கவிஞர் சீனி நெயினா முஹம்மதின் மறைவுக்கு அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தி

அப்துல் ஹபீஸ்-

லேசியாவின் தலை சிறந்த கவிஞர் சீனி நெயினா முஹம்மதின் மறைவு இஸ்லாமிய, தமிழ் இலக்கியப் பரப்பில் பாரிய வெற்றிடம் ஒன்றை ஏற்படுத்தியிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

மலேசியாவின் புகழ்பூத்த புலவர் சீனி நெய்னா முஹம்மது வியாழக்கிழமை காலமாகி, அன்னாரின் ஜனாஸா பினாங்கில் வெள்ளிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டதையடுத்து இலங்கை அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

தமிழ் இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றில் கைதேர்ந்த சீனி நெய்னா முஹம்மத் அவர்கள் புராணங்களையும், இதிகாசங்களையும், செய்யுள்களையும் நன்கு கற்றுத் தேறியவர். தொல்காப்பியம் போன்ற தொன்மையான இலக்கியங்களுக்கு கூட உரை எழுதுவதிலும், விளக்கம் அளிப்பதிலும் தமிழகத்துக்கப்பால் பெரும் பங்களிப்பு செய்தவர். உமறுப்புலவரின் சீராப்புராணத்திலும் அவருக்கு மிகுந்த தேர்ச்சி இருந்தது. 

மறைந்த கவிஞர் சீனி நெய்னா முஹம்மதுவை எனக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் மலேசியாவின் தமிழ் இலக்கியச் செம்மல் நண்பர் டத்தோ இக்பால் ஆவார். பின்னர், மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டுக்கு எங்களைச் சந்தித்து நேரடியாக அழைப்பு விடுப்பதற்கு டத்தோ இக்பால் தலைமையில், “நம்பிக்கை” ஆசிரியர் சகோதரர் பிதாவுல்லாஹ்வுடன் கவிஞர் சீனி நெயினா முஹம்மதுவும் ஓரளவு நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும் இங்கு வருகை தந்தார். அப்பொழுது “சீனி போன்று சீனி முஹம்மதாகிய நீங்களும் இனிப்பாக இருக்கின்றீர்கள்” என்று நான் அவரிடம் நகைச்சுவையாக சொன்னது நினைவிருக்கிறது. 

மாநாட்டிலும், வெளியிலும் சில தடவைகள் நாங்கள் நேரில் சந்தித்து மனம் விட்டு கதைத்திருக்கிறோம். இலக்கிய ரசனையை பகிர்ந்து கொண்டிருக்கிறோம். அவரது தமிழ் இலக்கியப் புலமையை நான் இன்றும் மெச்சுகின்றேன். அவர் இஸ்லாமிய மணங்கமழும் இலக்கித்திற்காக தன் வாழ்நாளில் பெரும்பகுதியை அர்ப்பணித்தவர்;. இறைநெறி இஸ்லாத்தோடு இரண்டறக் கலந்தவர்.

அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், மலேசிய இஸ்லாமியத் தமிழ் இலக்கிய கழகத்தினருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினரின் சார்பிலும், இலங்கை இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆரவலர்கள் சார்பிலும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரின் ஆன்ம ஈடேற்றத்திற்கும், மேலான சுவன வாழ்விற்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :