முஸ்லிம்களின் அரசியல் தீர்மானங்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளப்படவேண்டும்- அஸ்மின்

முஸ்லிம்களின் அரசியல் தீர்மானங்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன்
மேற்கொள்ளப்படவேண்டும்: வடக்கு மாகாண சபை உறுப்பினர்அ.அஸ்மின்

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்ற இந்நிலையில் இலங்கை
முஸ்லிம்களின் அரசியல் தீர்மானங்கள் எவ்வாறானதாக இருக்கவேண்டும் என
செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இத்தகைய
தீர்க்கமான சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களின் அரசியல் தீர்மானங்கள் மிகுந்த
பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளப்படவேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில்,

தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மிகுந்த சிக்கல் தன்மை மற்றும் சவால்கள்
நிறைந்த ஒன்றாகவே அமைந்திருக்கின்றது. குறிப்பாக மஹிந்த ராஜபக்‌ஷ
அவர்களும் அவரது அணியினரும் ஏதோ ஒரு அடிப்படையில் அதிகாரத்தை தமதாக்க
முயற்சிக்கின்றார்கள். இது இலங்கையில் நிலவும் அரசியல் முறைமைகளுக்கு
அமைவாக 6 வருடங்களுக்கு ஒரு முறை என்ற தவணைக்கால ஒழுங்கு, ஒருவருக்கு இரு
சந்தர்ப்பங்கள் என்னும் விதிகளை மீறி பாராளுமன்ற பொரும்பான்மையினை
தமக்குச் சாதகமான சட்டவாக்கங்களுக்குப் பயன்படுத்தி நாட்டின் அரசியல்
சூழ்நிலைகள் தமக்குச் சாதகமாக இருக்கின்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி
மக்களின் முடிவைப் பெற்றுக்கொண்டு நீண்டகாலம் தமது ஆதிக்கத்தை
நிலைநிறுத்தவே இவர்கள் முயற்சிக்கின்றார்கள். இது ஆபத்தானது.

இந்த நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்றன. அவை எதனையும் கருத்தில்
கொள்ளாது தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நீண்டகாலமாக
தீர்க்கப்படாமல் இருக்கின்ற தமிழ் மக்களின் பிரச்சினைகள், சிறுபான்மை
சமூகங்களின் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள், காணி சார்ந்த
பிரச்சினைகள், உள்ளூராட்சி சார்ந்த பிரச்சினைகள், மீள்குடியேற்றம்
சார்ந்த விடயங்கள், உயர் வாழ்க்கைச் செலவு என ஏராளமான பிரச்சினைகள் இங்கே
காணப்படுகின்றன, இவற்றை சற்றும் பொருட்படுத்தாது தேர்தல்
அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நாட்டிலே நிலவுகின்ற பல கட்சி ஜனநாயக
முறைமைகளை இல்லாமல் செய்து சீன மாதிரியிலான தனிக்கட்சி அரச
முறைமையொன்றினை ஏற்படுத்த இப்போதைய ஆளும்தரப்பு முயற்சிக்கின்றது. இதையே
சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டிருக்கின்ற பிளவானது
வெளிப்படுத்தி நிற்கின்றது.

மஹிந்த அரசாங்கம் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்தை இந்த நாட்டில்
உருவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, இப்போது தேர்தல்மேடைகளில்
புலிப் பூச்சாண்டிகளை அவர்கள் காட்டத்தொடங்கியிருக்கின்றார்கள். தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் உரிமைப்போராட்ட ஒழுங்கின் வடிவத்தை
மிகத்தெளிவாக வெளிபப்டுத்தி அதன் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது,
எனினும் சிங்கள மக்கள் மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் புலிகள்
வந்துவிடுவார்கள் என்ற தோற்றப்பட்டை ஆளும் தரப்பினர் உருவாக்க
முயற்சிக்கின்றார்கள், அதேபோன்று முஸ்லிம்களையும் சந்தர்ப்பவாதிகள்
என்றும் அவர்களாலும் சிங்கள மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டப்போகின்றது என்ற
தோற்றப்பட்டையும் ஏற்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றார்கள். பொதுவாக்க
தமிழ்விரோத, முஸ்லிம்விரோதப் போக்கினை சிங்கள மக்க்களிடையே ஏற்படுத்துவது
இவர்களது இலக்காக இருக்கின்றது.. இது ஆபத்தான சூழ்நிலையாகும்.

இச்சந்தர்ப்பத்தில் நாட்டில் ஒரு சிக்கலான அரசியல் சூழ்நிலை
தோன்றியிருக்கின்றது. இந்நிலையில் முஸ்லிம் அரசியல் கட்சிகள், அரசியல்
தலைவர்கள் மிகுந்த நிதானத்துடன் செயற்படவேண்டும். இப்போது மஹிந்தவை
ஆதரிக்கின்ற மனோநிலையில் முஸ்லிம் சமூகம் இல்லை என்பது வெளிப்படையான
விடயம், ஆனால் இதுவரை சோரம்போயிருந்த முஸ்லிம் அரசியல் தலைமைகள் இப்போது
தம்முடைய அரசியல் இருப்பைத் தக்கவைப்பதற்கான முயற்சிகளில்
ஈடுபட்டிருக்கின்றார்கள். ஆளும்தரப்பில் இருந்து வெளியேறுதல்,
ஆளும்தரப்பினர்க்கு அழுத்தங்களை ஏற்படுத்துதல், ஆளும்தரப்பினரிடம்
நிபந்தனைகளை முன்வைத்தல் போன்ற அரசியல் செயற்பாடுகளை
முன்னெடுக்கின்றார்கள். இதன்மூலம் அவர்களுக்கு பதவிகள், சலுகைக்கள்,
வசதிவாய்ப்புகள் வழங்கப்படலாம் எனவே அத்தகைய முயற்சிகளில்
ஈடுபடுவதற்கும், அதன் விளைவுகளைப் பெற்றுக்கொள்ளவும் முழுமையான
சுதந்திரம் அவர்களுக்கு இருக்கின்றது.

ஆனால் அத்தகைய செயற்பாடுகள் முஸ்லிம் சமூகத்திற்கு நன்மைகளை
ஏற்படுத்தாவிட்டாலும் முஸ்லிம் சமூகத்திற்கு ஆபத்துக்களையும்
அழிவுகளையும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக
இருக்கவேண்டும். அத்தகைய அரசியல் தலைவர்கள் ஆளும்தரப்பினர்க்கு வழங்கும்
ஆதரவை விளக்கிக் கொள்வதால் மஹிந்த தரப்பின் சிறுபான்மை மக்கள் மீதான
நிலைப்பாடுகள் பெரிதாக மாற்றம் கண்டுவிடாது. மஹிந்தவை ஆதரிப்பது அல்லது
எதிர்ப்பது என்பது முக்கியமான விடயம் அல்ல. மாறாக இலங்கை முஸ்லிம் சமூகம்
குறித்த ஜனாதிபதித் தேர்தலில் தாமும் ஒரு தேசிய இனத்துவக் குழு என்ற
அடிப்படையில் தேசிய நலன், இனத்துவங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்கின்ற
விடயங்களோடு தன்னுடைய இருப்பு, சமூக அரசியல் விவகாரங்கள் சார்ந்து
காணப்படுகின்ற சவால்கள் குறித்தும் சிந்தித்து அதற்கு அமைவான அரசியல்
தீர்மானம் ஒன்றினை மேற்கொள்வதே மிகவும் முக்கியமானதாகும். அதன்
அடிப்படையிலேயே ஆதரவும் எதிர்ப்பும் இருத்தல்வேண்டும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இப்போது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் என தம்மை
கூறிக்கொள்கின்றவர்கள், முஸ்லிம் சமூகத்தின் எவ்வித ஆலோசனையினையும்,
கருத்தையும் கேட்டறியாது தமது விருப்பத்திற்கேற்ப அறிக்கைகளை விடுவதும்,
கருத்துக்களை முன்வைப்பதும் வேடிக்கையாக இருக்கின்றது. இத்தகைய
அறிக்கைகளும், தீர்மானங்களும் முஸ்லிம் சமூகத்தில் தம்முடைய அரசியல்
இருப்பைத் தக்கவைக்கும் என அவர்கள் எதிர்பார்க்கக்கூடும், ஆனால்
முஸ்லிம்கள் அத்தகைய தலைவர்களுடைய கடந்தகால செயற்பாடுகளை நன்கு
அவதானித்தே வந்திருக்கின்றார்கள். அதற்கேற்பவே முஸ்லிம்களது தீர்மானங்கள்
அமையும். நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முஸ்லிம் சமூகத்தின்
கருத்தறிந்து, ஆலோசனைகளைப் பெற்று அவ்வாறான ஒரு தீர்க்கமான தீர்மானத்தை
முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறான ஒரு நிலையில்
முஸ்லிம்கள் மிகவும் நிதானமாக செயற்படவேண்டும் முஸ்லிம்களால்
முன்வைக்கப்படுகின்ற தீர்மானங்கள் இந்த நாட்டின் நலனுக்கும், தேசிய
நல்லிணக்கத்திற்கும் அனைத்து மக்களின் சுதந்திரமான, பாதுகாப்பான
வாழ்விற்கும் சட்டம் ஒழுங்கு என்பவற்றின் சுயாதீனமான செயற்பாட்டிற்கும்,
இந்த நாட்டின் நல்லாட்சிக்கும் வழிசெய்யக்கூடியதாக இருக்கவேண்டும்.
இதன்மூலம் இந்த நாடு எதிர்நோக்கியிருக்கின்ற ஆபத்தில் இருந்து இந்த
நாட்டைப் பாதுகாக்க முடியும். எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :