ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைக்கு எதிராக அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மூன்றாவது முறையாக ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கலாம் என்பது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அல்ல. ஆலோசனை மட்டுமே. அதற்கு எதிராக யாரும் வழக்குத் தாக்கல் செய்யலாம். நாமும் நிச்சயமாக வழக்குத் தாக்கல் செய்வோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியபடும் இயக்கம் ஏற்பாடுசெய்திருந்த ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை அதிகாரபூர்வமாக எவ்வித அறிவிப்பும் தேர்தல்கள் ஆணையகத்தினால் வெளியிடப்படாத நிலையில் ஜனாதிபதி மஹிந்த தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் வெளிப்பட்டுள்ளார். அவரது வெற்றிக்கு வழிவகுக்கும் வகையிலான இராசியான தினத்திலேயே தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது.
உண்மையில் 4 வருட முடிவில் தேர்தலில் போட்டியிட விரும்பினால் அது தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கு ஜனாதிபதி அறிவிக்க வேண்டும். மாறாக அவரே நாள்குறித்து தனக்கு ஏற்ற நாள் போல தேர்தல் நடத்துவாராயின் இங்கு ஜனநாயகம் கேள்விக்குறியாகியுள்ளதோடு தேர்தல்கள் ஆணையகத்தின் நிலைப்பாடு ஜனநாயகம் இல்லாத சர்வாதிகார ஆட்சியை வெளிப்படுத்துகின்றது.
தேர்தல் பிரசாரத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தற்போது அதிகாரபூர்வமற்ற வகையில் நடத்திக்கொண்டிருக்கின்றார்.
கிராமப்புறங்களில் இருந்து பஸ் வண்டிகள் மூலம் அனுதினமும் மக்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு 'தன்சல்' வழங்கப்படுகின்றது. கொழும்பில் பிரதான இடங்களில் மின்சாரப் பலகைகள் மூலம் ஜனாதிபதி செய்த நலத்திட்டங்கள் பிரசாரப்படுத்தப்படுகின்றது. இது தேர்தல் வரைமுறைகளை மீறும் செயலாகும்.
மேலும் தேர்தல் காலம் நெருங்கி விட்டால் ஜனாதிபதி கூறும் முக்கிய விடயம் புலிகள் என்று எதிர்க்கட்சியினரை வர்ணிப்பது புலம்பெயர் தமிழர்களை புலிமுத்திரை குத்திப்பேசுவது யுத்த வெற்றியைப் பற்றி பேசிப்பேசி இனத்துவேசத்தை விதைப்பது. உண்மையில் தீவிரவாதி என்றும் 24 கப்பல்களுக்கு சொந்தக்காரர் என்றும் கூறியும் கே.பி. யை கைது செய்தது இப்போது கே.பி. அரசாங்கத்துடன் உள்ளார் அவரிடம் இருந்த கப்பல்கள் எங்கே?
தமிழ் மக்களிடம் இருந்து சூறையாடிய தங்க நகைகளில் ஒரு பகுதியை தேர்தலினை நோக்காக வைத்து திருப்பிக் கொடுத்த மஹிந்த தமிழ் மக்களிடம் இருந்து கைப்பற்றிய முழுத் தங்க ஆபரணங்களையும் மக்களுக்கு திருப்பி வழங்க வேண்டும்.
தற்போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யார் என்று மஹிந்த கேள்வி எழுப்புகின்றார். தேர்தலை இன்னும் அறிவிக்கவில்லை. ஜனாதிபதி கரு ஜெயசூரியவை பொதுவேட்பாளர் என்று வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். இவை அனைத்தும் தேர்தலை கண்டு ஜனாதிபதி மஹிந்த அச்சம் அடைந்துவிட்டார் என்பதனை தெளிவுபடுத்துகின்றது.
இன்று அவரது நிறைவேற்று அதிகார சர்வாதிகார ஆட்சியை அரசாங்க அமைச்சர்களே எதிர்க்கின்றனர். அத்தோடு ரத்னதேரர் 18ஆம் திருத்தத்திற்கு வாக்களித்ததை நினைத்து கவலைகொள்வதாகவும் 19ஆம் திருத்தம் வேண்டும் என்றும் கோருகின்றார். இவை அனைத்தும் மஹிந்தவிற்கு எதிரான எதிர்ப்பலைகளேயாகும்.
வழமையாக கட்சிகளில் பிணைப்புக்களை ஏற்படுத்தி அதனை பிளவுபடுத்தும் ஜனாதிபதி தற்போது சங்க சபாவை தனது அரசியல் நோக்கத்திற்காகப் பிளவுப்படுத்தியுள்ளார். இதனை பௌத்தத்துறவிகள் கூட மன்னிக்க மாட்டார்கள்.
மேலும் தமிழ் மக்களின் 65 ஆயிரம் ஏக்கர் காணியைப் போன்று முஸ்லிம் மக்களிடம் இருந்து கைப்பற்றிய 30 ஆயிரம் ஏக்கர் காணி நிலங்களை அவர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும். இந்த நாட்டில் பொலிஸ், கல்வி, நீதி என்று எந்த துறையிலும் அதிகாரம் சுதந்திரம் இல்லை. அனைத்துமே ஒருவராலேயே நிர்வகிக்கப்படுகின்றது.
இது ஜனாதிபதித் தேர்தலில் 3 ஆவது முறையாக மஹிந்த ராஜபக் ஷ போட்டியிடுவது தொட்டு அவரது பிரசார நடவடிக்கை உயர்நீதிமன்ற ஆலோசனை என்று அனைத்திலும் வெளிப்படுகின்றது. எனவே, இதனை தடுக்க வேண்டியது எமது கடமை. இதற்காக நாம் போராடுவோம்.

0 comments :
Post a Comment