இலங்கை உள்நாட்டு விசாரணை பொறிமுறைகளை செயற்படுத்துகின்றது என்பதற்காக ஐ.நா.விசாரணை அறிக்கையை பிற்போட வேண்டிய அவசியம் இல்லை. மார்ச் மாதம் விசாரணை அறிக்கை வெளியிடப்படுவது இலங்கையில் உள்நாட்டு பொறிமுறையை பலப்படுத்த வாய்ப்பாக அமையும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் போல் உண்மைகளை கண்டறியவும் செயற்பட வேண்டும்.
அதற்கு இதுவே மிகச் சரியான தருணமெனவும் கூட்டமைப்பு சுட்டிக் காட்டியது. இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையினை பிற்போடக் கோரி அரசு வலியுறுத்தி வரும் நிலையில் இது தொடர்பில் வினவிய போது கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்;
உண்மை வெளிவருவது தவறெனவோ அல்லது இப்படியானதொரு சூழ்நிலையில் உண்மை வெளிவருவது தவறெனவோ எவரும் தெரிவிக்க முடியாது. அதிலும் விசேடமாக ஒரு நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் அது உண்மையினை வெளிப்படுத்துவதில் மட்டுமே ஏற்படுத்தப்பட முடியும். உண்மைகளை மறந்து, இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்பதை மறந்து நாட்டில் இன நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதென்பது சாத்தியமற்ற விடயமாகும்.
வடமாகாண சபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணை கற்பனையானதோ எவர் மீதும் குற்றம் சுமத்துக் கூடிய வகையில் பொய்யாக தயாரிக்கப்பட்டதோ அல்ல. இதில் வடக்கில் நடந்த உண்மைகளையே தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணையில் உண்மை என்ற பதத்திற்கே இடம் வழங்கப்படவில்லை. இனப்படுகொலைக்கான உண்மை கண்டறியப்படாது எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது? ஆனால் கடந்த அரசாங்கம் அதையே செய்து வந்தது.
எனவே இப்போதும் அதே தவறினை செய்யாது உண்மை நிலைமைகளை உடனடியாக கண்டறியப்பட வேண்டும். எனவே இந்தியா மற்றும் ஏனைய சர்வதேச நாடுகள் தற்போது நல்லிணக்கத்தினை ஏற்படுத்த நல்ல சந்தர்ப்பம் என தெரிவிக்குமாயின் இது தான் உண்மையினை கண்டறிய நல்ல நேரம் என்பதையும் இவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே சர்வதேச அறிக்கைகளை வெளியிட இதுவே பொருத்தமான தருணம்.
அதேபோல் ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கையினை இலங்கை அரசாங்கம் பிற்போட வலியுறுத்துவதற்கான மிகச் சரியான காரணங்களை முன்வைக்க வேண்டும். இல்லையேல் எம்மால் அரசாங்கத்தின் செயற்பாடுகளுடன் இணங்கிச் செயற்பட முடியாது.
இலங்கையின் உள்ளக பொறிமுறைகளுக்கு இலங்கை அரசு முக்கியத்துவம் கொடுப்பதைப் போல் சர்வதேச விசாரணைக்கு இடமளித்து அவர்களுடன் இணங்கி செயற்பட தயாரெனின் அதேபோல் இலங்கை அரசு கேட்கும் கால அவகாசத்தினுள் சர்வதேச பொறிமுறையுடன் இணைந்து அடுத்த கட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளுமாயின் அது தொடர்பில் நாம் பரிசீலிப்போம் எனவும் குறிப்பிட்டார்.
