ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்று இதுவரை தீர்மானிக்கவில்லை- SLMC

திர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்று இதுவரை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானிக்கவில்லை. இது தொடர்பில் கட்சியின் அனைத்து மட்டங்களிலும் கலந்தாராய்ந்துவருகின்றோம் என்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

கட்சியின் அனைத்து மட்டங்களிலும் கலந்துரையாடல்களை நடத்திவிட்டே ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற தீர்மானத்துக்கு வர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்றுக்காலை இடம்பெற்ற நிகழ்வு ஒன்று கலந்துகொண்டிருந்த நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் நிகழ்வின் இறுதியில் கேசரியிடம் தகவல் வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

'' முதலில் தற்போது ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கே எங்களுக்கு பூரண உடன்பாடில்லை. தற்போதைய நிலைமையில் முதலில் பாராளுமன்றத் தேர்தல்தான் நடைபெறவேண்டும் என்பது எமது கட்சியின் நிலைப்பாடாகும். காரணம் தற்போதைய பாராளுமன்ற ஆசன சமன்பாடு நாட்டை உரிய முறையில் பிரதிநிதிதித்துவப்படுத்தவில்லை '' என்று அமைச்சர் தெரிவித்தார். அவருடனான குறுகிய நேர்காணல் வருமாறு

கேள்வி: எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு வழங்கவுள்ளது?

பதில்: ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்று இதுவரை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானிக்கவில்லை. இது தொடர்பில் கட்சியின் அனைத்து மட்டங்களிலும் கலந்தாராய்ந்துவருகின்றோம். கட்சியின் அனைத்து மடடங்களிலும் கலந்துரையாடல்களை நடத்தவிட்டே ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற தீர்மானத்துக்கு வர முடியும்.

கேள்வி: எப்போது முடிவை கூறுவீர்கள்?

பதில்: எப்படியும் நவம்பர் மாதத்தில் கூறுவோம்

கேள்வி: ஆளும் ஐககிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் அமைச்சர் என்ற வகையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் குறித்த நிலைப்பாட்டை தீர்மானிக்க ஏன் தயக்கம்?

பதில்: எமது கட்சியை பொறுத்தவரை முதலில் தற்போது ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கே எங்களுக்கு உடன்பாடில்லை. தற்போதைய நிலைமையில் முதலில் பாராளுமன்றத் தேர்தல்தான் நடைபெறவேண்டும் என்பது எமது கட்சியின் நிலைப்பாடாகும். தற்போது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில் எங்களுக்கு உடன்பாடடில்லை. இதனை நாங்கள் தெளிவாக கூறியுள்ளோம்

கேள்வி: இடதுசாரி கட்சிகளும் இவ்வாறு கூறியுள்ளனவே?

பதில்: அதுபோன்றுதான் நாங்களும் கூறுகின்றோம்.

கேள்வி: அதற்கான காரணத்தை விளக்க முடியுமா?

பதில்: காரணம் தற்போதைய பாராளுமன்றம் நாட்டை உரிய முறையில் பிரதிநிதிதித்துவப்படுத்தவில்லை. தற்போதைய பாராளுமன்ற ஆசன சமன்பாடு என்பது நாட்டின் உண்மையான களநிலைவரத்தை பிரதிபலிக்கவில்லை. அரசியல் களநிலைவரத்தை பிரதிபலிக்கவில்லை. எனவே பாராளுமன்றத் தேர்தலைத்தான் நாங்கள் விரும்புகின்றோம் என்றார்.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிச்சயம் வெற்றியீட்டுவார். ஜனாதிபதியின் வெற்றியில் ஆளும் கூட்டணிக்கு எந்த சந்தேகமும் இல்லை. நாட்டின் அனைத்து மக்களும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் என அனைத்து பகுதிகளிலிருந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு கிடைக்கும். எதிரணியில் பொது வேட்பாளர் களமிறக்கப்பட்டாலும் அல்லது கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டுவார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இது இவ்வாறு இருக்க லண்டன் சென்றுள்ள ஐககிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லண்டனில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் சந்தித்தபோது ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை போட்டியிடவேண்டாம் என்றும் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குமாறும் சந்திரிகா குமாரதுங்க கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு இதுவே சிறந்த தருணம் என்றும் பொதுவேட்பாளர் வெற்றிபெற்ற பின்னர் நிறைவேற்று முறைமையை நீக்கி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமராகும் வாய்ப்பு ஏற்படும் என்று சந்திரிக்கா குமாரதுங்க ரணில் விக்ரமசிங்கவிடம் எடுத்துக்கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :