கல்முனை மாநகர சபைக்கான சோலை வரி மக்களின் காலடிக்கு சென்று அறவிடும் முழுநாள்



அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.ஐ.சம்சுதீன்-

ல்முனை மாநகர சபைக்கான சோலை வரி நிலுவைகளை மக்களின் காலடிக்கு சென்று அறவிடும் முழுநாள் நடமாடும் சேவை நேற்று வியாழக்கிழமை சாய்ந்தமருது பிரதேசத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு சாய்ந்தமருது சுகாதார மத்திய நிலைய மண்டபத்தில் கல்முனை மாநகர முதல்வர்- சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத், மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.நசார்தீன், ஆணையாளர் ஜே.லியாகத் அலி, கணக்காளர் எச்.எம்.எம்.றஷீத், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.அசுஹர், சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்.ஐ.ஏ.மஜீத் உட்பட மற்றும் பல அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது முதல்வர் சில பொது மக்களிடம் இருந்து சோலை வரி நிலுவைத் தொகையை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு பற்றுச்சீட்டை வழங்கி குறித்த நிகழ்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வைத் தொடர்ந்து கல்முனை மாநகர சபையின் நிதிப் பிரிவு உத்தியோகத்தர்கள், கணக்காளர் எச்.எம்.எம்.றஷீத் அவர்களின் மேற்பார்வையில் சாய்ந்தமருதுப் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஒலிபெருக்கி அறிவிப்புடன் களமிறங்கி மக்களின் காலடியில் வீடு வீடாகச் சென்று சோலை வரி நிலுவைகளை அறவீடு செய்தனர்.

இது குறித்து ஒரு வார காலத்திற்கு முன்னரே மக்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டு- அவர்கள் செலுத்த வேண்டிய சோலை வரி நிலுவைத் தொகையும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் நிமித்தம் குடும்பத் தலைவர்கள் தாம் செலுத்த வேண்டிய சோலை வரி நிலுவைத் தொகையை முழுமையாகவும் பகுதியாகவும் செலுத்தி அதிகாரிகளிடம் இருந்து பற்றுச்சீட்டைப் பெற்றுக் கொண்டனர்.

இதன்போது தமது சோலை வரி நிலுவைகளை முழுமையாக செலுத்திய வீடுகளில் மாநகர சபையின் விசேட சேவைக்கான ஸ்டிக்கர் அதிகாரிகளினால் ஓட்டப்பட்டது.

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அனைத்துப் பிரதேசங்களிலும் மக்களின் காலடியில் சென்று அவர்கள் செலுத்த வேண்டிய சோலை வரி நிலுவைகளை அறவீடு செய்வதற்கான நடமாடும் வாரம், முதல்வர் நிஸாம் காரியப்பரினால் பிரகடனம் செய்யப்பட்டு- அதற்கு சபை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இதன் மூலம் கடந்த பல வருடங்களாக பெரும் தொகை நிலுவைகளாக இருந்து வருகின்ற சோலை வரிகளை மாநகர சபையினால் இலகுவாக அறவீடு செய்ய முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாய்ந்தமருது பிரதேசத்தில் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட சோலை வரி நிலுவை அறவீடு நடமாடும் சேவை வெற்றிகரமாக அமைந்தது எனவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பொது மக்களுக்கும் கிழக்கு மாகாண சபையின் மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், மாநகர சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :