கிழக்கு மாகாண சபையின் பாரபட்ச இனவாதச் சிந்தனையால் தமிழ் மக்கள் பாதிப்பபு-துரைரெட்ணம்

கிழக்கு மாகாண சபையின் பாரபட்ச இனவாதச் சிந்தனை காரணமாக இம்மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதைத் தவிர்க்க முதலமைச்சர் மத்திய அரசு சார்ந்த விடயங்களுக்கும், மாகாண அரசு சார்ந்த விடயங்களுக்கும் ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென உறுப்பினர் இரா.துரைரெட்ணம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு மாகாணசபை உறுப்பினர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்சமயம் தோன்றியுள்ள காலநிலை மாற்றம் காரணமாக நீர்த்தட்டுப்பாடு, தொற்றுநோய் அபாயம், யானைகளின் அனர்த்தம், விலைவாசி உயர்வு, மத்திய அரசின் திட்டமிட்ட புறக்கணிப்பு செயற்பாடு, மாகாண அரசின் பாரபட்சமான கொள்கைகள், யுத்தப் பாதிப்புக்கள் போன்றவற்றால் கல்வி, தொழில் முயற்சி, வறுமை, சமுதாய சீரழிவு, வேலை இல்லாத் திண்டாட்டம், அரச உத்தியோகஸ்தர்களின் வருமானப் பற்றாக்குறை, விவசாய நடவடிக்கைகள் பாதிப்பு, மீனவர்கள், கால்நடைப் பண்ணையாளர்கள், தினக் கூலிக்காரர்கள் போன்ற பல்வேறு தரப்பினர் பாதிப்படைந்து கொண்டிருக்கின்றனர்.

இதேவேளை கிழக்கு மாகாணசபையின் கீழ் நீண்டகாலமாகத் தற்காலிக, ஒப்பந்தம் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்த பலர் 45 வயதைக் கடந்தும் கல்வித்தராதரம் இல்லை என்னும் காரணத்தைக் காட்டி நிரந்தர நியமனம் வழங்குவதில் நழுவல் போக்கினைக் கடைப் பிடிக்கின்றமை போன்ற செயற்பாடுகளைத் தவிர்த்து கிழக்கு மாகாணசபை பாதிப்படைந்துள்ள மக்களுக்கு உரிய பரிகார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 14 ஆண்டுகளின் பின் எழுந்துள்ள வறட்சியான காலநிலை மாற்றம், கடுமையான காற்றுக் காரணமாக நீர் நிலைகள் வற்றிவருவதுடன், கடுமையான வெப்பநிலை நிலவுகிறது.

அதன் காரணமாக விவசாய நடவடிக்கைகள் பெரிதும் பாதிப்படைந்து உள்ளதுடன், குடிநீர்த் தட்டுப்பாடும் அன்றாடப் பாவனைக்குரிய நீர் இன்மைப் பிரச்சினையும் அதிகளவான கிராமங்களில் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாகத் தொற்றுநோய் அபாயங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சூழ ஆரம்பித்துள்ளது.

மேலும், நெற்செய்கை, சிறுதோட்டச் செய்கை, சேனைப் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளன. அன்றாட கருமங்களைச் செய்ய முடியாத அளவுக்கு வெப்பநிலை கடுமையான காற்று மக்களை வதைக்கின்றது. மீன்பிடித் தொழில் மிகமோசமான அளவில் பாதிப்படைந்துள்ள சூழ்நிலையில் விவசாயப் பயிர்ச் செய்கைகள் அழிவடைந்துள்ளன.

இதனால் உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் அன்றாட வாழ்வாதாரத்ததைச் சீர்குலைத்துள்ளது. மீன் உணவு வகை, மரக்கறி உணவு வகைகளின் அதிகரித்த விலையேற்றம் அன்றாட வேதனத்தை விஞ்சிய அளவிற்கு அதிகரித்துள்ளது.

காட்டு மிருகங்களின் தொல்லைகள் குறிப்பாக யானைகளினால் ஏற்படும் அனர்த்தம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. தினமும் யானைத் தாக்குதல் காரணமாகப் பல வீடுகள் இம் மாவட்டத்தில் பல பகுதிகளில் சேதமடைவதுடன் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நெல், தானிய வகைகள், பயன்தரும் மரங்கள், யானைகளினால் துவசம் செய்யப்படுகின்றன.

இதன் காரணமாக மக்கள் ஊண், உறக்கமின்றி, பொருளாதார வசதியின்றி பெரும் உளஉடல் உபாதைகளுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களின் உயிர்ப் பாதிப்பைத் தவிர ஏனையவை ஒன்றுக்கும் நஸ்ட ஈடு வழங்கப்படவில்லை.

இதேவேளை க.பொ.த உயர்தரப் பரீட்சை, தரம் ஐந்து புலைமைப் பரிசில் பரீட்சை, கா.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களின் கல்வி நிலையும் பாதிப்படைந்துள்ளது.

குறிப்பாக எல்லைப்புறக் கிராம மக்கள் தங்கள் கிராமங்களை விட்டு வறுமை காரணமாகவும் குடிநீர்த் தட்டுப்பாடு காரணமாக இடம் பெயரக் கூடிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளன.

மேலும் மக்களைச் சீரழிக்கும் வகையில் மதுபானசாலைகள் அதிகம் திறக்கப்பட மத்திய அரசு அனுமதி வழங்குகிறது. இதனால் மதுபாவனைப் பழக்கங்கள், பொருளாதார அழுத்தங்கள் அதிகமாக ஏற்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணசபையின் கீழ் பல ஆண்டுகாலமாக அதிகமான தமிழர்கள் வேலை செய்து கொண்டு வருகின்றனர். குறிப்பாக உள்ளூராட்சித் திணைக்களம், விவசாய சிறுகைத்தொழில் திணைக்களம், கல்வி, சுகாதாரத் திணைக்களங்களில் வேலை பார்க்கும் இவர்களுக்கு ஆளணி அனுமதி கிடைக்காததன் காரணமாக நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.

தற்சமயம் அனுமதி கிடைத்த நிலையில் 45வயது கடந்ததையும் கல்விதாராதரக் குறைவையும் காரணம் காட்டி நிரந்தார நியமனம் வழங்காமல் இழுத்தடிப்புச் செய்து வருகிறது. இச் செயலானது கிழக்கு மாகாண சபையால் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதை எடுத்துக்காட்டுகின்றது.

பல அரச உத்தியோகஸ்தர்களின் சம்பள நிலுவைகள், கொடுப்பனவுகள், பதவி உயர்வுகள் தொடர்பான விடயங்களில் தாமதப்போக்கு கடைப் பிடிக்கப்படுவதால் அரச உத்தியோகஸ்தர்கள் விரக்தி நிலைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர்.

மத்திய அரசின் திட்டமிட்ட செயற்பாடுகள் காரணமாக இம்மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் உள்ள தமிழர்களின் பிரதேசத்துக்குரிய குறிப்பாக மாதவணை, கதிரைக்கல்மலை, மங்களகம, மாவிலாறு, கெவிளியாமடு புணாணை, மையிலந்தணை, போன்ற கிராமங்களில் உள்ள காணிகளைக் கையகப்படுத்த மறைமுகமான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்விடயங்கள் தொடர்பாகக் கிழக்கு மாகாண அரசு பாராமுகமாக இருந்து வருகின்றது. குறிப்பாக பாரபட்ச இனவாதச் சிந்தனை காரணமாக இம் மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இதைத் தவிர்க்க மேற்குறிப்பிடப்பட்டுள்ள மத்திய அரசு சார்ந்த விடயங்களுக்கும், மாகாண அரசு சார்ந்த விடயங்களுக்கும் ஏற்ற நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :