நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்பதில் ஐ.தே.க. உறுதியாகவுள்ளது. இந்நிலையில் அரசு இம்முறைமையை நீக்க முனைந்தால் அதற்கு பூரண ஆதரவு நல்குவோம் என்று தெரிவித்த அக்கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான திகதியினை அரசு அறிவித்தால் எமது வேட்பாளர் யார் என்று கூறுவோம். அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐ.தே.க. வின் தலைமையகமான சிறி கொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்;
தற்போது ஊவா மாகாண சபை கலைக்கப்பட்டு அதற்கான வேட்பு மனுக்களை ஐ.தே.க. தாக்கல் செய்துள்ளது. இதற்கமைய ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளர் ஹரீன் பெர்னாண்டோவை களமிறக்கவுள்ளோம். இந்நிலையில் ஐ.தே.கட்சி இத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கான விசேட திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
அதேவேளை ஜனாதிபதி தேர்தலை ஜனவரி மாதமளவில் நடத்தப்போவதாக செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. அத்தோடு எதிர்க்கட்சியின் வேட்பாளர்கள் யார் என்பது தொடர்பிலும் கவனம் திரும்பியுள்ளது.
இந்நிலையில் எமது கட்சி ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை தோற்கடிப்பதற்கு தயாராகவே உள்ளது. அதற்கான வேட்பாளரை தெரிவு செய்வதில் எமது கட்சி ஏனைய அரசியல் கட்சிகளுடனும் அமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தி வருகிறது. இதற்கமைய பலமான வேட்பாளர் ஒருவரை நாம் களமிறக்குவோம்.
ஜனாதிபதி தேர்தலில் எமது வேட்பாளரை கொண்டு நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதே எமது பிரதான நோக்கமாகும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாகும் போது இம்முறைமையை நீக்குவதாக உறுதியளித்த போதும் இதுவரை நீக்கவில்லை. எனினும் இம்முறைமையை நீக்க வேண்டும் என்பதில் ஐ.தே.க. உறுதியாகவுள்ளது. எமது கட்சியி னுடைய உதவியை நாடாமல் ஜனாதிபதி முறைமையை நீக்க முடியாது. இந்நிலையில் அரசு ஜனாதிபதி முறைமையை நீக்குவதா யின் ஐ.தே.கட்சி பூரண ஆதரவு நல்கும்.

0 comments :
Post a Comment