கலாநிதி எம்.எச்.எம்.அஷ்ரஃப் நினைவுப் பகிர்வு-நூல் அறிமுகம்!

எம்.ஏ.எம்.பௌசர் -
நூல் அறிமுகம்
தலைப்பு: கலாநிதி எம்.எச்.எம்.அஷ்ரஃப் நினைவுப் பகிர்வு
பதிப் பாசிரியர்கள்:  றமீஸ் அப்துல்லா, எம்.எம்.பாஸில்
சமர்ப்பணம்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தையே தன் சுவாசமாகக் கொண்ட எம்.எச்.எம்.அஷ்ரஃபின் நினைவுகளுக்காக!

1980களில் இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் காத்திரமான மாற்றத்தை ஏற்படுத்திய எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் திடீர் மறைவு இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் நிரப்பமுடியாத இடைவெளியை ஏற்படுத்திற்று. 

எம்.எச்.எம்.அஷ்ரஃப் ஸ்தாபித்த முஸ்லிம் காங்கிரசும் அதன் குத்துநிலையான வளர்ச்சியும் அவரது ஆளுமையும் இலங்கையின் தேசிய அரசியலில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினைச் செலுத்தியுள்ளது. அஷ்ரஃபின் திடீர் மறைவு எதிர்பார்க்காதது. 

அந்நிகழ்விலிருந்து முஸ்லிம் சமூகம் தன்னை மீள ஒழுங்குபடுத்திக் கொள்வதற்குப் பகீரத முயற்சிகளில் ஈடுபடுகிறது. மெல்ல மெல்ல அஷ்ரஃபின் ஞாபகத்திலிருந்து அவரது அரசியல் வாரிசுகள் ஒதுங்கிக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு இருக்கின்ற அதேவேளை, தேர்தல் காலத்தில் அவ் அரசியல் வாரிசுகளின் பிரதான பேசு பொருளாகவும் காட்சிப் பொருளாகவும் அஷ்ரஃபே அமைந்து விடுகிறார் என்று பொதுவான கருத்தும் உண்டு. ஆனால், பொது அமைப்புக்களும் பொதுசனங்களும் எப்போதுமே அஷ்ரஃபை ஞபாகப்படுத்துவதிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளவில்லை.  
இவ்வகையில், அவ்வாறான பொது அமைப்புக்களிலும் வேறு விசேட நிகழ்வுகளிலும் அஷ்ரஃப் தொடர்பாகத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நால்வர் ஆற்றிய உரைகள் இத்தொகுதியில் உள. முதல் உரையாளர் எம்.ஏ.எம்.பௌசர் அவர்களின் உரை கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் எழுச்சியில் அஷ்ரஃபின் வருகையையும் பங்களிப்பையும் விரிவாகப் பேசுகிறது. கவிஞர் மன்சூர் ஏ. காதிரின், அஷ்ரஃபின் வரலாற்றையும் அரசியலையும் உள்ளடக்கிய 'விருட்சம், வேர்கள், விழுதுகள்' என்ற மிக நீண்ட உரையின் அஷ்ரஃபினது வாழ்க்கை வரலாற்றைக் குறிப்பிடும் பகுதி மாத்திரம் இத்தொகுதியில் 'தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப்: ஓர் அறிமுகம்' என்ற தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. 

மற்ற இரண்டு உரைகளும் கலாநிதி றமீஸ் அப்துல்லா அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. அதில் முதல் உரை அஷ்ரஃபின் தனித்துவ அரசியல் சிந்தனையில் உண்டான மாற்றத்தைக் கோடிட்டுக் காட்டுகின்ற விமர்சன ரீதியாக அமைந்தது. மற்றப் பேச்சு தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தொடர்பாக அஷ்ரஃபின் அபிலாஷைகளைப் புலப்படுத்துகின்ற, அஷ்ரஃபின் பேச்சுக்களிலே இருந்து மேற்கோள் காட்டப்பட்ட உரையாக அமைந்தது. 

ஐந்தாவது உரை இலங்கை முஸ்லிம்களின் உயர் கல்வி வளர்ச்சியில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: கலாநிதி எம்.எச்.எம்.அஷ்ரஃப் குறித்த மறுவாசிப்பு என்ற தலைப்பிலானது. இதனை எம்.எம்.பாஸில் அவர்கள் எழுதியுள்ளார். 

இலங்கை முஸ்லிம்களின் உயர்கல்வி வளர்ச்சியைக் கோடிட்டுக் காட்டுகின்ற இவ்வுரை அஷ்ரஃபின் வருகையினால் முஸ்லிம்களின் உயர்கல்வியின் வளர்ச்சியில் உருவான மாற்றத்தை மிகத் தெளிவாகப் புலப்படுத்துகிறது. மொத்தத்தில் எம்.எச்.எம்.அஷ்ரஃப் பற்றிய நினைவுப் பகிர்வை இத்தொகுதி முன்வைக்கின்றது. 

அஷ்ரஃபின் நினைவுகள் காற்றில் கலந்துவிட்டது போல அவரது சிந்தனைகளும் கலந்துவிடாது, அது பற்றிய வியாக்கியானங்களையும் விமர்சனங்களையும் பற்றிய உரைகள் நமக்குப் பயனளிக்கும் என்ற நம்பிக்கையில் இந் நூலாக்கம் செய்யப்பட்டிருக்கின்றது. 
அபூ அதி

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -