நூலறிமுகம்
நூல் : மேகவாழ்வு
நூலாசிரியர் : வெலிமடை ரபீக்
வெளியீடு : புரவலர் புத்தகப் பூங்கா
விலை : ரூ.150.00
பக்கங்கள் : 72
நூலறிமுகம் : அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூர்
பிரபலமான கவிதையாளர்களுள் வெலிமடை ரபீக் முக்கியமானவர். மலையகத்தின் மலைநிமிர் வெலிமடை எனும் ஊரின்பேரில் தன்பெயரை இணைத்து கவிதை எழுதுகின்றவர். அவரது கவிதைகள் வெளிவராத பத்திரிகைகளோ, சஞ்சிகைகளோ இல்லை என்றுதான் கூறவேண்டும். இவரது கவிதைகள் மலைபோல் கம்பீரமானவையாக இருக்கும். வாசிப்பதற்கு இனிமையாகவும், சொற்செறிவுள்ள கருத்தாளமிக்கதாகவும் காணப்படும் இவரது கவிதைகளை முதன்முதலில் நூல்வடிவில் புத்தகமாக்கிய பெருமை புரவலர் புத்தகப்பூங்காவுக்கே உரியது. அந்தவகையில் மேகவாழ்வு கவிதைத் தொகுதியின் தரம் மேலும் வலுப்பெறுகின்றது.
மேகவாழ்வு 28தலைப்புக்களில் கவிதையாகப் பொழிந்து கொட்டுகின்றது. பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட கவிதைகளைத் இத்தொகுதியில் காணலாம். அந்தவகையில் கவிஞர் வெலிமடை ரபீக் சுனாமி கடற்கோள் காவுகொண்டு, நமது இலங்கையின் கரையோரங்களைத் கபளீகரம் செய்தபோது மலை முகட்டிலிருந்து சுனாமி விதைத்திருந்த அவலச் சுவடுகளை கவிதையில் இவ்வாறு பொழிகின்றார்.
நீ வந்து போனாய்...?
ஊரெல்லாhம் உப்பு ருசி
உனது காலடி பட்ட இடமெல்லாம்
காயங்கள்
பூவிழந்து, பொட்டிழந்து
விதவையாயிற்று - ஊர்
ஒரு விருந்தாளியாக
வந்து போயிருக்கலாம்
ஒரு விரோதியாக
ஏன் வந்துபோனாய் கடலே..? என்கிறவாறு வினாத்தொடுத்திருந்தார்.
மேலும் மற்றொரு கவிதையில் யுத்தமேகங்கள் நம்நாட்டில் தீயாய் பற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் எழுதிய கவிதையிது. நெருப்பணைக்க எனும் தலைப்பில் வரும் கவிதையில் ஓரிடத்தில் கவிஞர் உள்ளக்குமுறலை இவ்வாறு வெளிப்படுத்துகின்றார்.
நெருப்பணைந்தால் விறகுகளை
விற்பதெவ்வாறு
ஒருவர் முழங்கினார்
நெருப்பணைந்தால்
நாடிருளும் எதிர்த்தது கட்சி... இவ்வாறு கட்சி அரசியல்பேசி யுத்தம் செய்து காலம் தள்ளிய நிகழ்வினை சிறந்த முறையில் யுத்தத்தோடு இணைத்து கவிதைபேசிய ரபீக் போற்றப்படவேண்டியவரே.
சமாதானப் பாடல் எனும் தலைப்பில் ஒருகவிதையை இவ்வாறு வரைகின்றார் ரபீக்.
காலம் சூரிய வெளிச்சங்களை
அவிழ்த்துப்போயிற்று
காலம் சூரிய வெளிச்சங்களை
முடித்து போயிற்று
வரண்டு செத்த நிலத்தில்
வான்மேகங்கள்
வந்தடைந்து வீழ்ந்து
வசந்தம் மலர்ந்திற்று
பின், வசந்தம் உலர்ந்திற்று...
கனவுலகு எனும் தலைப்பில் மற்றொரு கவிதையில் சமூகத்தின் ஒற்றுமையை வேற்றுமையோடு பார்க்கின்ற மனிதத்துவத்தின் வாசலில் வந்து கனவுகாண்கின்றார் கவிஞர். அந்த கனவுலகிற்கே தன் கண்மனிiயும் அழைக்கின்ற கவித்தும் வெலிமடை ரபீகின் தனித்துவமாய் பேசுகிறது. போர்வேண்டாம் என்கிற கவிவரிகளில்
'எனது சகோதரர்கள்
எனக்குச் சமாதானமானவர்கள்
உயிரும் மனமும்
உள்ளவர்கள்....... ஐயா போர்வேண்டாம், போர்வேண்டாம்....
'வறுமையின் ஒப்பாரி' எனும் தலைப்பில் 'வறுமை இரக்கமற்ற பெரும் வறுமை வீதிகளுக்கு என்னை வீசிவிட்டது... நானின்று வெயில் குடித்து வியர்வை துப்பி அலைந்து திரிகின்றேன்' என்று வறுமையின் கோரப்பிடியினை கவிதையாக்கி ஒப்பாரி செய்கிறார் கவிஞர் ரபீக்.
மலையகம் தந்த 'ஓர் அம்மாவின் கல்லறையில்' எனும் கவிதையில் 'வெள்ளையர்கள் கட்டித் தந்துபோன லயக்கூட்டுக்குள் சிறகுகளை சுருட்டிக் கொண்டு சீவித்தோம், தேசம் சில ரூபாய்களை தந்து உன் உழைப்பை வாங்கி பல கோடிகளுக்கு விற்று லாபமடைந்தது' என்கிற வரிகளில் ஆயிரம் அர்த்தங்களை புரியவைக்கிறார் கவிஞர். மேகவாழ்வு தலைப்பில் மேகங்களுக்கு வீடு இல்லை விலங்கு இல்லை. நினைத்த இடம் எங்கும் சுற்றித்திரிந்தலைந்து சுதந்திரமாய் வாழ்வதற்கு நான் கனவிலும் நினைவிலும் மேகங்களாகவே பிரியப்படுகின்றேன். நீ...? என்று எம்மிடம் வினவுகின்றார். அபாரமான கவித்துளிகள்.
பின் அட்டையில் வெலிமடை ரபீகின் இலக்கியப் பணிகள் பற்றியும், பதிப்புரையினை தி. ஞானசேகரன் அவர்களும், ஆத்மாவோடு உறவாடும் கவிதைகள் என்று கலைஞர் கலைச்செல்வனும், சொல்வதெல்லாம் உண்மை எனும் தலைப்பில் கவிஞர் ரபீகின் உரையும் மேகவாழ்வு கவிதை நூலை அலங்கரிக்கின்றன. 'கல்வியால் வாழ்வில் உயரச் செய்த தாய்தந்தைக்கு' சமர்ப்பிக்கும் இந்நூலின் ஆசிரியரான கவிஞர் வெலிமடை ரபீக் ஆசிரிய ஆலோசகராக பணிசெய்கின்றார். இவரது ஆக்கங்கள் உண்மையில் மனதைத் தொடுகின்ற கவிதைகள் என்பதற்கு மேகவாழ்வு நூல் தக்க ஆதாரம் என்றே கூறலாம்.
.jpg)
0 comments :
Post a Comment