கல்விப்பொதுத் தராதர உயர் தரப்பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவன் ஒருவன் மீது நேற்று முன் தினம் பிற்பகல் வேளையில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அம்பலாங்கொடை தேவானந்த வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை மத்திய நிலையத்தில் பரீட்சை எழுதிவிட்டு வெளியேறி வீதியில் சென்றுகொண்டிருந்த தல்கஸ்கொட பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய மாணவன் ஒருவனே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பரீட்சை எழுதிவிட்டு வீடு செல்வதற்காக பஸ் தரிப்பு நிலையத்துக்கு சென்ற போது அதன் அருகில் உள்ள வீதியில் வைத்தே இந்த கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தை அடுத்து உடனடியாக குறித்த மாணவன் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
மாணவனின் இதயத்துக்கு அண்மையிலேயே கத்திக்குத்து காயங்கள் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன் நேற்றைய தினம் மாணவனுக்கு விசேட சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டு கத்தி அகற்றப்பட்டதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிட்டன.
குறித்த மாணவனுக்கு கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவரை அம்பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் பிரதான சந்தேக நபரை தேடி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் காதல் விவகாரமே கத்திக்குத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. குறித்த மாணவனும் கத்திக்குத்தை மேற்கொண்ட தரப்பை சேர்ந்த இளைஞர் ஒருவரும் ஒரே யுவதியை காதலித்துள்ளதாகவும் இதன் பிரதிபலனே கத்திக்குத்து சம்பவம் பதிவாகியுள்ளதாக விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். -வீ-

0 comments :
Post a Comment