ந.குகதர்சன்-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண அமைச்சருடனான திருகோணமலை இலங்கைத் துறைமுக முகத்துவாரம் மற்றும் அதனை அண்மிய பிரதேச மீனவ, விவசாய சங்கங்கள் சந்திப்பும் கலந்துரையாடலும் வியாழக்கிழமை அன்று இடம்பெற்றது.
இலங்கைத் துறைமுக முகத்துவார மீனவர் சங்க கட்டிடத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சேருவில தொகுதிக்கிளைத் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய, மீன்பிடி, கால்நடை அபிவிருத்தி அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் கலந்து கொண்டதுடன், ஏனைய அதிதிகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.நாகேந்திரன், எஸ்.ஜனார்த்தனன், அமைச்சின் செயலாளர் எஸ்.சிவநாதன், மீன்பிடித் திணைக்களத்தின் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் எஸ்.சுதாகரன், அதிகாரிகள் ஆகியோருடன், சங்கங்களின் உறுப்பினர்கள், மாதர், கிராம அபிவிருத்திச் சங்கங்களின் உறுப்பினர்கள், ஊர்ப் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது பிரதேச மீனவர்களினால் முக்கிய பிரச்சினையாக தடை செய்யப்பட்டுள்ள சிறு மீன்பிடி முறையான தொட்டாணி முறையினை தடை நீக்கம் செய்து தரும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டதுடன், நாதண்டஓடை அணைக்கட்டு உடைந்துள்ளமை சம்மந்தமாகவும், புண்ணையடி கல்லடி துறைகள் சம்மந்தமாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படாமை, கடற்படையின் ஆக்கிரமிப்புக்குள் இன்னமும் இருக்கும் தனியார் காணிகள், மக்களிடம் இருக்கின்ற காணிகளுக்கு இன்னும் ஒப்பந்தம் வழங்கப்படாமை, கடற்பாய்ச்சல் காரர்களினால் உள்ளளூர் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றமை, பிரதேச ஆலயங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இவை தொடர்பாக அமைச்சர் தெரிவிக்கையில்! மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் தொடர்பில் மாகாண சபையினூடாக மேற்கொள்ளக் கூடிய வேலைத் திட்டங்களை மேற்கொள்வதாகவும், ஏனைய விடயங்கள் தொடர்பில் தன்னால் எந்தளவான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என சிந்தித்து கிடைக்கப் பெற்றிருக்கும் இப்பதவியை வைத்து மத்திய அரசாங்க அமைச்சர்களுடன் கலந்துரையாடி எமது மக்களுக்கு பெற்றுத் தரக் கூடிய அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுப்பேன் என்று தெரிவித்தார்.
இதன் பின்னர் மக்களினால் குறிப்பிட்டு சுட்டிக் காட்டப்பட்ட இலங்கைத் துறைமுக முகத்துவாரம், புண்ணையடி, கல்லடி துறைகள் ஆகியவற்றை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.(ந-த்)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)