுக்காக செய்து வருக்கின்றோம்.
அஹமட் இர்ஸாட்:- குர்ஆன் ஹதீஸ்களை முன்வைத்து உருவாக்கப்பட்ட கட்சியான முஸ்லிம் காங்கிரஸ், இது வரைக்கும் முஸ்லிம் கலாச்சார அமைச்சினை பொறுப்பெடுத்து முஸ்லிம் சமூகத்துக்காக சேவை செய்யாமைக்கான காரணம் என்ன?
சபீக் ரஜாப்டீன்:- கடந்த பத்து ஆண்டு காலமாக இருந்த மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு குறிப்பிட்ட அமைச்சினை ஏற்படுத்தி முஸ்லிம்களுக்கு சேவை செய்யக்கூடிய அரசாங்கமாக இருக்கவில்லை. இருந்தும் மறுபக்கத்தில் முக்கிய முஸ்லிம்களின் அமைச்சர்களாக இருந்த பெளசி, காதர் போன்றோர் தனக்குத்தான் இந்த அமைச்சினை தர வேண்டும் என முரண்பட்டுக் கொண்டிருந்தமையினால் அரசாங்கங்களுக்கு இது ஒரு சாதகமான விடயமாக அமைந்து விட்டது.
முதலில் முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூதாயத்தின் நன்மை கருதி சில முக்கிய விடயங்களில் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். அப்போதுதான் இவ்வாறான விடயங்களில் பொதுவான வெற்றியை பெற்றுக்கொள்ள முடியும். அதே நேரத்தில் தற்போதைய அரசாங்கத்தில் கண்டியை சேர்ந்த எம்.எச்.எம்.ஹலீமுக்கு அந்த அமைச்சு கொடுக்கப்பட்டுள்ளதை நினைத்து பெருமைப்படும் அதே இடத்தில் முஸ்லிம் காங்கிரசுக்குத்தான் அந்த அமைச்சு கிடைக்க வேண்டும் என்பதனை விட முஸ்லிம் ஒருவருக்குத்தான் அந்த அமைச்சு கிடைக்க வேண்டும் என்ற கருத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் இருந்து வருக்கின்ற கட்சியாகும். அதனோடு அமைச்சர் ஹலீம் மேற்கொள்ளும் சேவைகளை திறம்பட செய்வதற்கு எங்கள் கட்சி பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
அஹமட் இர்ஸாட்:- உங்களுடைய தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் வருகின்ற பொதுத்தேர்தலில் சம்மாந்துறையில் அல்லது மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக பரவலாக பேசப்படுக்கின்றது. நீங்கள் கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் இதன் உண்மை நிலை என்ன?
சபீக் ரஜாப்டீன்:- பலரும் பலவாராக பேசலாம். ஆனால் கட்சியின் தலைவர் கண்டி மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்துக்கின்ற அமைச்சராக உள்ளார். வரலாற்றினை பார்க்கும் போது தலைமைத்துவத்துக்கு சவால் வரும் பட்சத்தில் தலைமைத்துவமானது நாட்டில் ஏனைய பகுதிகளுக்கு சென்று போட்டியிடும் நிலைமைக்கு தள்ளப்படும். அந்த வகையில் அம்பாறை, திருகோணமலை போன்ற பிரதேசத்தில் சென்ற காலங்களில் போட்டியிட்டு வெற்றியடைந்துள்ளது. அப்படியான சவாலினை ஏற்றுக்கொள்ளும் தலைமையாக எமது தலைமைத்துவம் இருக்கின்றது. ஆகவே எங்கு சென்றாலும் வெற்றியீட்டக்கூடிய தலைமை எங்கள் தலைமை என்பதில் நாங்கள் பெருமைப்படுகின்றோம்.
அஹமட் இர்ஸாட்:- ஏனைய பகுதிகளுக்கு சென்று தேசிய தலைவர் என்ற வகையில் முஸ்லிம்கள் அவரை கெளரவப்படுத்தி வாக்களிக்கின்றனர். இதனால் அவர் போட்டியிடுகின்ற தொகுதி மக்களின் பிரதி நிதித்துவம் இழக்கப்படுவதாக நீங்கள் கருதவில்லையா?
சபீக் ரஜாப்டீன்:- கிழக்கு மாகாணத்தின் சக்தி மிக்க கட்சியாகவே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கின்றது. ஆனால் தென்னிலங்கையில் அவ்வாறு இல்லை. முஸ்லிம்கள் சிங்கள மக்களோடு செரிந்து வாழுகின்றனர். பெரும் தலைவர் அஸ்ஸஹீத் அஸ்றஃப் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையும், அவர் மேல் கிழக்கு மாகாண மக்கள் வைத்திருந்த நம்பிக்கையையும் போன்று தற்போதைய எமது தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களாலும் கிழக்கு மாகாணம் கைவிடப்படமாட்டாது என்ற நம்பிக்கையுடன் கிழக்கு மாகாண மக்கள் இருக்கின்றனர். அதனால் எமது தலைவர் கிழக்கு வாழ் முஸ்லிம்களை ஒரு போதும் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கை கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற வகையில் ஓர் நிலையான கருத்துடன் இருக்கின்றேன்.
சபீக் ரஜாப்டீன்:- கிழக்கு மாகாணத்தின் சக்தி மிக்க கட்சியாகவே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கின்றது. ஆனால் தென்னிலங்கையில் அவ்வாறு இல்லை. முஸ்லிம்கள் சிங்கள மக்களோடு செரிந்து வாழுகின்றனர். பெரும் தலைவர் அஸ்ஸஹீத் அஸ்றஃப் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையும், அவர் மேல் கிழக்கு மாகாண மக்கள் வைத்திருந்த நம்பிக்கையையும் போன்று தற்போதைய எமது தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களாலும் கிழக்கு மாகாணம் கைவிடப்படமாட்டாது என்ற நம்பிக்கையுடன் கிழக்கு மாகாண மக்கள் இருக்கின்றனர். அதனால் எமது தலைவர் கிழக்கு வாழ் முஸ்லிம்களை ஒரு போதும் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கை கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற வகையில் ஓர் நிலையான கருத்துடன் இருக்கின்றேன்.
அஹமட் இர்ஸாட்:- இப்போது உங்கள் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபாலவின் அரசாங்கத்துக்கும் இடையில் உள்ள அரசியல், இணக்கப்பாட்டு அரசியாலா? அல்லது சரணாகதி அரசியலா?
சபீக் ரஜாப்டீன்:- பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஜனாதிபதியுடன் இருப்பதனால் நாங்கள் இணக்கப்பாட்டு அரசியலையே தற்போது மேற்கொண்டு வருகின்றோம். அதே இடத்தில் ஜனாதிபதி மைத்திரிபாவுக்கு நன்றாக தெரியும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பலம் எத்தகையது என்று. அவருடைய வெற்றியின் அம்சமாகவும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கின்றது. இன்ஸா அல்லாஹ் எதிர்காலத்தில் நாங்கள் எதற்கும் தலைகுனியாமல் அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டு அரசியல் ஊடாக முஸ்லிம் மக்களுக்கு எங்களால் முடிந்தவற்றை அடிப்படை உரிமைகளுக்கு பாதிப்பு வராத வண்ணம் மேற்கொள்வோம்.
அஹமட் இர்ஸாட்:- உங்களுடைய கட்சியின் தேசிய தவிசாளர் முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் உங்களுடைய கட்சியில் இருக்கின்றாரா? வெளியில் உள்ளாரா? அல்லது கட்சிக்கு வெளியில் இருந்து கொண்டு உங்கள் கட்சிக்கு ஆதரவளிக்கின்றாரா? ஏன் அவரை கட்சி சார்பாக தொலைக்காட்சிகளில் காணக்கிடைப்பதில்லை?
சபீக் ரஜாப்டீன்:- எங்கள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் எங்களுக்கு மிகவும் அண்மையில் இருக்கும் நண்பராகவே இன்றும் இருந்து வருகின்றார். அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அவரை பலரும் பல கோணத்தில் பார்த்து வருகின்றனர். எங்கள் கட்சியின் தலைமைக்கும் பசீர் சேகுதாவூத்துக்கும் இருக்கின்ற ஒற்றுமையை யாராலும் பிரித்து விட முடியாது.
அஹமட் இர்ஸாட்:- உங்களுடைய கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் அண்மைக்காலமாக தான் கலந்து கொள்ளும் விழாக்களில் தமிழ் தேசிய வாதத்துடன் சேர்ந்தே முஸ்லிம்கள் தங்களுடைய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்துக்களை தெரிவித்து வருக்கின்றார். அதனை மிகவும் வலுப்படுத்தும் முகமாக கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சு பதவிக்கான பிரச்சினை எழுப்பப்பட்ட வேளையில் மிகுதமாய் இருக்கின்ற காலப்பகுதியினை முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தினையும் தெரிவித்திருந்தார். இவ்வாறான கருத்துக்கள் உங்கள் கட்சியின் கொள்கையை மீறுவதாக அமையவில்லையா?
சபீக் ரஜாப்டீன்:- சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதியுயர் பீடத்துக்குள் வித்தியாசமான முறையில் கருத்துக்கள் பரிமாறப்படுவது வழக்கமான விடயமாகும். தலைமைத்துவம் கூறும் கருத்துக்களுக்கு முற்றுமுழுதாக ஆமாப் போடும் அணியினரும் உள்ளனர். ஆனால் மறுபக்கத்தில் தலைமைத்துவத்தின் கருத்துக்களுக்கு மாறுபட்ட விதத்திலும் விசுவாசமான கோணத்திலும் அரசியல் கருத்துக்களை வெளியிடும் அணியினரும் உள்ளனர். ஆகவே இதுதான் எமது கட்சியின் அதியுயர் பீடமாகும். இங்கு எல்லோருடைய கருத்துகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு மசூரா அடிப்படையில் தீர்மானம் எட்டப்படும். பசீர் சேகுதாவூத் தெரிவிக்கின்ற கருத்துக்கள் அவருடைய சொந்த கருத்துக்களாகவே நான் பார்க்கின்றேன்.
அஹமட் இர்ஸாட்:- கல்குடா உட்பட பல பிரதேசங்களுக்கு தேர்தல் காலங்களில் தேசியப்பட்டியல் தரப்படும் என்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டும் தேர்தலுக்கு பிற்பாடு அப்பிரதேசங்களுக்கு வழங்கப்படாமல் வேறு பிரதேசங்களுக்கே வழங்கப்படுக்கின்றது இதற்கு என்ன காரணம் என நினைக்கின்றீர்கள்?
சபீக் ரஜாப்டீன்:- தேசியப்பட்டியலை நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தி இதற்கு முன்பு பசீர் சேகுதாவூத்திற்கு கொடுத்திருக்கின்றோம். கல்குடாவில் பாராளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்தும் படியாக மொஹைதீன் அப்துல் காதர், அமீர் அலி போன்றோர் இருந்தனர். ஆனால் தேசியப்பட்டியல் பிரதி நிதித்துவத்தை பலபகுதிகளில் இருந்து வருகின்ற அழுத்தம் காரணமாக குறிப்பிட்ட பிரதேசத்துக்கு கொடுக்கப்படுவதில் கட்சியின் தலைமையானது பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருக்கின்றது. எதிர்காலத்தில் மசூரா அடிப்படையில் தலைமையும் உயர்பீடமும் கலந்தாலோசித்து கல்குடா பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் கொடுக்கப்படும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது.
அஹமட் இர்ஸாட்:- நீங்கள் தற்போது உபதலைவராக உள்ள தேசிய நீர்வழங்கல் அதிகார சபையில் ஏற்கனவே இடம்பெற்ற ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டுவீர்களா? அல்லது அதனை மறைத்து விடுவதற்கு நீங்களும் உடந்தையாக இருப்பீர்களா?
சபீக் ரஜாப்டீன்:- மக்களுடைய கோரிக்கை ஊழல்கள் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட வேண்டும் என்பது. நான் இதனை பாரம் எடுத்து இரண்டு கிழமைகளே ஆகின்றது. இன்ஸா அல்லாஹ் சகல ஆவணங்களையும் முறைப்படி தன்னிடம் சமர்பிக்குமாறு கேட்டுள்ளேன். மிக விரைவில் மக்களுடைய வேண்டுகோள் நிறைவேற்றப்படும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கின்றேன்.
அஹமட் இர்ஸாட்:- கல்குடா பிரதேசத்தில் மக்கள் செரிவாக வாழுகின்ற பிரதேசங்களில் குடிநீரானது முற்றாக மாசடைந்து கணப்படுக்கின்றது. நீங்கள் தற்போது பொறுப்பெடுத்துள்ள தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் மூலம் கல்குடா மக்களுக்கான தூய குடிநீர் பிரச்சனைக்கு தீர்வினை கொடுப்பீர்களா?
சபீக் ரஜாப்டீன்:- அமைச்சர் ரவூப் ஹக்கீமின் முக்கியமான திட்டங்களில் ஒன்றுதான் கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற அனைவருக்கும் தூய குடிநீரினைப் பெற்றுக்கொடுப்பதாகும். அதற்காக வெளிநாட்டு உதவிகளுடன் மிக விரைவில் தூய குடிநீர் கிடைக்கும் படியான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். விசேசமாக கல்குடா பிரதேசத்தின் தூய குடிநீர் பிரச்சினையை மிக விரைவில் தீர்த்து வைப்பதற்காக திறந்த கேள்வி மனுக்கோறல்களை வெளியிட்டிருக்கின்றோம்.
அஹமட் இர்ஸாட்:- கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் மீள்வருகைக்குப் பிற்பாடு உங்களுடைய கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தின் அரசியல் ஆட்டம் கண்டு விட்டதாக பரவலாக பேசப்படுக்கின்றது. இது சம்பந்தமாக தேசிய அமைப்பளர் என்ற ரீதியில் உங்களுடைய கருத்து என்ன?
சபீக் ரஜாப்டீன்:- அது முதலமைச்சருக்கும் முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவுத்துக்கும் அரசியல் ரீதியாக இருக்கின்ற சவாலாகும். அதனை நான் சாதாரண விடயமாகவே பார்க்கின்றேன். பசீர் சேகூதாவூத் அமைச்சராக இருந்த பொழுது பலர் பின்னால் ஓடினார்கள். தற்போது முதலமைச்சுக்கு பின்னால் ஓடுகின்றார்கள். இவ்வாறான விடயங்கள் அரசியலில் சர்வ சாதாரணமாக இடம் பெறுவதுண்டு. கல்குடாவுக்கு தேவை முக்கியமாக சிறந்த தலைமைத்துவமாகும். அதனை தலைவர் உருவாக்குவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.
அஹமட் இர்ஸாட்:- கிழக்கு மாகாண சபையில் ஏனைய முஸ்லிம் கட்சிகளை பிரதிநிதித்துவப் படுத்துக்கின்றவர்கள் முஸ்லிம் காங்கிரசினால் ஒதுக்கப்படுவதாக பேசப்படுக்கின்றது அதனை எவ்வாறு நீங்கள் பார்க்கின்றீர்கள்?
சபீக் ரஜாப்டீன்:- கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கும், அதாவுல்லா அணியிருக்குமிடைலேயே அரசியல் போட்டி இருக்கின்றது. ஆகவே அரசியல் ரீதியான போட்டிகள் வரும் போது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் அரசியலை விட்டுக் கொடுப்புச் செய்ய பின்நிற்காது.
அஹமட் இர்ஸாட்:- முஸ்லிம் காங்கிரசின் தோற்றப்பாட்டுக்கு பிற்பாடுதான் காவி உடையணிந்தவர்கள் இலங்கை பாராளுமன்றத்துக்குள் நுழைந்தார்கள் என்று பரவலாக இருக்கும் கருத்தினை தேசிய அமைப்பாளர் என்ற வகையில் நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா?
சபீக் ரஜாப்டீன்:- நிச்சயமாக இல்லை. ஒரு மனிதன் வேலைத்திட்டத்தினை செய்யும் போது மிகச்சரியாகவும் எல்லா, விடயத்திலும் குறையில்லாமலும் செய்துவிட முடியாது. அந்தவகையில் எமது கட்சியானது அரசாங்கங்களை தீர்மாணிக்கின்ற சக்தியாக காணப்படுவதனால் பெரும்பான்மை சமூகத்தினரிடம் இவ்வாறான கருத்துக்களை கடும்போக்குவாதிகள் பரப்புக்கின்றனர். கடந்த அரசாங்கத்தில் கூட எமது கட்சியின் தலைமைக்கு நாட்டின் முக்கிய அமைச்சுப்பதவியான நீதி அமைச்சுப்பதவி கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்த அமைச்சினை திறம்பட எமது தலைமைக்கு செய்து கொள்ள முடியாமல் போய்விட்டது. இருந்தும் எத்தனை சவால்களை முஸ்லிம் காங்கிரஸ் கண்டாலும் அதனை பாதுகாத்த பெருமை பெரும்தலைவருக்கு இருப்பதைப் போன்று தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இருக்கின்றது என்பதில் என்னிடம் மாற்றுக்கருத்தில்லை.
அஹமட் இர்ஸாட்:- கடந்த ஜனாதிபதி தேர்தலில் முக்கிய ஆயுதமாக உங்களுடைய தலைமையினாலும் கட்சியினாலும் பொது பலசேனாவைப்பற்றித்தான் தேர்தல் மேடைகளிலெல்லாம் பேசப்பட்டு வந்தது. அதிலும் முதற்கட்டமாக தேர்தல் வெற்றிக்குப் பிற்பாடு அவர்களுக்கெதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. தேர்தலுக்கு பிற்பாடு அவர்களுக்கெதிரான எந்த நடவடிக்கைகளையும் இன்னும் நீங்கள் ஆதரவளிக்கின்ற அரசாங்கம் எடுக்காமைக்கான காரணம் என்ன?
சபீக் ரஜாப்டீன்:- இந்த நாடு சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட நாடாகும். தேர்தலில் நாங்கள் மஹிந்தவை ஆதரிக்காமைக்கான முக்கிய காரணம் பொதுபலசேனாவின் செயற்பாடாகும். இப்பொழுது ஆட்சிமாற்றப்பட்டு சுமுகமான நிலைமை காணப்படும் இந்த நிலையில் கடந்த பொதுபலசேனாவின் நடவடிக்கைகளை தோண்டிக்கொண்டு போகாமல் நாட்டின் சிங்கள மக்களினதும் நன்மதிப்பினை இந்த அரசாங்கம் வென்றெடுக்க வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளித்து சிந்தித்தவர்களாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். பொதுபல சேனாவின் நடவடிக்கைகளுக்கு நிச்சயமாக நீதி கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் ஒருமித்த கருத்துடனே இருக்கின்றோம்.
அஹமட் இர்ஸாட்:- தொகுதிவாரியான தேர்தல் அறிமுகப்படுத்தப்படுமாயின் மத்திய கொழும்பில் உங்களுடைய ஆசனத்தை தக்கவைத்து கொள்ள முடியுமா? தொகுதிவாரியான தேர்தலை நீங்களும் உங்களுடைய கட்சியும் ஆதரிக்கின்றதா?
சபீக் ரஜாப்டீன்:- கிழக்கு மாகாணத்தைப் போன்று கொழும்பிலும் மக்கள் செறிவாக வாழுக்கின்றனர். ஆகையால் எவ்வாறான தேர்தல் வந்தாலும் கொழும்பு மக்களுக்கான ஆசனங்கள் பாதுக்காக்கப்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் விகிதாசார தேர்தல் முறை ஒழிக்கப்பட்டு தொகுதிவாரி தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படுமாயின் சிறுபான்மையினருக்கான பிரதிநித்திதுவங்களின் எண்ணிக்கையானது அகில இலங்கை ரீதியில் பின்னடைவை சந்திக்கும் என்பதைப்பற்றி நாங்கள் ஒருமித்த கருத்துடன் கலந்துரையாடி வருகின்ற அதேவேளையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கையிலேயே அதன் தாக்கம் கூடுதலாக இருக்கும் என்பதிலும் ஒருமித்த கருத்துடனே இருக்கின்றோம்.
அஹமட் இர்ஸாட்:- கடைசியாக நீங்கள் பிரதி நிதித்துவப்படுத்துகின்ற கொழும்பு வாழ் மக்களுக்கு எதிர்கால பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக எதைச் சொல்ல விரும்புக்கின்றீர்கள்?
சபீக் ரஜாப்டீன்:- கொழும்பு வாழ் மக்கள் 2004ம் ஆண்டு மர்ஹும் மஃரூப், எம்.எச்.மொஹம்மட், அதனுடன் சேர்த்து என்னையும் பாராளுமன்றம் அனுப்பியிருந்தனர். அதற்காக விசேசமாக நான் எனது நன்றியை எனது பிரதேசமான கொழும்பு வாழ் மக்களுக்கு முதலில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். சரத்பொன்சேகாவின் அரசியல் நுழைவுக்கு பிற்பாடு முஸ்லிம் காங்கிரஸ் அவருக்கு பின்னால் சென்றதன் விளைவாக முஸ்லிம்களின் வாக்குகள் கடந்த தேர்தல்களில் சிதறடிக்கப்பட்டு கொழும்பு மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை ஏனும் முஸ்லிம்கள் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டது. ஆகவே கடந்த காலத்தில் மக்கள் விட்ட தவறுகளை சிந்தித்து எமக்கு கிடைக்க வேண்டிய பிரதிநித்துவங்களை பெற்றுக்கொள்ள கூடிய வகையில் வருகின்ற தேர்தலில் சிந்தித்து செயற்பட வேண்டும் என கொழும்பு வாழ் மக்களை அன்பாய் வேண்டிக்கொள்கின்றேன்.

.jpg)
.jpg)