ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்ய சட்டப்படி முடியாது: பெங்களூர் உயர் நீதி மன்ற தீர்ப்பு

பெங்களூர் ஐகோர்ட்டில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் ஜாமீன் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதுகுறித்து நீதிபதி சந்திர சேகரா வழங்கிய தீர்ப்பின் முழு விவரம் வருமாறு:–

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா 1984 முதல் 1989 வரை டெல்லி மேல்–சபை எம்.பி.யாகவும், 1989 முதல் 1991 வரை சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவராகவும், 1991 முதல் 1996 வரை தமிழக முதல்– அமைச்சராகவும் இருந்துள்ளார்.

2–வது குற்றவாளியான சசிகலாவின் கணவர் நடராஜ் அரசு துறை துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். 3–வது குற்றவாளி வி.என்.சுதாகரன் முதல் குற்றவாளியின் வளர்ப்பு மகனாக தத்தெடுக்கப்பட்டவர். 4–வது குற்றவாளியான இளவரசியின் கணவர் ஜெயராமன் அரசு ஊழியராக இருந்து 1991–ல் மரணம் அடைந்துள்ளார். இவர் 2–வது குற்றவாளியான சசிகலாவின் அண்ணி. குற்றவாளிகளாக உள்ள சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் 1988–ம் ஆண்டு முதல் குற்றவாளி வீட்டில் வசித்து வருவது உரிய சாட்சியங்களுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல் குற்றவாளி கடந்த 1991 முதல் 1996 வரை தமிழக முதல்– அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்டது. 14.16.1996–ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முழுமையான விசாரணை நடத்தி 4.6.1997–ல் குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு சென்னையில் அமைக்கப்பட்ட தனி நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. பின்னர் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் சிறப்பு நீதிமன்றம் 2004–ம் ஆண்டு பெங்களூருக்கு மாற்றப்பட்டது.

முழுமையான விசாரணை நடத்தி கடந்த மாதம் 27–ந்தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் அரசு தரப்பில் கூறப்பட்ட புகாருக்கான ஆதாரம் உரிய சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டதால் 4 பேரும் குற்றவாளிகளாக தீர்மானிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தனி நீதிமன்ற தீர்ப்பை ஆராய்ந்து பார்க்கும்போது குற்றவாளிகள் தவறு செய்துள்ளதற்கான அனைத்து முகாந்திரம் உறுதிப்பட்டுள்ளது. அதை மிகவும் சரியான தீர்ப்பாகவே நீதிமன்றம் கருதுகிறது.

குற்றவாளிகள் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். கிரிமினல் வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவில் ‘‘கிரிமினல் வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்படும் தனி நீதி மன்றம் ஒரு வருடத்துக்குள் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்க வேண்டும். அவ்வாறு முடியாவிட்டால் தாமதத்துக்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற முடியாத வகையில் இந்த வழக்கு 18 ஆண்டுகள் நடந்துள்ளது.

முழுமையாக விசாரணை நடத்தி குற்றவாளிகள் தவறு செய்திருப்பதை தனி நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதி செய்துள்ளதால், சிறப்பு நீதிமன்றம் வழங்கி இருக்கும் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. குற்றவாளிகளை விடுதலை செய்வதற்காக பல நீதிமன்றங்களின் தீர்ப்புகளை உதாரணமாக காட்டி வக்கீல்கள் வாதம் செய்தனர்.

குறிப்பாக முன்னாள் மத்திய ரெயில்வே மந்திரி லல்லுபிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை குறிப்பிட்டுள்ளனர். லல்லு பிரசாத் யாதவ் 10 மாதங்களுக்கு மேல் ஜெயிலில் இருந்தார். ஜார்க்கண்ட் மாநில ஐகோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு மனுதாக்கல் செய்தபோது அவர் 10 மாதம் சிறையில் இருந்ததை அடிப்படையாக வைத்துதான் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. எனவே லல்லுவின் வழக்கை இதில் சேர்க்க முடியாது.

தனி நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் குற்றவாளிள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே குற்றவாளிகளை சுதந்திரமாக வெளியில் விட்டால் அது நீதிக்கு செய்யும் இழுக்கு ஆகும். தவறு செய்தவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிப்பது மட்டுமே நீதிக்கு கொடுக்கும் மரியாதை.

ஊழல் செய்பவர்களுக்கு கருணை காட்டக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தெளிவுபடுத்தி இருக்கிறது. மேலும் அவர்களை ஜாமீனில் விடுதலை செய்வதற்கான முகாந்திரம் சட்டத்தில் இல்லை.

ஆகவே ஜாமீனில் விடுதலை செய்யக்கோரும் மனுவை தள்ளுபடி செய்கிறேன். தனி நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அப்பீல் மனு மீதான விசாரணையை அக்டோபர் 27–ந்தேதிக்கு ஒத்தி வைக்கிறேன்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.<மாலைமலர்>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :