ஆட்சி மாற்றத்தை விடவும் ஆட்சிமுறை மாற்றத்தினையே முஸ்லிம்கள் எதிர்பார்க்கிறார்கள்!

இன மத மொழி வேறுபாடுகளுக்கப்பால் சகல சமூகங்களும் சமமாக மதிக்கப் படுகின்ற ஒரு தேசத்தைக் கட்டி எழுப்புவதில் எமது வரலாற்றுப்பணி தொடர வேண்டும்..!

மஸிஹுதீன் இனாமுல்லாஹ்

மூன்றாவது முறை ஜனாதபதித் தேர்தலில் இல்லாத இஸ்லாமியப் பயங்கர வாதத்திற்கெதிராக யுத்தப் பிரகடனம் செய்யப்படுமா என்ற அச்சத்தில் நாம் இருந்த வேளை..அதற்கான முஸ்தீபுகளும் ஒத்திகைகளும் அண்மைக்காலமாக அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருந்த வேளை.... இல்லை,இல்லை ; சர்வாதிகாரம், ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகம், நிர்வாகச் சீர்கேடுகள், குடும்ப ஆதிக்கம் என்பவவற்றிற்கு எதிராகவே நிஜமான யுத்தம், இருக்கின்றதென தேசத்தில் ஒரு புதிய போராட்டம் ஆரம்பித்துள்ளது.

எது எப்படிப்போனாலும் சிங்கள பௌத்த பேரின வாத சக்திகள் நாட்டில் தொடர்ந்தும் இருக்கத்தான் போகிறார்கள், நாட்டில் யார் ஆட்சி செய்யப்ப போகிறார்கள் என்பதனை விட எத்தகைய ஆட்சிமுறை நிலவப்போகிறது என்பதில் தான் சிறுபான்மையினர் மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும்.

இனவாத மதவாத சக்திகள் எந்த தரப்பில் இருக்கின்றார்கள் என்பதனை விட குறிப்பிட்ட தரப்புக்கள் அத்தகைய சக்திகளை எவ்வாறு கடந்த காலங்களில் கையாண்டார்கள், எதிர்காலத்தில் கையாள்வார்கள் என்பதிலேயே நாம் அவதானமாக இருக்க வேண்டும். அம்பையும் ஈட்டியையும் யார் யார் எவ்வாறெல்லாம் பயன்படுத்துகின்றார்கள் என்பதே எம்முன்னுள்ள பிரதான கேள்வியாகும்.

அரசியல் எதிரிகள் ஒழிந்துவிட வேண்டும் என்று எந்த ஒரு சமூகமும் எதிர்பார்க்க முடியாது, ஆனால் எல்லா கள நிலவரங்களுக்கும் முகம் கொடுக்கக் கூடிய அரசியல் இராஜதந்திர அணுகுமுறைகளில் ஆரோக்கியமான அரசியல் நகர்வுகளில் அவதானமாக இருத்தல் வேண்டும்.

முஸ்லிம்களுக்கெதிரான சவால்களை தேசத்திற்கு எதிரான சவலகளாக அணுகி தேசத்தில் உள்ள முற்போக்கு சக்திகளுடன் இணைந்து தேசப்பற்றுடன் கூடிய அரசியல் நகர்வுகளில் நாம் பங்கு கொள்ளாவிடின் பெரும் வரலாற்றுத் தவறொன்றை இழைத்துக் கொண்டவர்கள் ஆவோம்.

ஹலால் முதல் அளுத்கமை வரை முஸ்லிம்களுக்கு மறக்கவே முடியாத அரசியல் பாடங்களை பலவந்தமாக கற்றுத் தந்த “பொதுபல சேனா” எனும் துரும்பினை எவ்வாறெல்லாம் பயன்படுத்த முடியுமோ அவ்வாறெல்லாம் பயன்படுத்த பாலூட்டி சீராட்டி வளர்த்தெடுத்தவர்கள் தீர்மானித்துள்ளார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன, குறிப்பாக எதிர்க்கட்சி பொது வேட்பாளர் அணியில் ஊடுருவி சிறுபான்மையினர் வருகையை மட்டுப்படுத்த வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளனவாம், இறுதிக்கட்ட பாய்ச்சலில் இன்னும் பல சேனாக்கள் களமிறங்கலாம்.

பொது பல சேனா எதற்காக யாரால் உருவாக்கப்பட்டது எனபதில் தான் தெளிவாக இருப்பதாகவும், முஸ்லிம்களுக்கெதிராக அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பாராளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்கள் மௌனம் காக்க தான் கண்டித்ததாகவும், அவர்கள் முழு பௌத்த மக்களையோ மகா சங்கத்தினரையோ பிரதிநிதித் துவப்படுத்தவில்லை என்றும் அவர்களுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்த உத்தேசிக்கவில்லை என்றும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசின்ஹா அண்மையில் ஒரு சந்திப்பில் தெரிவித்த பொழுது நானும் இருந்தேன்.

பொதுபல சேனாவினரின் கடந்தகால நடவடிக்கைகளை சந்திரிக்கா அம்மையாரும் கடந்த காலங்களில் கண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது, முஸ்லிம் சமூகம் சார்பான எதிர்பார்ப்புக்களும் நாட்டின் பல்வேறு அரசியல் தலைமைகளுக்கும் பிரதான சிவில் தலைமைகளால் முன்வைக்கப்பட்டுள்ளன, வேட்பாளர்கள் வெளியிடும் தேர்தல் விஞாபணங்களுக்காக காத்திராது அவற்றை தயாரிப்பதில் முஸ்லிம் தலைமைகள் தேசத்தின் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து ஈடுபடல் வேண்டும்.

எவர் ஆட்சிக்கு வந்தாலும் ஆட்சிமுறை மாற்றத்தினையும், ஆட்சி மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகளின் மாற்றத்தையும், நல்லாட்சி விழுமியங்களுக்கான உத்தரவாதத்தையும், எமது இருப்பிற்கும்,பாதுகாப்பிற்கும்,உரிமைகளுக்குமான உத்தரவாதங்களையுமே நாம் எதிர்பார்க்கின்றோம்..ஒரு சிலருக்கு அரசியல் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பது எமது இலக்கு அல்ல.

தற்பொழுது எமது நாட்டில் இருக்கின்ற குறைந்தபட்ச ஆட்சிக் கட்டமைப்புகளான ஜனநாயக ஸ்தாபனங்களை, அதிகார மையங்களை, சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துகின்ற நிறுவனங்களை, நீதித்துறையை, பொது நிர்வாக சேவைகளை, தேர்தல் ஆணையகத்தை மற்றும் தேர்தல் முறைமைகளை ,இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை, மத கலாச்சார சுதந்திரத்தை, சமாதான சகவாழ்வை முற்போக்கு சக்திகளுடன் இணைந்து கட்டிக் காப்பது முஸ்லிம்கள் மீது கடமையாகிறது.

அந்த வகையில் இந்த நாட்டின் சாபக்கேடாக பார்க்கப்படுகின்ற வரைமுறைகளற்ற எதேச்சாதிகார நிறைவேற்று அதிகாரங்கள் மிக்க ஜனாதிபதி முறையினை ஒழித்து மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தின் மேலான்மையை உறுதிப்படுத்தி நல்லாட்சி குணாதிசியங்களை உறுதிப்படுத்துகின்ற ஆட்சி மற்றும் நிர்வாக கட்டமைப்புக்களை, சுயாதீனமான அரச அங்கங்களை கட்டி எழுப்புவதில் முஸ்லிம்களுக்கும் பாரிய பங்கு இருக்கின்றது.

இந்த தேசத்தின் முற்போக்கு சக்திகளின் தொடந்தேர்ச்சியிலான போராட்டங்களுக்குப்ப் பின்னர் சுயாதீனமான பொலிஸ் சேவை, சுயாதீனமான பொதுச்சேவைகள், சுயாதீனமான தேர்தல், சுயாதீனமான நீதித்துறை என நல்லாட்சிக் கட்டமைப்புக்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அரசியலமைப்பின் மீது கொடுவரப்பட்ட 17 ஆவது திருத்தச் சட்டத்தை ஆளும் ஐக்கிய முன்னணி 18 ஆவது திருத்தம் ஒன்றின் மூலம் வலிதற்றதாய் ஆக்கியமை மிகப்பெரிய வரலாற்றுத் தவறாகும்.

துரதிஷ்டவசமாக மேற்படி 18ஆவது திருத்தச் சட்டமூலத்தை மூன்றில் இரு பெரும்பான்மையுடன் பாராளு மன்றத்தில் நிறைவேற்றிக் எதேச்சதிகார ஜனாதிபதி முறையின் வரம்புகளை மேலும் விஸ்தரிக்கவும் பதவியில் இருக்கின்ற அதிபர் தொடர்ந்தும் ஜானாதிபதியாக தெரிவு செய்யப்படுவதன் மூலம் சர்வாதிகாரம் நீடிக்கவும் முஸ்லிம் தனித்துவ அரசியலின் பெயரால் -உண்மையான இஸ்லாமிய அரசியல் கோட்பாடுகளுக்கு முரணாக - ஆதரவு வழங்கப்பட்டமை மிகப் பாரிய அரசியல் வரலாற்றுத் தவறாகும்.

இவ்வாறான ஒரு நெருக்கடியான அரசியலமைப்பு மற்றும் வலுவேறாக்கல் சர்ச்சைகள் நாட்டில் இடம் பெறுகின்ற ஒரு கால கட்டத்தில் தான் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படவுள்ளது.

மாற்றங்களை அடுத்தவர்கள் ஏற்படுத்தும் வரை காத்திருப்பவர்கள் சந்தர்ப்பவாதிகள், மாற்றத்தின் பங்காளர்களாய் இருப்பவர்கள் சாதனையாளர்கள். எந்தக் குதிரை வெல்கின்றது என்பதனைவிட எந்தக் கொள்கை வெல்கின்றது என்பதுவே முக்கியம்.

கடந்தகால கணக்கு வழக்குகளை கிடப்பில் போட்டு புதுப்புது வாக்குறுதிகளுக்காய் காத்திருப்பது குட்டக் குட்ட குணிந்தே இருப்பதற்குச் சமன். தேசமும் சமூகமும் விரும்பும் புரட்சிகரமான மாற்றங்களின் பார்வையாளர்களாக அன்றி பங்காளர்களாக நாமும் இருக்க வேண்டும்.

முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்கள் பாரிய அரசியல் இராஜ தந்திர பின்புலன்களை கொண்டுள்ள தேசிய பிரச்சினையாகும் அவை இந்த நாட்டின் அமைதி சமாதானம் ஒருமைப்பாடு பொருளாதார சுபீட்சம் என சகல அமச்ங்களுடனும் தொடர்புபட்டவை எனவே மிகவும் சாணக்கியமான சமயோசிதமான தேசிய அரசியல் நகர்வுகளை தேசத்தில் உள்ள ஏனைய முற்போக்கு மிதவாத சக்திகளுடன் இணைந்தே நாம் தென்னிலங்கையில் மேற்கொள்ள வேண்டும்.

இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக உழைத்த முஸ்லிம் சமூகம், இந்த நாட்டின் சுயாதிபத்தியத்தையும் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் காத்த முஸ்லிம் சமூகம் அன்று போல் இன்றும் என்றும் இந்த நாட்டின் மீது தமக்குள்ள உரிமையையும் பற்றையும் தொடர்ந்தும் பறை சாற்றுவார்கள்..!

முஸ்லிம்களையும் ஏனைய சிறுபான்மை சமூகங்களையும் சரி சமமாக அரவணைத்துச் செல்ல விரும்புகின்ற சகல தேச சக்திகளுடனும் நாம் கை கோர்ப்போம், சமாதான சக வாழ்விற்கு சவால் விடுக்கும் தீய சக்திகளை உண்மையான தேசப்பற்றுள்ள சக்திகளுடன் இணைந்து முறியடிப்போம் ..!

இந்த நாட்டின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் அபிவிருத்தியிற்கும் முஸ்லிம்கள் செய்த வரலாற்றுப் பங்களிப்புக்கள் மகத்தானவை, கொடுத்துள்ள விலையும் மதிக்க முடியாதவை, சர்வதேச பிராந்திய சக்திகளின் தேவைக்காக உழைக்கும் கூலிப்படைகளை, அரசியல் இராஜ தந்திர சதுரங்கத்தில் முஸ்லிம்களை பகடைக் காய்களாக பாவிக்க விரும்புகின்ற சக்திகளை முறியடிப்பதில் நாம் ஒரு போதும் பின் நிற்கப் போவதில்லை.

இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கை மதித்து நடக்கின்ற முஸ்லிம்கள் காட்டு தர்பார் நடத்த விரும்புகின்ற எந்த சக்தியிற்கும் அஞ்சி வாழப் போவதில்லை, ஜனநாயக மரபுகளை மதிக்கும் முஸ்லிம் சமூகம் எந்த வொரு நெருக்கடியான கால கட்டத்திலும் வன்முறையை நாடியதுமில்லை, இனியும் அதற்கான தேவை எமக்கு இல்லை, இந்த நாட்டில் உண்மையான ஜனநாயக விழுமியங்களை மதிக்கின்ற சக்திகளுடனும் கைகோர்த்து குறுக்கு வழியில் கோலோச்ச விரும்புகின்ற சக்திகளை தோற்கடிப்போம் இன்ஷா அல்லாஹ்.

தெளிவான தேசிய சமூக பார்வையும்,கூட்டுப் பொறுப்பும், மூலோபாய திட்டமிடல்களும் இல்லாமல் பயணிக்கும் ஒரு சமூகம் அடுத்தடுத்த சமூகங்களை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள், இலாப நஷ்டங்கள், வசதி வாய்ப்புக்களுக்கு அப்பால் நின்று நிதானித்து ஆரவாரங்கள் அடாவடித்தனங்கள், அட்டகாசங்களின்றி தத்தமது மனச் சாட்சிகளுக்கு துரோகம் செய்யாது சரியான முடிவை சரியான நேரத்தில் எடுத்து வாக்குரிமையினை பொறுப்புணர்வுடன், தூர நோக்குடன் பயன்படுத்துவோமாக.

இந்த நாடும் ஆட்சியும் அதிகாரமும், பொருளாதாரமும், வளங்களும், வரவுசெலவும்,அபிவிருத்தி நிதிகளும், திட்டங்களும் நாட்டு மக்களுக்கு உரியவையே..அவற்றை நிர்வகிக்கின்ற பொறுப்பு மாத்திரமே ஆட்சியாளரிடம் கொடுக்கப்படுகிறது.

வாக்கு என்பது "சாட்சியமாகும்",
வாக்கு என்பது "தெரிவு" ஆகும்,
வாக்கு என்பது "ஆயுதமாகும்",
வாக்கு என்பது "தீர்ப்பு" ஆகும்,
வாக்கு என்பது "வகிபாகம்" ஆகும்,
வாக்கு என்பது "துணைபோதல்" ஆகும்,
வாக்கு என்பது "சோதனை" ஆகும்,
வாக்கு என்பது மொத்தத்தில் "அமானிதமாகும்"

வாக்குறுதிகள், உடன்பாடுகள், உடன்படிக்கைகள், சந்தர்ப்பங்கள், சலுகைகள், வசதி வாய்ப்புக்கள், வளங்கள், என சகலதும் அமானிதங்களாகும். கட்சி, அரசியல், தேர்தல், வாக்குரிமை, ஆட்சி, அதிகாரம், நிர்வாகம், மக்களது வரிப்பணம், அபிவிருத்தி நிதிகள், தொழில் சார் சலுகைகள், சிறப்புரிமைகள், வசதி வாய்ப்புக்கள், கொடுப்பனவுகள், ஊதியங்கள் என எல்லாமே அமானிதங்கள் ஆகும்.

ஆட்சியையும் அதிகாரங்களையும் கொடுக்கவும் பறிக்கவும் வல்லவன் அவனே, மக்களைக் கொண்டு ஆட்சியாளர்களையும், ஆட்சியாளர்களைக் கொண்டு மக்களையும் சாதிப்பவனும் அவனே. முயற்சி எங்களுடையது முடிவு அவனுடையது.

நாட்டிற்கும் மக்களிற்கும் சகல சமூகங்களிற்கும் அமைதியும், சமாதானமும்,பொருளாதார சுபீட்சமும், சகல துறை அபிவிருத்தியும் நிறைந்த எதிர்காலத்தை நோக்கிய நல்லாட்சியை எல்லாம் வல்ல இறைவன் ஏற்படுத்த பிரார்த்திப்போமாக..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :