'மதுபானசாலைகள் இல்லாத தேசத்தை கட்டியெழுப்பும் மகிந்த சிந்தனைக்கு அமைவாக எமது மாகாணத்தில் மதுபானசாலைகளை இல்லாமலாக்கி நல்லொழுக்கமுள்ள பிரஜைகளை உருவாக்குவதற்கு நான் என்றும் அர்ப்பணிப்புடன் செலாற்றுவேன்' என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜித் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் இம்மாதத்திற்கான (ஒக்டோபர்) 34 ஆவது சபை அமர்வு இன்று (11) திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் தவிசாளர் ஆரியவதி கலபதி
தலைமையில் நடைபெற்றது. இதன் போது கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் ஞா. கிருஷ்ணபிள்ளை எழுப்பிய கேள்விக்கு பதிளளித்து உரையாற்றிய போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு உரையாற்றினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
'கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானசாலைகளின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளதை நான் அறிவேன். இதனால் பல்வேறு வகையான சமூக சீர்கேடுகள் ஏற்படுகின்றன. இந்த விடயம் தொடர்பில் நான் அங்குள்ள வைத்தியர்கள், புத்திஜீவிகள், அரசியல்வாதிகள் போன்றவர்களிடம் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி பேசியுள்ளேன். இந்த விடயம் தெடர்பில் நான் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றேன்.
நான் பாரளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற காலத்தில் எனக்கு ஐந்து மதுபானசாலைகளின் உரிமம் வழங்கப்பட்டது. அவற்றை வாங்குவதற்கு பலர் என்னிடம் வந்தார்கள். நான் அந்த உரிமத்தை பெறவில்லை. இதனை விற்று கிடைக்கும் பணம் எனக்கு தேவையில்லை என்று அவற்றை நான் வாங்க மறுத்துவிட்டேன். நான் என்றுமே மதுவின் பக்கம் சென்றதில்லை.
மதுவிற்கு நான் என்றுமே ஆதரவாக இருக்கவோ இருக்கப்போவதோ இல்லை. மதுபானசாலைகளின் உரிமம் வழங்குதல் தொடர்பான நடைமுறைகள் மத்திய அரசிடமே இருக்கின்றது.
உரிமம் வழங்கும் நடைமுறைகள் மத்திய அரசிடம் இருந்தாலும் எமது மாகாணத்தின் சமூக சீரழிவுகளை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு எமக்கும் இந்த கௌரவமான சபைக்கும் இருக்கின்றது.
எனது சக மாகாண சபை உறுப்பினர்களின் ஆலோசனையின் பிரகாரம் எமது பிரதேசதத்தில் மதுபானசாலைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் அவற்றின் உரிமம் தொடர்பான நடைமுறைகளை கட்டுப்படுத்தவும் விரைவில் நடவடிக்கை எடுக்கவும் இந்த விடயம் ஒரு சமூகப் பிரச்சினை என்பதைக் கருத்திற் கொண்டு உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளகப்படும்' என முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.
எம்.எம்.ரசாட் முகம்மட்
முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர்

0 comments :
Post a Comment