கொஸ்லந்தை மீரியபெத்த சம்பவம் தொடர்பில் விபரித்து உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் கோரி நிற்கின்ற அதேவேளை அதனை மேற்கொள்வதற்கு இந்த பாராளுமன்றத்தை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற அமைச்சர்கள், எம்.பி.க்களாகிய நாம் ஏன் முன்வரக் கூடாது. எமது சம்பளத்தினை ஒதுக்குவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.
இந்த பாராளுமன்றம் இவ்வாறான சந்தர்ப்பங்களில் முன்மாதிரியாக இருக்க வேண்டாமா என்று பிரதான எதிர்க்கட்சியான ஜக்கிய தேசியக் கட்சி நேற்று பாராளுமன்றத்தில் ஆதங்கம் வெளியிட்டு கேள்வி எழுப்பியது.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அமர்வின் போது கொஸ்லந்தை மீரியபெத்த தோட்ட அனர்த்தம் தொடர்பில் அமைச்சு அறிவித்தல் ஒன்றினை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் மஹிந்த சமரவீர வெளியிட்டார்.
இதன் பின்னர் உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன் அமரதுங்க மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
ஜோன் அமரதுங்க எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,
அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் அறிவித்தல் வெளியிட்டமை தொடர்பில் நாம் திருப்தியடைகிறோம்.
இந்த வேளையில் (நேற்றுக்காலை) எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கொஸ்லந்தைப் பிரதேசத்தில் இருக்கிறார். அங்கு அவர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விடயங்களை அறிந்து கொண்டிருக்கிறார். துரதிஷ்டவசமாக அமைச்சர் தனது உரையில் இதனை ஞாபகப்படுத்தவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குமாறு நாம் மக்களைக் கோரிக்கொண்டிருக்கிறோம். நாம் இந்தப் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கிறோம்.
இங்குள்ள அமைச்சர்களும் எம்.பி. க்களும் என நாம் அனைவரும் ஏன் இந்த மக்களுக்காக உதவ முன்வரக் கூடாது. எமது சம்பளத்தை ஒதுக்கித் தருவதற்கு நாம் தயாராக இருக்கிறோம். ஏன் அமைச்சர்களும் உறுப்பினர்களும் தமது சம்பளத்தை வழங்கி முன்மாதிரியாக செயற்படக் கூடாது என்று கேட்கிறேன்.
இந்த பாராளுமன்றம் தான் இவ்வாறான விடயங்களின் போது முன் மாதிரிகையாக இருக்க வேண்டும்.
இதனை நான் கூறுவதற்கு நேற்று (நேற்று முன்தினம் ) எனக்கு இந்த சபையில் இடமளிக்கப்படவில்லை. நாம் இந்த சம்பவத்தை வைத்து அரசியல் இலாபம் தேடுவதாகக் கூறப்பட்டது. அப்படியான தேவை அரசுக்கு இருக்கலாம் எமக்கு கிடையாது என்றார்.

0 comments :
Post a Comment