13 ஆவது திருத்தத்தை எதிர்க்கின்றோம்: மோடியை சந்திக்கப்போகிறது பொதுபலசேனா

திகாரப் பரவலாக்கலை ஆதரிக்கின்றோம். ஆனால் இந்தியாவினால் பலாத்காரமாக திணிக்கப்பட்ட 13 ஆவது திருத்தத்தை எதிர்க்கின்றோம். இதனால் நாட்டுக்கும் மக்களுக்கும் எதுவிதமான நன்மையும் கிடைக்கவில்லையெனத் தெரிவிக்கும் பொதுபலசேனா இவ் விடயம் தொடர்பில் இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்து தெளிவுபடுத்தவுள்ளதாகவும் பொதுபலசேனா அறிவித்தது.

கிருலப்பனையிலுள்ள பொதுபலசேனா தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய பொதுபலசேனாவின் நிர்வாகப் பணிப்பாளர் டிலந்த விதானகே அதிகாரப் பரவலாக்கலை ஆதரிக்கின்றோம்.

ஆனால், அதிகாரம் மக்களுக்கு பரவலாக்கப்பட வேண்டும். இன்று இலங்கையில் இந் நிலையில்லை. அதிகாரங்களை மக்களுக்கு பரவலாக்காது அரசியல்வாதிகளுக்கு அதிகாரங்களை வழங்கியுள்ளனர்.

இதனால் நாட்டுக்கோ, மக்களுக்கோ எதுவிதமான நன்மைகளும் கிடைக்கவில்லை. அதேவேளை, இந்தியாவின் காங்கிரஸ் அரசாங்கத்தினால் எம் மீது பலாத்காரமாக திணிக்கப்பட்டது தான் 13 ஆவது திருத்தச் சட்டமாகும்.

இது எவ்விதத்திலும் எமது நாட்டுக்கு பொருந்தாது.

எனவே இதனை இல்லாதொழிக்க வேண்டும். நிறைவேற்று அதிகாரத்திற்கு இதனை ஒரே இரவில் செய்ய முடியும். ஆனால், ஏனோ தெரியாது காலம் கடத்தப்படுகிறது.

இன்று வட மாகாணம், மேல் மாகாண சபைகள் இயங்குகின்றன. ஆனால், இதனால் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன?

எதுவுமே கிடைக்கவில்லை. இது நாட்டுக்கு பெரும் சுமையாகும். எனவே, மாகாண சபைகள் ஒழிக்கப்பட வேண்டும்.

பஞ்சாய முறைமையிலாவது மக்களுக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும்.

இந்தியா

இந்தியாவின் பிரதமர் மோடி இலங்கை தொடர்பிலான ஆரோக்கியமான அணுகு முறையை கையாள்கிறார். இதனை வரவேற்கின்றோம்.

ஆனால், தமிழ் நாட்டின் அழுத்தம் காரணமாகவும் 13 ஆவது திருத்தத்தின் உள்ளடக்கம் தெரியாததன் காரணமாகவும் அதனை அமுல்படுத்துமாறு பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்கிறார்.

சந்திப்பு

எனவே, விரைவில் மோடியை நாம் சந்திக்கவுள்ளோம்.

இதன்போது பயனற்ற 13 ஆவது திருத்தம் தொடர்பில் தெளிவுபடுத்துவோம்.

புலம்பெயர்வு

13 ஆவது திருத்தத்தை புலம்பெயர்ந்து வாழும் புலி ஆதரவாளர்களும் தமிழகத்தின் அரசியல்வாதிகளுமே வலியுறுத்துகின்றனர் என்றும் டிலந்த விதானகே தெரிவித்தார்.

சம்லி லியனகே

இந்தியாவினால் 13 ஆவது திருத்தம் எம் மீது திணிக்கப்பட்டபோது விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை களைவதாக இந்தியா உறுதியளித்ததோடு இந்திய அமைதி காக்கும் படையினரையும் இங்கு அனுப்பி வைத்தது.

ஆனால், அதனைச் செய்ய முடியாமல் போனது. ஆகவே, அன்றைய தினமே 13 ஆவது திருத்தம் வலுவிழந்து விட்டது. காலாவதியாகி விட்டது என இங்கு உரையாற்றிய பொதுபலசேனாவின் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பிரிவு பொறுப்பாளர் சம்லி லியனகே தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

இன அடிப்படையில் அதிகாரங்களை பரவலாக்குவதை எதிர்க்கின்றோம்.

13 ஆம் இலக்கம் அபசகுணமான இலக்கம். எனவே, இத்திருத்தத்தை ஒழிப்பது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

பஞ்சாயத்து முறைமையை ஏற்படுத்த வேண்டும். அதேவேளை மாகாண சபை இன்று பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடையும் வேட்பாளர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உறவுக்காரர்களும் அரசியலை படிப்பதற்கான தங்குமிடமாக மாறி விட்டது.

இது நாட்டுக்கும் மக்களுக்கும் சுமையாகவும் நாட்டின் பணத்தை வீணாகி செலவழிப்பதுமாகவே அமைந்துள்ளது என்றும் சம்லி லியனகே தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர், தேசிய அமைப்பாளர் விதாரன் தெனியே நந்ததேரர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :