த.நவோஜ்-
வேலை வாய்ப்பு இல்லை என்பதற்காக தமிழ் இளைஞர் யுவதிகளை இராணுவத்தில் இணைத்து எமது தமிழ் மக்களுக்கு எதிராகவே அவர்களை வழிநடத்துகின்ற செயற்திட்டத்திலும் இந்த அரசாங்கம் முனைப்புக் காட்டுகின்றது. இந்த விடயத்தில் எமது இளைஞர்கள் விழிப்புடன் செயலாற்ற வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் செயோன் தெரிவித்தார்.
வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 15 தேசிய மாநாட்டு நிகழ்வின் அம்சமான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியின் முதலாவது தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 64வது ஆண்டைக் கடந்து நிற்கின்ற இந்த வேளையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டுடன் ஒன்றிணைந்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியின் முதலாவது தேசிய மாநாடும் இடம்பெறுவது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக நான் கருதுகின்றேன்.
ஒரு நாட்டின் தலைவிதி இளைஞர்களின் கைகளில் தான் இருக்கின்றது. இளைஞர்கள் ஒன்றிணைந்தால் ஒரு நாட்டின் தலைவிதியை மாற்றியமைக்க முடியும். அந்தவகையில் கடந்த 2009 மே 19 எமது ஆயுதப் போராட்டம் மௌனித்ததற்குப் பிற்பாடு இந்த ஐந்து வருடங்களில் வடகிழக்கில் எமது இளைஞர்களின் நிலை எவ்வாறு இருக்கின்றது என்பதனை நாம் மீள்பரிசீலனை செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
குறிப்பாக போதைவஸ்து பாவனை அதில் மது பாவனை கூடிய மாகாணமாக கிழக்கு மாகாணம் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதனை அந்தந்த அரசாங்க அதிபர்களும் உறுதிப்படுத்தி இருக்கின்றார்கள். அதைவிட பாலியல் துஸ்பிரயோகங்களும், தற்கொலை முயற்சிகளும் இன்று வடகிழக்கில் அதிகரிக்கப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக பல்கலைக் கழகத்திலே கல்வி பயிலும் எமது மாணவர்கள் கூட கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இது எமக்கு மனவேதனையைத் தருகின்றது.
இவைகளுக்கு அப்பால் வடகிழக்கில் இளைஞர்கள் இடையே ஒழுக்க சீர்கேடுகள் அதிகரித்துச் செல்கின்றது. ஆனால் கடந்த 30 வருட விடுதலைப் போராட்ட காலத்தில் இளைஞர்கள் மத்தியில் மனோபலமும், ஒழுக்கமும், மிக உன்னதமாகப் பேணப்பட்டது. ஆனால் தற்போது இந்த அரசாங்கமானது எமது வடகிழக்கு இளைஞர்கள் மாணவர்களிடையே தமிழ் தேசிய உணர்வை மழுங்கடிக்கும் செயற்பாட்டை பல நிகழ்ச்சிகள் மூலம் செய்து வருகின்றது. குறிப்பாக தமிழ் இளைஞர்களை வைத்து தமிழ் இளைஞர்களையே அழிக்கின்ற நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில் இளைஞர்களாகிய நாங்கள் விழிப்பாக செயற்பட வேண்டும்.
தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்ட எமது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 64வது ஆண்டினை எட்டுகின்ற இதே வேளையில் வடகிழக்கு மக்களுக்கான எமது அரசியல் தீர்விற்காக முள்ளிவாய்க்கால் வரை பல இலட்சக்கணக்கான மக்களையும், அத்துடன் சேர்ந்த இளைஞர்கரளையும் இந்த மண்ணில் விதையாக்கி இருக்கின்றோம். அவர்களின் கனவை நனவாக்க சர்வதேச ரீதியாகச் சென்றிருக்கின்ற எமது உரிமைப் பிரச்சனையானது வெற்றியடைந்து இறுதித் தீர்வைப் பெறும் வரை இளைஞர்களாகிய நாம் உறுதியாகவும் உணர்வு மிக்கவர்களானவும், செயற்படுவதுடன் உலகமயமாக்கப்பட்ட காலகட்டத்தில் அதற்கேற்ப கல்வியிலும் ஏனைய துறைகளிலும் வளர்ச்சி அடைவதுடன் அந்த வளர்ச்சியானது எமது தாய் நிலத்தின் விடிவிற்கு பங்காற்றக்கூடிய வகையில் எங்களை நாhங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று எமது புலம்பெயர்ந்த நபாடுகளில் ஏறக்குறைய ஒரு இலட்சம் தமிழ் இளைஞர்கள் வாழ்கின்றனர். அவர்கள் அந்தந்த நாடுகளில் இளையோர் அமைப்புகளில் இணைந்து எமது தமிழ் தேசிய விடுதலைக்காக அந்த நாட்டு மொழிகள் ஊடாக அந்நாட்டு தலைவர்களும் இராஜதந்திரிகளும் எமது நிலைப்பாட்டை ஆதாரபூர்வமாக வெளிக்காட்டி வருகின்றனர். இந்த முதலாவது இளைஞர் தேசிய மாநாட்டில் இவர்களைப் பாராட்டி அவர்களுக்கு நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன்.
வடகிழக்கில் வாழ்கின்ற இளைஞர்களாகிய நாமும் தமிழ் உணர்வுள்ள சமுகமாக மாறுவதுடன் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் வடகிழக்கு தமிழ் இளைஞர்களை திசை திருப்புகின்ற நடவடிக்கைக்குப் பின்னால் சோரம் போகாமல் எமது தாயகத்தின் சுதந்திரமான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வினைப் பெறுவதற்காக உழைத்துக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியுடன் இளைஞர்களும் கைகோர்த்து அவர்கள் எடுக்கின்ற முடிவுகளுக்கு எமது பூரண ஆதரவினை செயல் வடிவில் கொடுக்க இந்த மாநாட்டில் அணி திரள்வோம் என அறைகூவல் விடுக்கின்றேன்.
எதிர்வரும் காலங்களில் இலங்கை அரசு பல தேர்தல்களை சந்திக்க இருக்கின்றது. இந்த தேர்தல்களில் தாம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக வடகிழக்கில் உள்ள இளைஞர்களை பல பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அவர்களை ஒன்றிணைத்து அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலினூடாக தேர்தலில் வெற்றியீட்டுவதற்காக இப்பொழுது இருந்தே அதற்கான ஆயத்தங்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர் யுவதிகளை வரவழைத்து பிரதேச செயலகங்களினூடாக கூட்டங்களை ஒழுங்குபடுத்தி இளைஞர்களுக்கான பிரதேச சம்மேளனங்களை உருவாக்கும் நடவடிக்கைகளைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
இதில் சம்மந்தப்பட்ட ஆளும் கட்சியின் அரசியல்வாதிகளும், அமைச்சர்களும் ஈடுபடுகின்றனர். எமது இளைஞர்கள் சிலர் தொழில் வாய்ப்பு இல்லாத காரணத்தினால் அவர்களின் இந்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்கின்றனர். உண்மையில் இளைஞர்களுக்கு தொழில் வழங்க வேண்டியது ஒரு சாட்டை நிர்வகிக்கின்ற அரசாங்கத்தின் பொறுப்பு. ஆனால் தேர்தல்களுக்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது என்பதை எமது இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வேலை அற்ற பட்டதாரிகளாகக் கூட எமது வடக்கு கிழக்கில் ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்னும் ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
கடந்த குறிப்பிட்ட சில ஆண்டிற்குப் பிற்பாடு பட்டம் முடித்தவர்கள் இன்னும் இன்னும் வேலைவாய்பிற்கு உள்வாங்கப்படவில்லை. அவர்களை உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வேலை வாய்ப்பு இல்லை என்பதற்காக தமிழ் இளைஞர் யுவதிகளை இராணுவத்தில் இணைத்து எமது தமிழ் மக்களுக்கு எதிராகவே அவர்களை வழிநடத்துகின்ற செயற்திட்டத்திலும் இந்த அரசாங்கம் முனைப்புக் காட்டுகின்றது. இந்த விடயத்தில் எமது இளைஞர்கள் விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.
கடந்த போராட்டங்களில் மாவீரர்களான ஏறத்தாழ நாற்பதாயிரம் இளைஞர் யுவதிகளுக்கு அப்பால் அவயவங்களை இழந்த ஆயிரக்கணக்கானவர்கள், தாய் தந்தையர்களை இழந்த ஆயிரக்கணக்கான எமது உடன்பிறப்புக்களான உறவுகள், பல வேதனைகளில் மத்தியில் எமது மண்ணில் அவலங்களுடன் வாழ்க்கை நடத்துகின்றனர். இதனை விட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இன்னும் சிறைகளில் பல துன்ப துயரங்களுடன் வாழ்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கான வாழ்வாதாரத் திட்டங்களையும், சிறையில் வாடும் எமது இளைஞர்களையும் விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளையும் இளைஞர்களாகிய நாமும் எமது கட்சியின் தலைவர்களுடன் சேர்ந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் இளைஞர் அணியில் உள்ள நாங்கள் ஒழுக்கமுடன் செயற்படுவதன் மூலம ;தான் இளைஞர் அணியை எமது சமுகம் மதிக்கும். இளைஞர்களிடையே வருகின்ற சிற்சில பிரச்சனைகளை நாங்களே இனம்கண்டு தீர்த்து மற்றவர்களுக்கு உதாரண சீலர்களாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
இன்று இடம்பெறுகின்ற இளைஞர் மாநாடானது எமது இனத்திற்கு ஒரு மாற்றத்தினைக் கொண்டு வரக்கூடிய வகையில் அமைவதுடன் மாநாட்டிலும் கூட்டங்களிலும் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் செயல்வடிவில் இடம்பெற இளைஞர்களாகிய நாங்கள் ஒற்றுமையுடனும், ஒரு கொள்கையுடனும் செயற்பட வேண்டும் என அன்பாகவும் தமிழின உணர்வோடும் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment